கொரோனாவால் மறைந்த தத்ரூப ஓவியங்களின் அரசன்: யார் இந்த இளையராஜா?

கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய இறப்பு!
2 CLAPS
0

தமிழகத்தில் இருக்கும் கலைஞர்கள் மத்தியில் நேற்று சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஓவியர் இளையராஜாவின் மரணம் தான். தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் இந்த இளையராஜா. இன்னும் சொல்லப்போனால் இவரின் ஓவியமா அல்லது புகைப்படமா எனக் கேட்கும் வகையில் தத்ரூபமாக இருக்கும். இதனால் தத்ரூப ஓவியங்களின் அரசன் எனப் புகழப்படுகிறார்.

கும்பகோணம் அருகே இருக்கும் செம்பியவரம்பல் எனும் கிராமம் அவரின் ஊர். ஐந்து சகோதரர்கள், சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசி பையன் இளையராஜா.

கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு படித்தார். அப்போது இருந்தே அவருக்கு ஓவியத்தின் மீது ஆர்வம். அது கல்லூரி காலகட்டத்தில் இன்னும் அதிகமானது. ஓவியத்தின் மீதான ஆர்வத்தின் காரணமக கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பை முடித்தார்.

அப்போது இளையராஜாவின் ஓவிய ஆசிரியராக இருந்தவர் ஓவியர் மனோகரன். இவர் தான் இளையராஜா ஓவியக் கல்லூரியில் சேர பயிற்சி கொடுத்தவர். கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தான் இளையராஜாவை ஓவியர் மனோகரனிடம் அறிமுகப்படுத்த, அதன்படி பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது இளையராஜாவுடன் சேர்ந்து பல மாணவர்கள் பயின்றுள்ளனர்.

ஆனால் சேர்ந்த ஒருவாரத்திலேயே தன்னோடு பயிலும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் கற்றுத் தேர்ந்துள்ளார். அந்தளவுக்கு அதீத திறமை கொண்டவர். ஆரம்பத்தில், உள்ளூர் அளவில் இருந்த அவரின் திறமை, தமிழகத்தின் முன்னணி வார இதழில் வெளிவந்தபிறகு உலக புகழ்பெற ஆரம்பித்தன.

2010 முதல் இவரின் ஓவியம் உலக அளவில் தெரியவந்தன. இதனால் பல்வேறு வெளிநாடுகளில் வெளிமாநிலங்களில் சென்று தனது படைப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார் இளையராஜா.

இந்தநிலையில், சில நாட்கள் முன் தனது அக்கா மகன் திருமணத்திற்காக சொந்த ஊர் சென்று திரும்பியவருக்கு சளி தொற்று ஏற்பட்டுள்ளது. சொந்த ஊரில் குளத்தில் குளித்ததால் தான் சளி ஏற்பட்டிருக்கிறது என்று மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்டிருக்கிறார். ஆனால், சளி குளத்தில் குளித்தால் வரவில்லை. கொரோனா தொற்று அவருக்கு இருந்துள்ளது.

திருமணத்துக்கு சென்றிருந்த அவரது குடும்பத்தினருக்கு பலருக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது அதன்பின்பு தான் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, தான் சில நாட்கள் முன் இளையராஜாவுக்கு கொரோனா தொற்றின் காரணமாக மூச்சடைப்பு ஏற்பட, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று நுரையீரல் முழுக்கப் பரவ, மாரடைப்பு ஏற்பட்டுமரணம் அடைந்துள்ளார். இவரின் மறைவு பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இளையராஜா வரைந்த ‘திராவிடப் பெண்கள்' ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. தமிழகத்தின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் தத்ரூபமாக வரைவதில் இவர் கில்லாடி. சமைக்கும் பெண், பூ கட்டும் பெண், ஜன்னலில் வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத் தத்ரூபமாக வரைந்த அவரின் ஓவியங்கள் புகழடைந்தவை.

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜா மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!. கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!" என்றுள்ளார்.

Latest

Updates from around the world