‘நிதி திரட்டுவது எப்படி என நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்’ - TechSparks-இல் Kalaari Capital முதலீட்டாளர் வாணி கோலா!

By YS TEAM TAMIL
November 14, 2022, Updated on : Wed Nov 16 2022 05:34:00 GMT+0000
‘நிதி திரட்டுவது எப்படி என நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்’ - TechSparks-இல் Kalaari Capital முதலீட்டாளர் வாணி கோலா!
யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2022 நிகழ்வில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றை எதிர்கொள்வது பற்றியும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார் Kalaari Capital நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வாணி கோலா.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பெங்களூருவைச் சேர்ந்த Kalaari Capital நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வாணி கோலாவிற்கு அறிமுகமே தேவையில்லை. இவர் அந்த அளவிற்கு ஸ்டார்ட் அப் உலகில் பிரபலமானவர்.


யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2022 நிகழ்வின் இரண்டாம் நாளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

vani kola

இதுபற்றிய பேச்சைத் தொடங்கியபோது வாணி பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்விற்கு நீங்கள் பயணித்து வந்த வழியில் ஏதேனும் பள்ளத்தை எதிர்கொண்டீர்களா? இதுதான் அந்தக் கேள்வி.

“நிச்சயம் ஒரு பள்ளத்தையாவது கடந்துதான் இந்த நிகழ்விற்கு வந்திருப்பீர்கள். ஆனால், அந்தப் பள்ளம் நீங்கள் இந்த இடத்தை வந்தடைய தடையாக இல்லை, அப்படித்தானே?” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார்.

நம்பிக்கையான அணுகுமுறையும் தர்க்கரீதியான அணுகுமுறையும் கொண்ட வாணி, பெங்களூருவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையும் என நம்பிக்கை தெரிவித்தார். பங்குச்சந்தையில் நுழைவதற்கான முன்னெடுப்பில் வரக்கூடிய இடர்பாடுகளையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் விரிவாக விவாதித்தார்.


நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழையும் முயற்சியில் பின்னடைவுகள் என்பது முக்கியமான பகுதி என்கிறார் வாணி.

“அதற்கு எத்தனை வேகமாக நீங்கள் ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டம் முக்கியம்தான் என்றாலும் ஒரே மாதிரியான இரண்டு வணிக யோசனைகள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு வழிகளில் வெற்றியடைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

”வாய்ப்புகளில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இது முக்கியம்தான். ஆனால், பின்னடைவுகளை கையாண்டதுதான் என்னுடைய மிகப்பெரிய பலம் என்று நிறுவனர்கள் சொல்லி நான் அதிகம் கேட்டதில்லை,” என்று தெரிவித்தார்.

வாணியைப் பொறுத்தவரை ஒரு யோசனையின் பலமும் தொழில்முனைவரின் பேரார்வமும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதற்குக் காரணம், அவர்களது பாதையில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும் மிகப்பெரிய காரணிகளாக இவை இருக்கின்றன. மதிப்பீடு என்பதில் வாணிக்கு பெரிதாக உடன்பாடு இல்லை.

“மதிப்பீடு என்பது நோக்கத்திலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது. ஒரு நிறுவனர் எந்த காரணத்தை முன்னிறுத்தி நிறுவனத்தைத் தொடங்கினாரோ அதிலிருந்து விலகியிருக்க செய்துவிடுவதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்,” என்றார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது,

“உங்கள் நிறுவனத்தின் மதிப்பு என்ன என்பதே தவறான கேள்வி. வணிக யோசனையின் வளர்ச்சியும் வாய்ப்புகளும்தான் அவற்றால் ஏற்படக்கூடிய தாக்கமும்தான் முக்கியம். நிதி திரட்டி மென்மேலும் சிறப்பாக உருவாக்கிக்கொண்டே இருங்கள்,” என்கிறார்.

திட்டமிடல்

நிறுவனர்கள் எதிர்பாராத சூழலை சந்திப்பது குறித்தும் முறையாக திட்டமிடவேண்டியதன் அவசியத்தை வாணி வலியுறுத்தினார். பொதுவாக நிறுவனர்கள் மிகச்சிறந்த சூழல்களுக்கு மட்டுமே ஆயத்தமாகி இருப்பது வழக்கம். வெகு சிலர் மட்டுமே மோசமான சூழல்களையும் கருத்தில் கொள்வார்கள்.

“மோசமான சூழலை எதிர்கொள்வதற்கு தக்கபடி ஆயத்தமாவதும் ஒரு நிறுவனரின் பொறுப்புதான்,” என்கிறார் வாணி.

நிறுவனர்கள் மோசமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். தலைமைத்துவத்திற்கு இது முக்கியமானது என்கிறார். நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளில் இதை சேர்த்தால் வெற்றியை நிலைநாட்டமுடியும் என்கிறார்.

சோர்வை கையாள்வது முக்கியம்

நிறுவனர்கள் நீண்ட காலத்திற்கு வணிக செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். நிறுவனர்கள் தங்களையும் தங்களது வணிக யோசனையையும் நிரூபித்துக்காட்ட அவகாசம் எடுக்கும்.

“நீடித்திருப்பது முக்கியம். ஆனால், சோர்ந்துவிடக்கூடாது. தளராத நம்பிக்கையுடன் நீடித்திருக்கவேண்டும்,” என்கிறார்.

நிதி திரட்டும் திறன்

“நிதி திரட்டுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். முதலீட்டாளர்கள் உங்களை அணுகுவார்கள், ஆனால் காசோலை வந்து குவிந்துவிடும் என்பது இதற்கு அர்த்தமல்ல,” என்கிறார் வாணி.

ஒரு நிறுவனர் சிறப்பாக செயல்பட்டால் முதலீட்டாளர்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்கள் என்பதெல்லாம் தவறான கருத்தாக்கமே என்கிறார் வாணி.


நிதி திரட்டுவது நிறுவனரின் பொறுப்புதான் என்றும் அதை அவர்கள் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

”ஒரு விஷயத்தை எப்படியாவது செய்தாகவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டோமானால் நிச்சயம் முடியும்,” என்கிற நம்பிக்கை வரிகளை உதிர்க்கிறார் வாணி கோலா.

ஆங்கில கட்டுரையாளர்: ராஜீவ் புவா | தமிழில்: ஸ்ரீவித்யா