குடிசை வீடு; கையில் ரூ.6,000: மேற்கு வங்கத்தில் இப்படியும் ஒரு எம்எல்ஏ தேர்வு!

யார் இந்த சந்தனா பவுரி?!
1 CLAP
0

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சல்தோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்தனா பவுரி என்ற பெண் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். அதற்குக் காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் ஏழை வேட்பாளர் என்றால் அது சந்தனா பவுரி தான்.

மேற்குவங்கத்தில் கங்கை கரையில் அமைந்துள்ள கிராமமான கேலாயில் கிராமத்தில் உள்ள மண் குடிசை வீடு, குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாத இடம் தான் அவரின் அடையாளம். இவரின் கணவர் ஷரவன் கட்டிடத் தொழிலாளி. அவரின் தினக்கூலி 400 ரூபாய் மட்டுமே. இதைத் தாண்டி அவரின் குடும்பத்தில் வேறு வருமானங்கள் கிடையாது.

அவருக்கு இருக்கும் அசையா சொத்துகளின் மதிப்பு 31,975 ரூபாய். வங்கிக் கணக்கில் ரூ.6,335 வைத்துள்ளார். அந்த குடிசை வீட்டில் இரண்டே இரண்டு சிறிய அறைகள், மேலும், ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரே ஒரு மின்விசிறி, அதுபோக பள்ளிப் புத்தகங்கள். இதுபோக அசையும் சொத்துக்களாக, 3 ஆடுகள், 3 மாடுகள் உள்ளன. அதிலும் ஒரு மாடு திருமண சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. அந்த மாடுகளை கட்டும் ஒரு மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது.

இதேபோல், சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் பவுடி பெயரில் இருக்கும் அசையா சொத்துகளின் மதிப்பு 30,311 ரூபாய் மட்டுமே. இந்த தகவல்கள் வேட்பு மனுவில் சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ளார். பட்டியிலனத்தைச் சேர்ந்த சந்தனா பவுரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் ஒரு சுவாரஸ்யம் இருந்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் தீவிரத் தொண்டராக இருந்து வருகிறார் சந்தனா. இதனால் அந்தப் பகுதியில் பாஜக கூட்டங்கள் நடந்தால் போதும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் இருந்தாலும் தானாக சென்று கலந்துகொள்வார். இதேபோல், கட்சி சார்பில் நிறைய தொண்டுகளை அந்தப் பகுதியில் செய்து இருக்கிறார். அவரின் இந்த செயலை கவனித்து வந்த பாஜக தலைமை அவரை வேட்பாளராக டிக் செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் பணக்காரர்கள் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்த போதிலும், அவர்களை புறந்தள்ளி விட்டு ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிடாத சந்தனா பவுரியை வேட்பாளராக்கி இருக்கிறது அக்கட்சி. பாஜகவில் இருந்தாலும், தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட செய்தியை டிவியில் பார்த்து வந்து பக்கத்து வீட்டினர் சொன்ன பிறகு தான் தனக்கு தெரியும் என்றுள்ளார் சந்தனா பவுரி.

இந்த விஷயம் அறிந்ததும், பிரச்சாரத்திற்காக காவி நிறச் சேலை அணிந்து நாள்தோறும் தனியாக அங்குள்ள மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார் சந்தனா. இந்த சல்தோரா தொகுதி கடந்த இரண்டு தேர்தலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அந்தக் கட்சியின் சந்தோஷ் குமார் மொந்தல் கடந்த இரண்டு முறையாக இதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்த பகுதியின் வலுவான தலைவர் என்பதால் இந்த முறையும் அவரே இங்கு களமிறக்கப்பட்டார். அதன்படி, வலுவான தலைவருக்கு எதிராக களமிறக்கப்பட்ட சந்தனா பவுரி, அவரை 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளார். சந்தனா பவுரியின் நிலையை கேள்விப்பட்டு அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆனால் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் இந்த வெற்றியை வைத்து அந்தப் பகுதியின் பின்தங்கிய பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும் பாடுபட போவதாக தெரிவித்திருக்கிறார். காரணம், சந்தனா பவுரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவரின் தந்தை மரணித்துவிட இதன்காரணமாக இள வயதிலேயே திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவரின் நிலை மட்டுமள்ள, அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களும் வறுமையின் பிடியின் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். இதையடுத்தே கல்வி கிடைக்க வழிவகை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

Latest

Updates from around the world