30 ஆயிரத்தில் தொடங்கி, 20 லட்சம் வருவாய் ஈட்டும் கைவினைப் பொருட்கள் பிராண்ட்!

ஆரூஷி கைகளால் செய்யப்பட்ட ஆடைகள், துணை அணிகலன்கள் பிராண்டான லாவிஷை 2017 ல் துவக்கி, இன்று சர்வதேச நாடுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்.
0 CLAPS
0

உங்கள் ஈடுபாட்டை பின் தொடரும் போது வயது ஒரு விஷயமல்ல. தில்லியைச்சேர்ந்த ஆருஷி இதற்கான உதாரணமாக இருக்கிறார். பொருளாதார பட்டதாரியான ஆருஷி அமேசானில் விற்பனை செய்வதன் மூலம் 2015ல் தனது தொழில்முனைவு பயணத்தை துவக்கினார்.

அதன் பிறகு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பிஸினஸ் டெவலப்பராக பணியாற்றினார். இதனிடையே முழு நேர வர்த்தகத்தில் ஈடுபடுவதை விரும்பி தனது வேலையை ராஜினாமா செய்தார்.

கைகளால் செய்யப்பட்ட ஆடைகள், துணை அணிகலன்களை விற்பனை செய்யும் லாவிஷ் (Lavish) பிராண்ட் 2017 ல் உருவாக்கப்பட்டது. இன்று ஆண்டுக்கு ரூ.20 லட்சம் விற்றுமுதல் ஈட்டும் வகையில் வளர்ந்துள்ளது.

ஆருஷியிடம் அவரது தொழில்முனைவு பயணம் குறித்து எஸ்.எம்.பி ஸ்டோரி பேசியது. அந்த நேர்காணலில் இருந்து:

எஸ்.எம்.பி ஸ்டோரி: உங்கள் நிறுவனம் பற்றி கூறுங்கள்?

ஆருஷி: ’லாவிஷ்’ இந்தியாவில் உருவாக்கப்பட்ட, கைகளால் செய்யப்பட்ட ஆடைகள், கைப்பைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் பிராண்டாகும். 2017ல் 30,000 சேமிப்பு மூலமான முதலீட்டில் இதைத் துவங்கினேன். முதலில் பாரம்பரிய ஆடைகளை மட்டும் விற்பனை செய்த நிலையில், கைப்பைகள், துணை அணிகலன்களுக்கு விரிவாக்கம் செய்தேன்.

எஸ்.எம்.பி.எஸ் :  இந்த பொருட்கள் எங்கு செய்யப்படுகின்றன. மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகின்றன?

ஆருஷி:  மீரட், ஆக்ரா, மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள இடங்களில் இருந்து செய்யப்படுகின்றன. தினக்கூலி அடிப்படையில் 30 கைவினை கலைஞர்கள் என்னிடம் வேலை பார்க்கின்றனர்.

ஜெய்பூரில் இருந்து 100 கி டெனிம் வாங்குகிறோம். இவற்றை நாங்களே துவைத்து சீராக்குகிறோம். மற்ற மூலப்பொருட்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகின்றன. 30 வெண்டர்களுடன் கூட்டு வைத்துள்ளோம்.

எஸ்.எம்.பி.எஸ்:  தொழில் துவங்குவதில் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

ஆருஷி : 23 வயதில் வர்த்தகத்தை துவங்கினேன். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை என்பது தான் மிகப்பெரிய சவால்.

மேலும், இந்த துறையில் போட்டியும் அதிகம் இருந்தது. போட்டியால் துவண்டு விடாமல் தொடர்ந்து முன்னேற பாடுபட்டேன்.

வணிக ஏற்றுமதியாளர் என்ற முறையில், பேமெண்ட் வெளிநாட்டு பரிவர்த்தனையாக வருகிறது. பொதுத்துறை வங்கிகள் மெதுவாக செயல்படுவதால் பரிவர்த்தனை செலவுகள் அதிகமாக உள்ளது. ஆன்லைன் ஏற்றுமதிக்காக 2014 ல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த EDPMS முறையில் வங்கிகள் சேவை அளிக்கின்றன. இதன் காரணமாக நாங்கள் லாபத்தை சில நேரங்களில் விட்டுத்தர நேர்கிறது.

எஸ்.எம்.பி.எஸ்: உங்கள் டிஜிட்டல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் குறித்து…  

ஆருஷி : இந்தியாமார்ட், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மேடைகளில் இருக்கிறோம். அமெரிக்கா, இத்தாலி டென்மார்க்,. ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்கிறோம்.

எஸ்.எம்.பி.எஸ்: இந்தியா மற்றும் சர்வதேச சந்தை இடையிலான வேறுபாடு என்ன?  

ஆருஷி :  95 சதவீத வர்த்தகம் சர்வதேச சந்தையில் இருந்து வருகிறது. இந்தியாவில் கைவினை பொருட்களுக்கான தேவை குறைவாக உள்ளது. ஆப்பிரிக்க நகைகள் செய்யும் ஆர்டரும் பெற்றுள்ளோம்.

எஸ்.எம்.பி.எஸ்: இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் நிலை என்ன?  

ஆருஷி : இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. பல அரசு அமைப்புகள் பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்களை நடத்துகின்றன.

பெண் தொழில்முனைவோருக்கான கடன் வசதியும் உதவுகின்றன. இருப்பினும், இந்த துறைகளில் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

எஸ்.எம்.பி.எஸ்: உங்ஜள் எதிர்கால திட்டம் என்ன?

ஆருஷி : கோவிட்-19 எல்லாவற்றையும் பாதித்திருக்கிறது. லாக்டவுன் விலக்கப்பட்டவுடன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ரீடைல் விற்பனை மையங்களை திறக்க உள்ளேன். வர்த்தக இ-காமர்ஸ் தளமும் துவக்க உள்ளேன்.

ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world