தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய கே.வி.சுப்பிரமணியன்!

ஆராய்ச்சி பணிக்கே திரும்ப முடிவு!
3 CLAPS
0

மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர் கே.வி.சுப்பிரமணியன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்று கொண்டார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமை பொருளாதார ஆலோசகராக தனது குழுவுடன் இணைந்து மத்திய அரசின் பொருளாதார நிலவரம் குறித்து பல்வேறு நடவடிக்கை திறம்பட எடுத்ததற்காக பாராட்டுகளை பெற்ற சுப்பிரமணியன் தற்போது ஆராய்ச்சி பணிக்கே திரும்ப முடிவு செய்துள்ளார்.

அதன்படிதான், தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக எனது 3 ஆண்டு பணி காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து நான் மீண்டும் ஆராய்ச்சித்துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன். ஒரு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பைப் பெறுவது ஒரு முழுமையான பாக்கியம். ஒவ்வொரு நாளும் நான் நார்த் ப்ளாக்கிற்குச் சென்றபோது, ​​இந்த பாக்கியம் கிடைத்ததை நினைத்து பெருமைகொள்வேன்,” என்றார்.

இனியும் அந்த நினைவு என் மனதில் தொடரும். எனது பணி காலத்தில் மத்திய அரசிடம் இருந்து பெரும் ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளேன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஒரு அன்பான உறவை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்றிருக்கிறேன்.

”எனது பணி வாழ்க்கையின் இந்த மூன்று தசாப்தங்களில் மாண்புமிகு பிரதமரை விட நான் இன்னும் உற்சாகமூட்டும் தலைவரை சந்திக்கவில்லை. பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய அவரது உள்ளுணர்வு புரிதல், சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு அதைப் பயன்படுத்துவதில் ஒரு தெளிவற்ற உறுதியுடன் இணைகிறது," என்றுள்ளார்.

தொடர்ந்து இதே அறிக்கையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக சகாக்கள் ஆகியோரை பாராட்டி இருப்பதுடன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்கள் கங்குலி, தோனி மற்றும் டிராவிட் ஆகியோரை குறிப்பிட்டு,

“மத்திய நிதி அமைச்சகத்தில் சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் குழு உள்ளது. அவர்கள் அடுத்தகட்ட அரசுப் பணிகளை திறம்பட கையாளும் திறமை கொண்டவர்கள்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும், கே.வி.சுப்பிரமணியன் வளர்ந்தது எல்லாம் சட்டீஸ்கர் மாநிலத்தில் தான். ஐஐடி, ஐஐஎம் போன்ற இந்தியாவின் உயரிய கல்வி அமைப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டங்களை பெற்ற சுப்ரமணியன், அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர்.

பிரபல ஜேபி மார்கன் சேஸ், டாட்டா கன்சல்டன்ஸி சர்வீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது. தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் முன்பு ஹைதராபாத்தின் ’இந்தியன் ஸ்கூல் பிசினஸ்' பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்த மீண்டும் அந்த பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: பிடிஐ | தமிழில்: மலையரசு