Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

கையில் 750 ரூபாயுடன் வெற்றிபெறும் வேட்கையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல வழக்கறிஞரின் பயணம்!

வந்தனா ஷா மும்பையில் விவாகரத்து வழக்குகளை கையாளும் முன்னணி வழக்கறிஞர். அத்துடன் நூலாசிரியர் மற்றும் கட்டுரையாளர். இவர் அறிமுகப்படுத்தியுள்ள ‘டைவர்ஸ்கார்ட்’ என்கிற இந்தியாவின் சட்டம் தொடர்பான முதல் செயலி ஆன்லைனில் சட்ட ஆலோசனைகளை வழங்குகிறது.

கையில் 750 ரூபாயுடன் வெற்றிபெறும் வேட்கையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல வழக்கறிஞரின் பயணம்!

Wednesday June 05, 2019 , 4 min Read

வந்தனா ஷா அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியேறினார். கையில் வெறும் 750 ரூபாய் மட்டுமே இருந்தது. செல்வதற்கு இடமில்லை. 28 வயது நிரம்பிய இவர் தனது புகுந்த வீட்டினரின் கொடுமைகளுக்கு ஆளானார். இவர் வீட்டை விட்டு வெளியேறியபோது இனி யாரும் தன்னை கொடுமைப்படுத்த அனுமதிக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

1

வந்தனா ஷாவிற்கு விவாகரத்துக் கிடைக்க பத்தாண்டுகள் ஆனபோதும் மன உறுதியோடு நிலைமையை எதிர்கொண்டார். இவரது அப்பா இந்திய விமானப்படையில் போர் விமானியாக இருந்தார். ஆபத்து என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதைத் தெரிந்துகொண்டார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது வாழ்க்கையை முழுமையாக புரட்டிப்போட்டது மட்டுமல்லாது விவாகரத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞராக ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவியுள்ளது.

வந்தனா விவாகரத்து கோருவோருக்கான பாரபட்சமற்ற ஆதரவு அமைப்பு ஒன்றை முதன் முதலாக இந்தியாவில் உருவாக்கியுள்ளார். பெண்களுக்காக மாறுபட்ட சட்டங்களை வகுத்துள்ள நடுத்தர வர்க்க ஆணாதிக்க சமூகம் கடைப்பிடிக்கும் மரபுகளுக்கு சவால் விடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வந்தனா இந்தக் குழுவில் இணைந்துள்ளோரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 360 Degrees Back to Life – a Litigant’s Humorous Perspective on Divorce என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார்.

பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ள இந்தியாவில் விவாகரத்து என்பது சாதாரண விஷயமாகிவிட்டது என்கிறார் அவர்.

“மோசமான திருமணங்களால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியின்மையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. ஏழு நிமிடங்கள்கூட இணைந்து வாழமுடியாத துணையுடன் ஏழு ஜென்மங்கள் இணைந்திருக்கும் வழக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை,” என்றார்.

ஒரு வக்கீலாக தனது அனுபவத்தின் அடிப்படையில் சில அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்களை அவர் முன்வைக்கிறார்.

”நான் பயிற்சி செய்யும் பாந்திரா குடும்ப நீதிமன்றத்தில் 60 விவாகரத்து வழக்குகள் உள்ளன. அந்தக் கட்டிடத்தில் ஏழு மாடிகள் உள்ளன. அப்படியானால் ஒரு நாளைக்கு 420 வழக்குகள். இதுதவிர பல வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 25 வழக்குகள் மட்டுமே கையாளப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கையானது அதிர்ச்சியளிக்கிறது,” என்றார்.

விவாகரத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை

வந்தனாவிற்கு விவாகரத்து மனு அனுப்பப்பட்டபோது அவரிடம் பணியில்லை. பணம் இல்லை. மனமுடைந்து காணப்பட்டார்.

”அத்தகைய நிலையிலிருந்து நான் மெல்ல மாறினேன். பரிச்சயமில்லாத நபர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள், ஆதரவாளர்கள் போன்றோரின் உதவியுடன் அமெரிக்காவில் பணி கிடைத்தது. காரில் பயணிக்கும் அளவிற்கு வருவாய் ஈட்டமுடிந்தது. விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடிந்தது. இதனிடையில் இந்தியாவின் முதல் ஆதரவுக் குழுவை அமைத்தேன். விவாகரத்து பெற விரும்புவோருக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஆதரவளிக்க 360 Degrees Back to Life என்கிற குழுவை அமைத்தேன். இது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

”அத்துடன் என்னுடைய முதல் புத்தகத்தை எழுதவும் தூண்டியது. நான் எழுதுவேன் என்றும் என்னுடைய அனுபவங்களை மக்களிடம் பகிர்ந்துகொள்வேன் என்றும் என் கனவிலும் நான் கற்பனை செய்தது கிடையாது,” என்றார்.

இருப்பினும் பல பெண்கள் மகிழ்ச்சியற்ற திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாகவே வந்தனா கருதுகிறார்.

