தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்கள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!
2 CLAPS
0

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25ல் ஏற்படுத்தப்பட்டது மாநில திட்டக் குழு. இந்தக் குழுவின் பணி, தமிழக முதல்வராக இருக்கும் நபரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் வளர்ச்சி குறித்த செயல்பாடுகளில் விரிவான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக வளர்ச்சி சார்ந்த முக்கியத் துறைகளின் நிபுணர்கள் பலர் இடம்பெறுவர். இவர்கள் மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் தமிழக முதல்வரின் மேற்பார்வையில் இயங்குவார்கள். இப்படிப்பட்ட மாநில திட்டக் குழு, கடந்த 2020-ல் 'மாநில வளர்ச்சி கொள்கைக் குழு' எனப் பெயர் மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பலவிதமான முக்கியப் பணிகளை செய்து வருகிறது.

இதற்கிடையே, புதிதாக தலைமையேற்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தற்போது மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. தமிழக அரசின் புதிய உத்தரவின்படி, இந்தக் குழுவில் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பேராசிரியர். ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினர், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட மேலும் சிலர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயரஞ்சன், சுல்தான் இஸ்மாயில், நர்தகி நடராஜ் மற்றும் சிவராமன்

இந்நிலையில், இந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக திருநங்கை நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

எந்தமுறையும் இல்லாமல் இந்தமுறை இந்த குழு உறுப்பினர்களாக பல துறையைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை நியமித்து அசத்தியுள்ளார்.

அதன்படி, அனைத்து பிரிவினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில், மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் உடன் மூன்றாம் பாலினத்தவர் சார்பாக திருநங்கை நர்த்தகி நடராஜனும் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு திருநங்கைகள் சமூகம் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். 

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

1.ஜெயரஞ்சன் - வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர். தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பொருளாதர மாற்றங்கள் குறித்து கடந்த 35 ஆண்டுகளாக 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். பொருளாதாரம் குறித்த ஆழமான அலசல்களை எளிமையான முறையில் அவ்வப்போது ஊடகங்கள் வழங்கி வருவதால் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் பரிட்சயமான நபராக இருக்கிறார்.

2.மல்லிகா ஸ்ரீநிவாசன்: பிரபல நிறுவனமான TAFE டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் தான் இந்த மல்லிகா ஸ்ரீநிவாசன். இவரை சமீபத்தில் மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக நியமித்தது.

3.பேராசிரியர் ராம.சீனிவாசன்: சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் இந்த ராம.சீனிவாசன். இவர் ஏற்கனவே 2006 - 2011 திமுக ஆட்சியிலும் தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இப்போது பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4.மருத்துவர் கு.சிவராமன்: தமிழக மக்களுக்கு பலருக்கும் பரிட்சியமான ஒருவர் இந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வை கொண்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சேவை செய்து வரும் இவர் அழிந்துக்கொண்டு இருக்கும் சிறுதானிய பயன்பாட்டை மக்கள் மத்தியில் மீண்டும் உயிர்ப்பித்ததில் பெரும் பங்குண்டு.

5.சுல்தான் இஸ்மாயில்: விலங்கியல் துறை பேராசிரியரான இஸ்மாயில், மண்ணியல் உயிரியலாளர் என்று விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். இவர், மக்கும் கழிவுகளை மறுசுழற்சி நுட்பங்கள் மூலம் உரமாக மாற்றி மண்வளத்தை பெருக்குவது குறித்து கண்டறிந்து அதனை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்த்தவர்.

6.தீனபந்து: இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றர் தீனபந்து தான். இவர் ஓய்வு பெற்றுவிட்டாலும், இவர் பணியில் இருக்கும் மேற்கொண்ட கல்வி உதவித் தொகை திட்டம், ராமநாதபுரம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் போன்றவற்றால் அதிகம் பெயர்பெற்ற நபர். இவர் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையின் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

7.ம.விஜயபாஸ்கர்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, ஐநா சமூக வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆலோசகராக இருந்த அனுபவம் இவருக்கு உண்டு. பல புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியவர்.

8.ஜோ.அமலோற்பவ நாதன்: தமிழக அரசு நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் இந்த அமலோற்பவ நாதன். இவர் தமிழகத்தில் மனித உடல் உறுப்பு மாற்ற திட்ட செயலாக்கத்தின் முக்கிய நபராக பணியாற்றியவர். மேலும் பிரபல ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரும்கூட.

9.டி.ஆர்.பி.ராஜா: டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன். இந்த முறை இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் குழுவில் உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

10. நர்த்தகி நட்ராஜ்: நாட்டியக் கலைஞர். நடனக் கலைஞரான நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். தமிழகத்தின் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது.

இதைவிட இன்னொரு சுவாரஸ்யம் உள்ளது. மதுரையைச் சேர்ந்தவரான நர்த்தகி நடராஜ் தான் முதன் முதலில் திருநங்கை என்ற சொல்லை பயன்படுத்தினார். அதன்பிறகே, இதை கேள்விப்பட்ட அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, திருநங்கை என்ற சொல்லையே மாற்று பாலினத்தவரை குறிக்க பயன்படுத்த வேண்டும் என்று அரசாணையாக பிறப்பித்தார்.

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world