10ம் வகுப்புத் தேர்வில் எல்லா பாடத்திலும் ‘ஏ பிளஸ்' - பழங்குடி சிறுவனின் சாதனை!

ஆன்லைன் கல்வி சிக்கலுக்கு மத்தியிலும் வெற்றிகண்ட சிறுவன் நகுல்!
10 CLAPS
0

கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பழங்குடி இனம் மலவெட்டுவன். வேட்டைக்காரர்களின் சமூகமாக அறியப்படும் இந்த சமூகம் கேரளாவின் மிகவும் பின்தங்கிய சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நகுல்.

கொரோனா காரணமாக, தனது படிப்பை மேற்கொள்ள ஏராளமான சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. இன்டர்நெட் இணைப்பு முதல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, மற்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற ஆன்லைன் கல்விக்கு உகந்த சாதனங்கள் இல்லாதது என இப்படி நிறைய சிக்கல்களை இந்த கொரோனா காலத்தில் எதிர்கொண்டார்.

சவால்கள் இருந்தபோதிலும், அதனை மீறி படிப்பை தொடர்ந்திருக்கிறார். தற்போது கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நகுல் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?

அனைத்து பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ பெற்று சாதனை படைத்திருக்கிறார் நகுல். இந்த சாதனை தற்போது இவர் வசிக்கும் கல்லியோட்டு பழங்குடி காலனியில் உள்ள அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த சாதனை குறித்து, மலவெட்டுவன் சமூகத்தின் தலைவரும், நகுலின் தந்தையுமான நாராயணன்,

"எங்கள் குக்கிராமத்தில் இரண்டு அரசு ஊழியர்கள் உள்ளனர், நானும் என் குழந்தைகள் அரசாங்க வேலைகளைப் பெற விரும்பினேன். ஆரம்ப பள்ளி வகுப்புகளிலிருந்தே நகுல் படிப்பில் சுட்டி. ஆசிரியர்கள் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறி அவனை ஊக்குவித்தனர். நகுல் எனது மூன்று குழந்தைகளில் இளையவர். எனது மகள்கள் இருவரும் பிளஸ் டூ படிப்பை முடித்துவிட்டார்கள்," என்று பெருமைமிகுதியாக கூறியுள்ளார்.

இந்த நாராயணன் தற்போது பண்ணையில் வேலை செய்கிறார். அதேபோல் நகுல் தாய் மாம்பி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பணிபுரிந்து வருகிறார். நகுல் கொரோனா காலகட்டத்தில் பள்ளி மூடப்பட, பாடத்தில் சந்தேகம் நேர்ந்தால் அவரது ஆசிரியரை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, தீர்த்துகொண்டுள்ளார். அவர் பின்தங்கிய பகுதியில் இருப்பதை அறிந்து ஆசிரியர்களும், நகுல் படிப்புக்கு நிறைய உதவியுள்ளனர்.

நகுல் இது தொடர்பாக பேசுகையில்,

“எங்களிடம் ஒரே ஒரு போன் மட்டுமே இருந்தது. அதையும் நான் என் சகோதரியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. மொழி சிக்கல்கள் காரணமாக KITE-VICTERS சேனலால் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வகுப்புகளை எங்களால் பின்பற்ற முடியவில்லை. இதனால், எங்கள் ஆசிரியர்களிடம் வாட்ஸ்அப் மூலம் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டேன். நெட்வொர்க் இணைப்பு குறைவாக இருப்பதால் குறிப்புகளைப் பதிவிறக்குவது ஒரு போராட்டமாக இருந்தது. இருந்தாலும் என் சகோதரிகள் நமீதாவும் நிகிதாவும் எனக்கு நிறைய உதவினார்கள்," என்று கூறியிருக்கிறார்.

மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து இந்த சாதனை நிகழ்த்தியுள்ள நகுலுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது!

கட்டுரை: Think change India | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world