‘கொரோனா சவாலை எதிர்கொள்ள மறு சிந்தனை தேவை’– டாடா சன்ஸ் சந்திரசேகரன்

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமாக உழைக்க வேண்டும் என்கிறார் சந்திரசேகரன்.

‘கொரோனா சவாலை எதிர்கொள்ள மறு சிந்தனை தேவை’– டாடா சன்ஸ் சந்திரசேகரன்

Thursday August 06, 2020,

3 min Read

ஜுகாத், சிறு திருத்தங்கள் மற்றும் புதிய தந்திரங்கள் சமகால இந்தியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க போதுமானதல்ல என்றும், கொரோனாவுக்கு பிந்தைய உலகில், இந்தியா மொத்த பொருளாதாரத்தையும் மறு சிந்தனைக்குள்ளாக்கி மாற்றி அமைக்க வேண்டும் என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

டாடா சன்ஸ் சந்திரசேகரன்

பட உதவி: Financial Express

விநியோகச் சங்கிலியில் (சப்ளை செயின்) ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என சீனாவை நேரடியாக சுட்டிக்காட்டாமல் குறிப்பிட்ட சந்திரசேகரன்,

உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக்கொண்டால் இந்தியா இதில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்தார்.

110 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கும் சந்திரசேகரன், ஒவ்வொரு பெருத்தொற்றும் மேம்பட்ட மாற்றத்திற்கான வாய்ப்பை அளிப்பதாகக் கூறியதோடு, 1920ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல், சமூகங்கள் ஒன்றினைந்து சுதந்திரம் பெற்றதை சுட்டிக்காட்டினார்.

“காத்திருக்கும் சவால்கள் பிரம்மாண்டமானவை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நூற்றாண்டுக்கு முன், மோசமான பெருந்தொற்றின் சாம்பலில் இருந்து, அரசியல் புரட்சி உண்டானது. மோசமான நெருக்கடி தனக்குள் மிக்கபெரிய மாற்றத்திற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கும் என்பது தான் பெருந்தொற்றுகள் கற்றுத்தரும் பாடம். அதே போல் இன்று நாமும் துணிச்சலுடன் இருந்தால், புதிய வாழ்க்கை முறையை கற்பனை செய்யலாம்,” என்று 26வது லலித் தோஷி உரை ஆற்றும் போது அவர் கூறினார்.

சுகாதாரம் மற்றும் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான உந்துசக்தியாக கொரோனா அமையும் என்றும், கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருந்தும் வென்சர் முதலீடு செய்திராத மாற்றத்தை உண்டாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


மனிதவள ஆற்றலின் காரணமாக, தான் கற்பனை செய்யும் புதிய இந்தியா ஆராய்ச்சி- மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலையில் திகழ் முடியும் என்றும், ஆனால் இதற்கு அடிப்படையில் இருந்து சரியான முதலீடு தேவை என்று அவர் கூறினார்.

டிஜிட்டல்மயமாக்கல் மற்றும், சுகாதாரம், கல்வியில் கவனம் ஆகியவற்றில் இந்த முதலீடு அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இவற்றின் பலன், விவசாயம், நிதிச்சேவை, ரீடைல் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார். இதற்காக, நம்முடைய மொத்த பொருளாதாரத்தையும் நம்முடைய குறிப்பிட்ட தேவைகளுக்காக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உள்கட்டமைப்பு, கட்டுப்பாடுகள், தனியார் துறை மீது அதிகார அமைப்பின் சுமை மற்றும் முதலீடுகள் ஆகியவை முக்கிய அம்சங்கள் என்று கூறியவர், பெண்கள் மற்றும் சுறு தொழில்கள் மீது சிறப்பு கவனம் தேவை என்றார். உள்ளூர் வர்த்தகச் சேவைகளை தொகுத்தளிக்கும் தேசிய மேடை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.


எரிபொருள் துறையிலும் புதுமையாக்கம் தேவை என்று குறிப்பிட்டவர், மறுசுழற்சி ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். வேலைவாய்ப்புகள் மற்றும் அணுகல் வசதி ஆகியவை இந்தியா தீர்வு காண வேண்டிய இரண்டு சவால்கள் என்று கூறியவர், இவற்றுக்கு எந்த குறுக்கு வழிகளும் இல்லை என்றார்.

“ஜுகாத், சிறு திருத்தங்கள் மற்றும் தந்திரங்கள் நம்மை கொஞ்ச தூரம் தான் அழைத்துச்செல்லும். இந்தியாவின் தேவைகளை நிறைவேற்ற நாம் கடினமாக உழைக்க வேண்டும்,” என்றார்.

கடந்த சில மாதங்கள் நம் சமூகத்தின் மோசமான பாதிப்புகளை உணர்த்தியுள்ளன என்றும், ஒரு சில உயிர்கள் எந்த அளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதையும் உணர முடிந்ததாக குறிப்பிட்டவர் இந்தியர்கள் அடிப்படை விஷயங்களுக்குக் கூட பெரும்பாடு பட வேண்டியிருந்ததை சுட்டிக்காட்டினார்.


கிராமவாசி ஒருவர் டாக்டரை பார்க்க பல மைல்கள் நடந்து சென்றதையும், பட்டதாரிகள் சாதாரண வேலைக்கு வரிசையில் காத்திருப்பதையும் சுட்டிக்காட்டியவர், ஒரு முயற்சி வெற்றியடையும் போது அதன் கஷ்டங்கள் மறக்கப்பட்டு விடுவதாகவும், பெரும் சோதனைகளுக்கு பிறகு சவால்களை எதிர்கொண்ட பிறகு, அவை சாதாரணமாக தோன்றுவதாகவும், இதுவும் ஒரு குறைபாடு தான் என்று தெரிவித்தார்.

“கடந்த சில மாதங்கள் நாடு எதிர்கொண்ட மிகவும் சவாலான காலங்களில் ஒன்றாகும். ஆனால் சரியான உத்வேகம் இருந்தால் பின்னடைவை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சந்திரசேகரன், தூய்மையான குடிநீர், தரமான கல்வி, தடையில்லா மின்சக்தி, அனைவருக்குமான சுகாதாரம் ஆகியவற்றை நாம் வழங்க வேண்டும் என்றும் இது நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் என்றும் தெரிவித்தார்,


புதிய கல்வி கொள்கையின் முழு ஆவணத்தை படிக்கவில்லை என்பதால் அது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.


ஆதாரம்: பிடிஐ