”மனைவியைத் தாக்குவதற்குத் தயங்காத கணவன்மார்கள் இருக்கின்றனர். மனைவிக்கு வேசி, விலைமாது போன்ற பட்டங்களை சூட்டும் ஆண்மகன்களும் இருக்கின்றனர். நானும் முன்பு இதே நிலையில் இருந்திருக்கிறேன். ஆனால் இத்தகைய பந்தத்தை விட்டு வெளியேறும் துணிச்சல் எனக்கு இருந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

விவாகரத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞராக செயல்படுதல்

வந்தனா அரசியல்வாதிகள், பாலிவுட் நட்சத்திரங்கள் என பல பிரபலங்களின் விவாகரத்து வழக்குகளை கையாண்டுள்ளார். ”க்ளையண்ட்டின் ரகசியங்களை வெளியில் பகிர்ந்துகொள்ளமுடியாது. பாலிவுட்டில் உள்ளவர்களின் நிலை வேறுபட்டது. அவர்கள் மீது எப்போதும் மக்களின் கவனம் இருந்துகொண்டே இருக்கும். விவாகரத்து வழக்குகளை கையாளும் வக்கீல்கள் க்ளையண்டுகள் வெற்றிகரமாக மீண்டு வர உதவுவதால் அவர்களது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் மக்கள் கவனத்தை பெறும் இடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரம ஏழைக்கும் பெரும் பணக்காரருக்கும் விவாரத்து என்பது உணர்ச்சி ரீதியாக கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடியது,” என்றார்.

ஆன்லைனில் சட்டரீதியான கேள்விகள்

1

மும்பையைச் சேர்ந்த இந்த வக்கீல் உலகிலேயே முதல் முறையாக டைவர்ஸ்கார்ட் (DivorceKart) என்கிற இந்தியாவின் முதல் சட்டரீதியான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். விவாகரத்து தொடர்பான அனைத்து சட்டரீதியான கேள்விகளுக்கும் பதிலளிப்பதே இந்த செயலியின் நோக்கமாகும்.

“வழக்கமாக ஒரு மோசமான திருமண பந்தத்தில் இணைந்திருப்பதாலோ அல்லது விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலோ ஒருவர் பதட்டத்தில் இருந்தால் அவருக்கு உடனடியாக குறைந்த செலவில் சட்ட ஆலோசனை தேவைப்படும். இந்த செயலி உடனடி சட்ட தீர்வுகள், நீதிமன்ற நடைமுறைகள் குறித்த வழிகாட்டல் போன்றவற்றை வழங்குகிறது. வழக்கறிஞரை சந்திக்க நேரம் கோரி நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக தவறான வழிகாட்டல்களைப் பெறவேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.

”மாற்றத்தை ஏற்படுத்த இது ஒரு துணிச்சலான முயற்சி. ஒரு க்ளையண்ட் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள். எனவே செயலியில் அவர்களது தனிப்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப்படும்,” என்றார்.

கடினமானச் சூழல்

விவாகரத்து வழக்குகளை கையாளும் வக்கீலாக பணிபுரியும்போது அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க பல்வேறு எதிர்மறையான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். இவை அனைத்திற்கும் இடையே எவ்வாறு நேர்மறையாக செயல்படுகிறார்?

”என் வாழ்க்கையை நானே கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்பதையும் என்னிடம் உள்ள நிறை குறைகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் என்னுடைய திருமண வாழ்க்கை புரியவைத்தது. ஒவ்வொரு முறை என்னை யாரேனும் அவர்களது எதிர்மறையான எண்ணங்களால் தகர்த்தெறிய முற்படும்போதும் அவர்களை நம்ப மறுத்துவிடுவேன். அத்தகைய சூழலில் இவ்வாறு விமர்சிப்பவர்களை உங்களது வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடவேண்டும்.

”கொந்தளிப்பான உணர்வுகள் நிரம்பிய நீதிமன்றங்கள் அல்லது குடும்ப நீதிமன்றங்கள் போன்ற போர்கள சூழலில் விவாகரத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞராக என்னால் நேர்மறையாக செயல்படமுடியும் எனில் நம்மில் பெரும்பாலானோரால் முடியும் அல்லவா? இது கடினமா? நிச்சயம் கடினம்தான். அலையில் எதிர்நீச்சல் போடுவது எளிது என்று யாரால் சொல்லமுடியும்?” என்றார்.

இன்று வந்தனா விவாகரத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞராக செயல்படுவதுடன் பிரபல எழுத்தாளராகவும் உள்ளார். 360 Degrees Back to Life என்கிற அவரது புத்தகம் பிரபல பெண்ணியவாதியான குளோரியா ஸ்டீனெம் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு முன்னணி கட்டுரையாளர். பிபிசி ஆவணப்படங்களில் பங்களித்துள்ளார்.

தற்போது நெட்ஃப்ளிக்ஸில் பிரபலமாகி வரும் அருணாராஜி பாடீல் இயக்கி பிரியங்கா சோப்ராவின் ’ஃபயர்பிராண்ட்’ என்கிற புதிய திரைப்படத்திற்கு வந்தனா விவாகரத்து தொடர்பான சட்ட ஆலோசகராக உள்ளார்.

Divorcekart செயலியை இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் விரிவடையச் செய்யவேண்டும் என்பது அவரது எதிர்கால திட்டமாகும்.

”நம் நாட்டிலும் சர்வதேச அளவிலும் சட்டம் குறித்த கண்ணோட்டத்தை இந்த செயலி மாற்றியமைக்கும். நான் தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்துள்ளதால் சட்ட கொள்கைகளை வகுப்பதில் ஒருநாள் நிச்சயம் பங்களிப்பேன். என் அப்பா விமானப்படையில் பைலட்டாக இருந்து சேவையளித்தார். அவரைப்போன்று நானும் சேவையளிப்பேன். வெப்தொடர் மற்றும் இதர மல்டிமீடியாக்கள் வாயிலாக வழக்கறிஞர் அல்லாதவர்களும் எளிதாக சட்டத்தை அணுக உதவுவேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா