1 லட்சம் முதலீட்டில் ரூ.300 கோடி நிறுவனத்தை உருவாக்கிய கொல்கத்தா தொழில் முனைவர்!

சமையலறை சார்ந்த தீர்வுகளை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் குட்சினா ஹோம் மேக்கர்ஸ் நிறுவனத்தை துவக்கிய நமீத் பெஜோரியா, ரூ.300 கோடி வருவாய் ஈட்டும் நிலைக்கு நிறுவனத்தை வளர்த்திருக்கிறார்.
1 CLAP
0

பாரம்பரிய மார்வாரி குடும்பத்தைச்சேர்ந்தவரான நமீத் பெஜோரியா, சொந்த நிறுவனத்தை துவக்குவதற்கான ஊக்கம் கொண்டார். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிலேயே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்துவங்கினார்.

1994ம் ஆண்டு, தனது 23வது வயதில் அவர் தந்தையிடம் இருந்து ரூ.1.30 லட்சம் கடன் பெறு பேக்ஸ் இயந்திர ஏஜென்சியை துவக்கினார். பின்னர் நுகர்வோர் போக்கை உணர்ந்து, சமையலறை தீர்வுகளை ஒரே இடத்தில் அளிக்கும் வர்த்தகத்திற்கு மாறினார்.

2003ம் ஆண்டு அவர், 'குட்சினா ஹோ மேக்கர்ஸ்' (Kutchina Home Makers Pvt Ltd) நிறுவனத்தை துவக்கினார். இன்று நிறுவனம் ரூ.300 கோடி வருவாய் கொண்டதாக வளர்ந்துள்ளது. மேலும், நமீத் இறக்குமதி சார்பில் இருந்து உள்ளூர் உற்பத்தி முறைக்கு மாறி வருகிறார்.

எஸ்.எம்.பி ஸ்டோரி உடனான நேர்காணலில் நமீத் நிறுவனத்தை உருவாக்கிய விதம் மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கான தனது பங்களிப்பு பற்றி பேசுகிறார்.

துவக்கம்

சிறுவயது முதல் நமீத் தொழில்முனைவை விரும்பினார். கல்லூரியில் இருந்த போது தந்தையிடம் இருந்து கடன் வாங்கி பேக்ஸ் ஏஜென்சியை துவக்கினார். எனினும், கமிஷன் குறைவாக இருந்ததால் இதை தொடரவில்லை.

அதே நேரத்தில், 90’களின் இறுதியில் இந்தியாவில் வாக்குவம் கிளினிங் இயந்திரங்களுக்கான சந்தை உருவாவதை கவனித்தார். இந்த தொழிலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

“எப்போதுமே சந்தையை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். இந்த பழக்கம் கடினமான நேரங்களில் கைகொடுத்தது. ரிஸ்க் எடுத்து, பல்வேறு பிரிவுகளில் பொருட்களை அறிமுகம் செய்து, வர்த்தகத்தை தொடர்ந்தேன்,” என்கிறார் குட்சினா ஹோம் மேக்கர் நிறுவனரான நமீத்.

2000ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் மாடுலர் கிட்சன்களுக்கான தேவை அதிகரிப்பதை கவனித்தவர், கிட்சன் சிம்னிகளுக்கான தேவையும் அதிகரிப்பதை தெரிந்து கொண்டார்.

"இந்திய சமையல் முறைக்கு குறிப்பாக எண்ணெயில் பொறிப்பதற்கு சிமினி மிகவும் அவசியம் என்பதால் இதன் தேவை அதிகரித்தது. அப்போது பெரும்பாலான சிம்னிகள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவை ஐரோப்பிய சமையல் முறைக்கானது. எண்ணெய் பசை கலந்த புகையை வெளிப்படுத்திய இந்திய சமையலறைகளுக்கு இவை ஏற்றதாக இல்லை,” என்கிறார் நமீத்.

