6 மாதத்தில் 10லட்சம் பதிவிறக்கம்: 'லிட்டில் சிங்கம்’ ஆப் உருவாக்கிய 'சிங்கப் பெண்’

By YS TEAM TAMIL|1st Apr 2021
ப்ரேர்னா உருவாக்கியுள்ள லிட்டில் சிங்கம் செயலி குழந்தைகள் இளம் வயதில் அடிப்படைகளை வலுவாகவும் வேடிக்கையாகவும் கற்றறிய உதவுகிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

1,2,3... அப்புறம் என்ன? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாத குழந்தைகள் இருக்கலாம். அதே குழந்தையிடம் 'டோரா கூட யார் இருப்பாங்க?’ என்று கேட்டால் போதும் 'புஜ்ஜி’ என்று மழலை மொழியில் பதிலளித்துவிடும்.


‘அந்த குள்ளநரி எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுதா?’ என்று டோரா கேட்டால் பேசத் தொடங்காத பச்சிளம் குழந்தைகள்கூட தவழ்ந்து வந்து ஓளிந்திருக்கும் குள்ளநரியை 'இதோ’ என்று காட்டிவிடும்.


டோரா, புஜ்ஜி, டோரேமான், சின் சான், மோட்டு பட்லு, சோட்டா பீம்... இப்படி குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட கார்டூன் கதாப்பாதிரங்கள் ஏராளம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகிய உறவுகளைத் தொடர்ந்து மேலே குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களே குழ்ந்தைகளுக்கு வெகுவாகப் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள்.


அவர்களைப் போலவே பேசுகிறார்கள்; அவர்களைப் போலவே உடையணிகிறார்கள்; அந்த அளவிக்கு இந்தக் கதாப்பாத்திரங்கள் குழந்தைகளுடன் ஒன்றிவிட்டார்கள்.


குழந்தைகளைக் கவர்வதற்காகவே டூத் பேஸ்ட், டூத் பிரஷ் தொடங்கி பைகள், தட்டுகள், ஆடைகள், தலையணை என அனைத்திலும் இதுபோன்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவிற்கு இவர்களது உலகமே கார்டூன் கதாப்பாத்திரங்களால் நிறைந்துள்ளது.


அம்மா சொல்லி கேட்காத குழந்தைகள்கூட சின் சான் சொன்னால் கேட்பார்கள். அவர்களுடன் அத்தனை நெருக்கம்.


”தூங்கிட்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்ட...” என்று லிட்டில் சிங்கம் என்கிற கதாப்பாத்திரம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே குழந்தைகள் ஆர்வமாக கற்றுக்கொள்ள உதவவேண்டும் என்கிற நோக்கத்துடன் தூங்காமல் செயல்பட்டு வரும் ப்ரேர்னாவையும் தட்டி எழுப்பிவிட்டது இந்த லிட்டில் சிங்கம்.

1

ப்ரேரனா

ஆம், இவர் 3 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவும் வ்கையில் உருவாக்கியுள்ள செயலியின் பெயர் ’லிட்டில் சிங்கம் ஆப்’.

ப்ரேர்னாவின் பின்னணி

ப்ரேர்னா கொல்கத்தாவிலும் புதுடெல்லியிலும் பிறந்து வளர்ந்தவர், இவரது குடும்பத்தினர் தொழில்முனைவு பின்னணி கொண்டவர்கள். சிறு வயது முதலே ஆர்வமாக பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் சுபாவம் கொண்டவர். படிப்பிலும் அதிக ஆர்வம் காட்டினார். பள்ளிப் படிப்பு முடித்ததும் NYU Stern School of Business-ல் பட்டம் பெற்றார்.

“எனக்கு 12 வயதிருக்கும்போது என் அப்பா 3,000 ஊழியர்கள் அடங்கிய கூட்டத்தின் முன் நின்று பேசச் சொன்னார். தைரியமாக இரு; பயப்படாதே; தன்னம்பிக்கையுடன் இரு; இதை என் அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார், கூட்டத்தின் முன்னால் நின்றபோதும் இதையே நினைவுபடுத்திக் கொண்டேன். வளரும் பருவத்திலும் கடின உழைப்பு, குழுவாக செயல்படுதல், அர்ப்பணிப்பு போன்ற அம்சங்களை பெற்றோரிடம் கற்றுக்கொண்டேன். இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்,” என்கிறார் ப்ரேர்னா.

