லட்சுமி விலாஸ் வங்கி பிரச்சனை என்ன? ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது ஏன்?

By YS TEAM TAMIL|20th Nov 2020
வாராகடன் பிரச்சனையால் நெருக்கடியில் சிக்கிய லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், இந்த வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பதற்கு பதில் பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க வங்கிகளில் ஒன்றான 'லட்சுமி விலாஸ் வங்கி' அண்மைக் காலமாக நிதி நெருக்கடியில் சிக்கி வந்த நிலையில், இந்த வங்கி மீது அடுத்த மாதம் 16ம் தேதி வரை வர்த்தகத் தடையை (moratorium) ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.


வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோடு, வங்கியை மீட்கும் வகையில் வெளிநாட்டு வங்கியுடன் இணைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.


அண்மைக் காலத்தில் யெஸ் பாங்க் மற்றும் பிஎம்சி வங்கி மீது இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது, லட்சுமி விலாஸ் வங்கியும் ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளது.


மேலும், டி.எச்.எல்.எப் மற்றும் ஐ.எல்&எப்.எஸ் ஆகிய நிதி நிறுவனங்கள் பிரச்சனைக்கு உள்ளான நிலையில், வாராகடன் சிக்கலுக்கு உள்ளாகி தவிக்கும் ஐந்தாவது வங்கியாக லட்சுமி விலாஸ் பேன்க் அமைந்துள்ளது.

எல்விபி

பிரச்சனை என்ன?

லட்சுமி விலாஸ் வங்கி 93 வருட பாரம்பரியம் மிக்கது. கரூரை தலைமையகமாகக் கொண்ட இந்த வங்கி, சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர்களின் நலனுக்காக துவக்கப்பட்டது. தமிழகம் தவிர அண்டை மாநிலங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.


சிறப்பாக செயல்பட்டு வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி மற்றும் நிர்வாக சீர்கேடு பிரச்சனைகளுக்கு உள்ளானது.

வங்கி அதிக வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, சில்லறை கடன்களை விட, பெரிய நிறுவனங்களுக்கான வர்த்தகக் கடன்களில் கவனம் செலுத்தத் துவங்கியது இந்த பிரச்சனைக்கான மூலக்காரணம் என வங்கி வட்டாராத்தில் கூறப்படுகிறது.

வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனும் நோக்கில் அளிக்கப்பட்ட வர்த்தகக் கடன்களில் பல வாராகடனாக மாறியது. இதனால் வங்கி நஷ்டத்தில் சிக்கியது. தொடர்ந்து மூலதனத்தை திரட்டும் முயற்சி பலனளிக்காமல் போகவே வங்கி மேலும் நெருக்கடிக்கு உள்ளானது.


கடன் வழங்குவதில் சரியான முறையை பின்பற்றாதது மற்றும் நிர்வாகக் கோளாறுகளும் இந்த பிரச்சனையை அதிகமாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ரிசரிவ் வங்கி செயல்பாட்டை கண்காணித்து, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

வர்த்தகத் தடை

இந்நிலையில், வங்கி செயல்பாடு மேலும் மோசமானதை அடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதிரடியாக வங்கி செயல்பாட்டிற்கு வர்த்தகத் தடை விதித்துள்ளது. இதன்படி,

வாடிக்கையாளர்கள், அடுத்த மாதம் 16ம் தேதி வரை, ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும். அவசரத் தேவை எனில் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அதிக பணம் எடுக்கலாம்.

மேலும், இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப்பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது.


வங்கியின் செயல்பாட்டை பி.சி.ஏ நடவடிக்கை மூலம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தும் நிலைமை தொடர்ந்து மோசமானதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், யெஸ் பாங்க் மற்றும் பிஎம்சி வங்கி இந்த நடவடிக்கைக்கு உள்ளாகின.

மீட்க வரும் வெளிநாட்டு வங்கி

இதனிடையே லட்சுமி விலாஸ் வங்கியை மீட்கும் வகையில், வெளிநாட்டு வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

இணைப்பிற்காக ரூ.2,500 கோடி வழங்க உள்ளது இந்த வங்கி. இந்த இணைப்பு தொடர்பாக கருத்தறியும் முயற்சியையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பதற்கு பதில் பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாட்டின் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் வங்கி என்ற தனியார் வங்கியும், டிஎச்எப்எல், ஐஎல்&எப்எஸ் போன்ற வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், எல்விபி வங்கியை வெளிநாட்டு தனியார் வங்கியுடன் இணைப்பதற்கான மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முயற்சி தவறான போக்காகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும்,

”33 கிளைகளுடன் இயங்கிவரும் டிபிஎஸ் வங்கி, எல்விபி வங்கியை எடுத்துக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படாது. சுமார் 60% கிளைகளை கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கொண்டுள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே எல்விபி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்,” என்றும் தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தொகையை கறாராக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்விபி வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதால் பொதுத்துறை வங்கிக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.


கட்டுரை: சைபர்சிம்மன்

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற