மூன்று குழந்தைகள் கொள்கைக்கு சீனா மாறியது ஏன் என்று தெரியுமா?

திருமணமான தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு அண்மையில் அறிவித்துள்ளது, மக்கள் தொகை அமைப்பில் அந்நாடு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது.
0 CLAPS
0

இரண்டு குழந்தைகள் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீனா, அதைத் தளர்த்தி தம்பதியர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கும் செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம்.

கடந்த வாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த செய்தி, குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான கொள்கையில் சீன அரசு மாற்றம் செய்திருப்பதை உணர்த்துவதோடு, அந்நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளையும் அடையாளம் காட்டுவதாக அமைவது தான் உண்மையில் கவனத்திற்கு உரியது.

குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருப்பது சீன மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு மாறாக, இந்த அறிவிப்பு சீனாவில் குழப்பத்தையும், விவாதத்தையுமே ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான பின்னணியை பார்க்கலாம்.

ஒரு குழந்தை கொள்கை

பரவலாக அறியப்பட்டது போல, கம்யூனிச சீனா, 1980ம் ஆண்டு ஒரு குழந்தைக் கொள்கையை அறிவித்தது. மணமான தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள இந்த கட்டுப்பாடு வழிவகுத்தது.

டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிபராக இருந்த போது, இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை 100 கோடியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் எனும் அச்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் கட்டுப்பாட்டை சீன அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. கடுமையாக செயல்படுத்தியதாகவும் புகார்கள் உண்டு. குறிப்பாக நகர்புறங்களில் இந்த கட்டுப்பாடு தீவிரமாக இருந்தது.

கடும் கட்டுப்பாடுகள்

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்ட தம்பதியருக்கு அபாராதம் விதிக்கப்பட்டதோடு, கட்டாய கருக்கலைப்புக்கும் உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக ஏழைகளுக்கு பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் கருதப்பட்டது.

அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு பொருளாதார நோக்கில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. சீன மக்கள் இந்த கட்டுப்பாட்டை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்ட நிலையில், அரசு தரப்பில் இந்த கொள்கை வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு குழந்தை கொள்கை மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததோடு, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடிந்ததாகவும் சீன அரசு தரப்பில் பெருமிதத்தோடு தெரிவித்து வந்தது.

ஆனால், பத்து ஆண்டுக்கு பிறகு நிலைமை மெல்ல மாறியது. ஒரு குழந்தை கொள்கையால் சீன மக்கள் தொகை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. ஒரு குழந்தைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், சீன சமூகத்தில் பெண்கள் விகிதத்தை விட ஆண்கள் விகிதம் அதிகமானது.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கும் பழக்கம் சீன சமூகத்திலும் இருப்பதால், ஒரு குழந்தை கொள்கையால் பெண் குழந்தை பிறப்பு விகிதம் பாதிக்கப்பட்டது. பெண் சிசுக்கொலைகள் அதிகரித்ததோடு, பெண் குழந்தைகள், காப்பகத்தில் விடப்படுவதும் அதிகரித்தது.

மக்கள் தொகை பாதிப்பு

மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது சீன மக்கள் தொகை மிகவும் வேகமாக வயோதிகத்தை அடையவும் இது வழிவகுத்ததாக வல்லுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில் இளம் வயதினரைவிட வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உண்டானது.

மக்கள் தொகையில் இளம் வயதினர் குறைவாக இருப்பது, பொருளாதார நோக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கடந்த 2016ம் ஆண்டு சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.

ஆனால், இரண்டு குழந்தைகள் கொள்கையால் சீன மக்கள் தொகை அமைப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்று கருதப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் சீன அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது.

சீனாவின் மக்கள் தொகை 141.2 கோடியாக இருந்தாலும், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குழந்தை பிறப்பு விகிதம் எதிர்மறையாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் 1.20 கோடி குழந்தைகள் பிறந்தன. அதற்கு முந்தைய ஆண்டு 1.465 கோடி குழந்தைகள் பிறந்தன. இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால்,

குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்திருப்பதோடு, கருத்தரித்தல் விகிதமும் 1.3 ஆக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மக்கள் தொகை அமைப்பை தக்க வைத்துக்கொள்ள, இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

கொள்கை மாற்றம்

இதே நிலை நீடித்தால், மக்கள் தொகை அமைப்பின் காரணமாக சீனா எதிர்காலத்தில் பலவித சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம் எனக் கூறப்படுகிறது. இளம் வயதினர் விகிதம் குறைவாக இருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கலாம் என்பதோடு, வயதானவர்கள் விகிதம் அதிகமாக இருப்பது, பென்ஷன் போன்றவற்றில் சுமையை ஏற்படுத்தலாம் எனும் அஞ்சப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தான் சீன அரசு, தற்போது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை எந்த அளவு பயனளிக்கும் என்பது தெரியவில்லை என வல்லுனர்கள் கூறுகின்றனர். கருத்தரித்தல் விகிதம் குறைவாக இருப்பதால் உடனடியாக இதை மாற்றி விட முடியாது என்று கருதப்படுகிறது.

இதனால், சமூக நோக்கிலான பாதிப்பும் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது,. ஏற்கனவே பணியிடங்களில் பெண்களின் பிரதிநித்துவம் குறைவாக உள்ள நிலையில், மூன்று குழந்தைகள் கொள்கை காரணமாக, எதிர்காலத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு சவாலாகலாம் என்றும் வாதிடப்படுகிறது.

பணியில் இருக்கும் பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இருக்கும் கட்டுப்பாடுகளும் பெரும் சிக்கலாக சொல்லப்படுகிறது. இதனிடையே ஒரு குழந்தை கொள்கை நீண்ட காலமாக அமலில் இருந்ததால் பலரும் அதற்கு பழகிவிட்டதாகவும், அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் பலருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

புதிய சவால்கள்

இளம் வயதினர் குறைந்த எண்ணிக்கையிலேயே பணிச் சூழலில் இணைவதற்கான வாய்ப்புள்ள நிலையில், அதிக வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மக்கள் தொகை விகிதம் குறையத்துவங்கியிருப்பது சீனாவில் மட்டும் பிரச்சனையாக இல்லை, ஆசிய நாடுகள் பலவற்றிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. வளர்ந்த நாடுகள் பல இந்த நிலையை எதிர்கொண்டுள்ளன.

எனவே தான், மூன்று குழந்தைகளை அனுமதிக்கும் அறிவிப்பால் மட்டும் சீனாவில் உடனடியாக மக்கள் தொகை அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்று கருதுகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் இளம் தலைமுறையினர் அதிகம் இருப்பது சாதகமான அம்சமாக கருதப்படும் நிலையில், சீனா வயதாகும் மக்கள் தொகையின் சவாலை எதிர்கொள்ள போராடி வருகிறது.

 

Latest

Updates from around the world