படிப்பை பாதியில் விட்டாலும் கடின உழைப்பால் ஐடி நிறுவனத்தை கட்டமைத்து காஷ்மீர் இளைஞர்!

800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பகுதியில் பயிற்சியளித்துள்ள ஷேக் ஆசிஃப் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
638 CLAPS
0

ஷேக் ஆசிஃப் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பாட்டமலூ பகுதியைச் சேர்ந்தவர். நன்றாகப் படிப்பார், புத்திசாலி மாணவன். ஆனால் குடும்பம் வறுமையில் இருந்தது. மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காஷ்மீரில் இருந்த ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். ஆறு ஆண்டுகள் வரை அங்கு வேலை செய்தார்.

”2016-ம் ஆண்டு யூகே செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கூகுள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை சந்தித்தேன். Thames Infotech என்கிற வெப் டிசைனிங் நிறுவனத்தை அமைக்க அவர் எனக்கு உதவி செய்தார்,” என்கிறார் ஷேக்.

இன்று தன் கடின உழைப்பால் தொழில்முனைவராக உருவெடுத்துள்ள ஷேக் ஆசிஃப் யூகே-வைச் சேர்ந்த Thames Infotech சிஇஓ மற்றும் நிறுவனர்.

ஆரம்ப நாட்கள்

“2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை என் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். குடும்பப் பொறுப்பை சுமக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வெவ்வேறு வேலைகள் செய்து வந்தேன்,” என்கிறார் ஷேக்.

வெப் டிசைனிங், கிராஃபிக்ஸ் இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து அதைக் கற்றுக்கொண்டே இருந்தார். எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தபோதும் இதில் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

”2014ம் ஆண்டு தொழில் முயற்சியைத் தொடங்கத் தேவையான பணத்தைத் தயாராக வைத்திருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் காஷ்மீரில் வெள்ளப் பாதிப்பு அதிகம் இருந்தது. இதனால் திட்டமிட்டபடி தொழில் தொடங்க முடியவில்லை. வேலை தேட ஆரம்பித்தேன்,” என்கிறார்.

ஷேக் வேலை தேடி காஷ்மீரில் இருந்து டெல்லி வரை சென்றார். பிறகு டெல்லியில் இருந்து லண்டன் சென்றார்.

ஐடி பிரிவில் ஆர்வம் ஏற்படுத்துகிறார்

2018ம் ஆண்டு ஷேக் காஷ்மீர் திரும்பினார். ஐடி பிரிவில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது.

“நான் காஷ்மீர் திரும்பியதும் வெப் டிசைனிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்க நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன்,” என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் இருக்கும் இளைஞர்களிடையே ஐடி பிரிவில் ஆர்வத்தை ஏற்படுத்த ஆரம்பித்தார். வெப் டிசைனிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார்.

ஷேக் இதுவரை உலகம் முழுவதும் உள்ள 800 மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொடுத்துள்ளார்.

மற்ற செயல்பாடுகள் மற்றும் அங்கீகாரம்

லோகோ, கிராஃபிக்ஸ், மொபைல் செயலி என எண்ணற்ற வலைதளங்களை ஷேக் வடிவமைத்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஷேக் விவசாயிகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினார். இதற்காக ‘Listen to Me’ என்கிற மொபைல் செயலியை உருவாக்கினார்.

“மூன்று மாதங்களுக்குள்ளாகவே நூறு பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தார்கள்,” என்று ஷேக் குறிப்பிட்டார்.

Digitization in Business, Online Business Ideas, Start a Business என மூன்று புத்தகங்களை ஷேக் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே சிறந்த வெப் டிசைனர் விருது வென்றுள்ள நிலையில் சமீபத்தில் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு ஷேக் ஆசிஃபின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“பெற்றோர் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல் படிப்புகளை மட்டுமே படிக்க வைக்கக்கூடாது. அவர்களது மனநிலை மாறவேண்டும். சமூகத்தின் நிலையை மேம்படுத்த மற்ற பிரிவிலும் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும். குழந்தைகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும்,” என்கிறார் ஷேக்.

ஆங்கில கட்டுரையாளர்: இர்ஃபான் அமீன் மாலிக் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world