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வம்

ப்ரேர்னா சிங்கப்பூர் மாற்றலானார். அப்போது 60 குழந்தைகள், 10 ஆசிரியர்களுடன் Little Paddington என்கிற முதல் பள்ளியைத் தொடங்கினார். இன்று 60 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 140 ஆசிரியர்களும் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

”நான் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளேன். முதல் நிலை நகரங்களில் சிறந்த உயர் கல்வி வாய்ப்புகள் இருக்கும் சூழலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இத்தகைய வசதிகள் இல்லை. இந்த வேறுபாட்டை நான் கவனித்தேன். சிறந்த கல்வி கிடைக்கவேண்டியது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. எனவே இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் தரமான கல்வியைக் கொண்டு சேர்க்க விரும்பினேன்,” என்கிறார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் 94 சதவீதம் பேருக்கு அடிப்படை ஆங்கிலமும் கணிதமும் தெரியவில்லை என சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்திருப்பதை இவர் சுட்டிக்காட்டுகிறார்.


இந்த சூழலை மாற்றவே லிட்டில் சிங்கம் என்கிற கற்றல் செயலியை வடிவமைத்துள்ளார். இவரது நிறுவனமான Creative Galileo இந்த செயலியை உருவாக்கியுள்ளது. குழந்தைகள் இளம் வயதில் அடிப்படைகளை வலுவாகக் கற்றறிய இந்த செயலி உதவுகிறது.

லிட்டில் சிங்கம்

சர்வதேச அளவில் குழந்தைகள் வேடிக்கையாகக் கற்றுக்கொள்ள Peppa Pig, Sesame Street, Dora the Explorer போன்ற செயலிகள் இருந்தாலும் இந்தியாவில் குழந்தைகள் வேடிக்கையாகவும் உற்சாகவும் கற்க உதவும் வகையில் எந்த ஒரு செயலியும் இல்லை என்பதை உணர்ந்தார்.

குழந்தைகள் சிறப்பாக கற்க உதவவேண்டும் என்கிற ப்ரேர்னாவின் ஆசை பெருந்தொற்று சமயத்தில் நிறைவேறியது.


பெருந்தொற்று சூழலில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இளம் மாணவர்களுக்காக இ-லெர்னிங் ஆப் உருவாக்க திட்டமிட்டார்.

little singham

இப்படி உருவானதுதான் லிட்டில் சிங்கம் ஆப். விருதுகள் வென்ற மிகச்சிறந்த படைப்பாளிகளின் உதவியுடன் இதில் பாடதிட்டங்கள் தொகுத்து வழங்கப்படுகிறது.

“எண்கள், மொழி, சமூக மன எழுச்சி, மோட்டார் திறன்கள், படைப்பாற்றல் திறன், சுற்றியுள்ள உலகைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் என 6 பகுதிகளில் எங்கள் செயலி கவனம் செலுத்துகிறது. வீடியோக்கள், விளையாட்டுகள், இ-புத்தகம் போன்றவற்றின் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் நினைவில் நிறுத்திக்கொள்ளவும் முடியும்,” என்கிறார்.

ப்ரேர்னா அனுனய் உடன் இணைந்து விளையாட்டுகளையும் டிஜிட்டல் தளங்களையும் உருவாக்கியுள்ளார். அனுனய் எட்டாண்டுகள் வரை வால்ட் டிஸ்னியில் இணைந்திருந்தவர். 16 வருட அனுபவமிக்கவர்.


இந்திய துணைக்கண்டங்களைச் சேர்ந்த குழந்தைகளை இந்த ஆப் இலக்காகக் கொண்டுள்ளது. நேபாளம், வங்காளம், பாகிஸ்தான் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பதிவிறக்கம் செய்கிறார்கள்.


சில மாதங்களிலேயே இந்தச் செயலி 4.8 நட்சத்திர மதிப்பீட்டுடன் ஒரு மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ப்ரேர்னா.

“பல புதிய, பிரபல கதாப்பாத்திரங்களுடன் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கான இ-கற்றல் உலகமாகவே Creative Galileo மாறிவிடும் என்று நம்புகிறோம். தொலைதூரப் பகுதிகள் உள்ள குழந்தைகளின் கற்றல் திறனையும் மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம். அடுத்த 18 மாதங்களில் புதிய பிராந்திய மொழிகளை இணைத்துக்கொண்டு 10 மில்லியன் பதிவிறங்களை எட்ட திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் ப்ரேர்னா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா