‘ஜார்கண்ட் ஹீரோ' - பதவியை துறந்து 2,000 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரி!

By malaiarasu ece|19th Feb 2021
ஐபிஎஸ் அதிகாரியின் தன்னலமற்ற செயல்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் தன்னலமற்ற செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் உலகில், 10 ரூபாய் கிடைத்தால் கூட மற்றவர்களுக்குத் தெரியாமல் செலவு செய்யும் இந்த காலகட்டத்தில், இந்திய அரசின் 2-வது முக்கிய பணியான ஐபிஎஸ் பதவியை பொதுமக்களுக்காக உதறித்தள்ளி தொண்டு செய்யும் வாழும் கர்ணனின் உண்மை கதைதான் இது.


தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் அருண் ஓரான் என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது பதவியை கடந்த 2014-ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.


இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக (சட்டமன்ற உறுப்பினர்) மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அருண் ஓரான் கனவு இன்று வரை நிறைவேறவில்லை. ஆனாலும், தற்போது வரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரின் உயரிய லட்சியத்தை இன்னமும் ஓரான் நிறுத்தவில்லை.

ips arun

தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குத் தினந்தோறும் செய்து வருகிறார் ஓரான். பஞ்சாப் கேடரின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஓரான், கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றப்பின்னர், மாணவர்கள் பக்கம் கவனம் செலுத்தினார். ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓரன், தனது வீட்டிலே மாணவர்களுக்கு இலவசமாக பாடத்தை கற்பிக்கத் தொடங்கினார்.


தொடர்ந்து, மாணவன் ஒருவனின் வேண்டுக்கோளை ஏற்று, ராஞ்சியின் புறநகரில் உள்ள உச்சரி என்ற கிராமத்தில் ஒரு மாலைப் பள்ளியைத் (டியூசன்) தொடங்கினார். தற்போது, மொத்தம் 27 மாலைப் பள்ளிகள் ஓரோனின் வழிகாட்டுதலின் பேரில் ராஞ்சி, கும்லா மற்றும் லோஹர்டாகா கிராமங்களில் உள்ள சமூக மையங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மாணவர்களிடமிருந்து 1 ரூபாய் கூட வாங்காமல், ஓய்வுபெற்ற சில ஆசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் உட்பட சில வாழ்க்கை பாடங்களும் கற்பித்து வருகிறார். மாணவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படுகிறது.

ஓரான் பயிற்சியளித்த உள்ளூர் தன்னார்வலர்கள், மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளதைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களுக்குக் கூடுதல் அறிவையும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது தான் இந்த பள்ளியின் சிறப்பம்சம்.


தனது இந்த சேவை குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் ஓரான் கூறுகையில்,

”கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் வழக்கமாக கற்பித்தல் அல்லாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.”
ஐபிஎஸ்
”இதனால், அவர்களின் முதன்மை கடமையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாதபோது இந்த குழந்தைகள் எப்படி நாளை மருத்துவர்களாகவோ பொறியியலாளர்களாக மாறுவார்கள்?. இதனால் தான் என்னால் முடிந்த கல்வி உதவியை மாணவர்களுக்காக செய்து வருகிறேன்," என்று கூறுகிறார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, பழங்குடி குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுடன் போட்டியிட முடியாததற்கு இதுவே முக்கியக் காரணம். இதுபோன்ற அதிகாரிகள் நம்மிடையே இருப்பதால் தான் இன்னமும் மக்களிடையே மனிதம் நிலை பெற்றுள்ளது.


பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இல்லாத பல நற்குணங்கள் இதுபோன்ற சில அதிகாரிகள் கொண்டுள்ளனர். இப்படி நாட்டில் சில பேர் உள்ளததால் தான் மழை பெய்கிறது என்று சொன்னாலும் போதாது என்ற அளவிற்கு ஓரன் சேவை உள்ளது என்று அப்பகுதி மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.


தகவல் உதவி - Newindianexpress | தொகுப்பு: மலையரசு