அடுத்த கட்டம்

நமீத், இந்திய சூழலுக்கு ஏற்ற சிம்னிகளை தயாரிப்பதற்காக ஐரோப்பிய உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார். இந்தியர்களுக்கு வாஷிங் பில்டர் இல்லாத தானியங்கி சிம்னிகள் தேவை என உணர்ந்தார்.

இந்தப் பிரிவில் இறங்கியவர், வாடிக்கையாளர்களுக்கு 15 நாட்களில் திரும்பி வாங்கி கொள்ளும் வாய்ப்பை அளித்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொருள் பிடித்திருந்தால் 15 நாட்களில் பணம் செலுத்துமாறு கூறினார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சிமினியை வாங்கிக்கொண்டனர்.

ஒரு ஏஜென்சியாக துவங்கி, சொந்த உற்பத்தியில் ஈடுபடுவதில் சாதகங்கள், பாதகங்கள் இரண்டுமே உள்ளன என்கிறார் நமீத். எனினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை.

இன்று, குட்சினா ஹோம் முழுமையான கிட்சன் தீர்வுகளை அளிக்கும் வெகு சில இந்திய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. மாடுலர் கிட்சன், ஆர்.ஓ, ஹோம் கேட்ஜெட்ஸ் என எல்லாவற்றையும் நிறுவனம் அளிக்கிறது.

இந்தியாவில் மாடுலர் கிட்சன்களுக்கான தேவை ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக அவர் கூறுகிறார்.

நிறுவனம் 2020ல் ரூ.237 கோடி வருவாய் ஈட்டியது. தற்போது வருவாய் ரூ.300 கோடி என்கிறார் நமீத்.

சுய சார்பு

துவக்கத்தில் நமீத் ஜெர்மனி, வியட்னாம், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தார். 2020 கோவிட்-19 சூழலில் இது மாறியது.

“பெருந்தொற்றுக்கு மத்தியில் மற்றும் இந்தியா-சீனா மோதல் விவகாரத்தால் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் போக்கு இந்தியாவில் உருவானது. சீனாவும் சரக்கு கட்டணத்தை உயர்த்தியது. சரக்கு வருவதிலும் தாமதம் உண்டானது,” என்கிறா நமீத்.

இதே காலத்தில் இந்திய அரசும் தற்சார்பு கொள்கையை ஊக்குவித்தது. எனவே நமீத் சொந்த உற்பத்தியில் ஈடுபடத் தீர்மானித்தார். வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருளை தருவித்து இங்கே உற்பத்தியை மேற்கொண்டார்.

தற்போது நிறுவனம் சிறிய பொருட்களை அவுட்சோர்சிங் முறையில் உற்பத்தி செய்து, மாடுலர் கிட்சன் சாதனங்களை கொல்கத்தா ஆலையில் தயாரிக்கிறது.

பெரிய பொருட்களை இப்போது இறக்குமதி செய்து வந்தாலும், விரைவில் இவற்றையும் கொல்கத்தா ஆலையில் உற்பத்தி செய்யத்துவங்குவோம் என்கிறார்.

சவால்கள்

பிராண்ட் அங்கீகாரம் மற்றும் திறமையான ஊழியர்களை நியமிப்பது சவாலாக இருப்பதாக நமீத் கூறுகிறார்.

“கொல்கத்தாவில் இருந்து செயல்படுவதால் தேசிய பிராண்டாக அங்கீகரிக்கப்படுவதில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். மக்கள் எங்களை பிராந்திய பிராண்ட் என நினைத்து விடுகின்றனர். மேலும், தில்லி போன்ற நகரங்களில் இல்லாததால் சரியான ஊழியர்களை நியமிப்பது கடினமாக இருக்கிறது,” என அவர் விளக்குகிறார்.

இந்தியா முழுவதும் சில்லறை விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுளவர், அடுத்த மூன்றாண்டுகளில் பொது பங்குகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world