குறும்பு, குலுக்கல், டீ வரலை மொமண்ட்; கதறி அழுத வேட்பாளர்: உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்!

தேர்தல் என்றாலே நிச்சயம் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது. வேட்புமனுத் தாக்கலில் இருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வித்தியாசமான காட்சிகளை ஆங்காங்கே பார்க்க முடியும். நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படி பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து
0 CLAPS
0

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, காணாமல் போன வாக்குப் பெட்டி சாவி என ஏற்கனவே நாம் ஒரு தொகுப்பு சுவாரஸ்யமான தேர்தல் முடிவு சம்பவங்களை வெளியிட்டிருந்தோம். இதோ அப்படியாக மேலும் சில வேடிக்கையான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள்...

குறும்பு வாக்காளர்கள்

வாக்களிப்பது நமது கடமை அதற்கு பணம் வழங்குவதோ அல்லது வாங்குவதோ சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே வாக்குக்கு பணம் வழங்குவதாக குற்றச்சாட்டுகளும் எழத்தான் செய்கின்றன. ஆனால், ’யாருமே தனது வாக்குக்கு பணம் தராததால், யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்’ என வாக்காளர் ஒருவர் செய்த குறும்பு சம்பவம் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை ரோஸ்மேரி கல்லூரியில் அதிகாரிகள் எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்குகள் பதிவு செய்யப்படாமல், அதற்குப் பதில் ஏதோ எழுதி இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் ஆச்சர்யம் அடைந்தனர்.

அதனை அங்கிருந்த வாக்காளர்களின் முகவர்களிடம் அதிகாரிகள் வாசித்துக் காட்டினர். அதில்,

‘எனக்கு யாரும் ரூ. 500 தரவில்லை. அதனால் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை’ என அந்தக் குறும்புக்கார வாக்காளர் எழுதி இருந்தார். இதனால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இதே போல், மற்றொரு வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டில் தனது ஆட்டோகிராப்பை (அதாங்க அவரோட கையெழுத்து) போட்டுச் சென்றிருந்தார். அந்த ஓட்டும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் இப்படி குறும்பு செய்தார்கள் என்றால், இன்னும் சிலரோ வேற லெவலில் வேடிக்கையாக வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அதாவது, தங்கள் பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் மனதை காயப்படுத்தக்கூடாது என அனைத்து வேட்பாளர்களுக்கும் பாராபட்சமின்றி ஒரே வாக்குச்சீட்டில் வாக்குகளைச் செலுத்தி இருந்தனர் சுமார் 100 பேர். அந்த 100 ஓட்டுகளும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

தரையில் உருண்டு அழுத பெண் வேட்பாளர்

வாக்காளர்கள் தான் இப்படி காமெடி செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இணையாக சில வேட்பாளர்களும் வேடிக்கை செய்யத் தவறவில்லை.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்தில் கிணறு சின்னத்தில் போட்டியிட்டார் பெண் வேட்பாளர் ஒருவர். தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காததால், அவர் தோல்வியைத் தழுவினார். இதனால்,

சோகத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியில் வந்த அவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தரையில் உருண்டு கதறி அழத் தொடங்கினார். ’மாமா, என்னை கிணற்றில் தள்ளி விட்டு விட்டார்களே படுபாவிகள்..’ என மறக்காமல் தனது சின்னத்தைக் கூறி அவர் அழுதது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.  

இன்னும் டீ வரல மொமண்ட்

வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இணையாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் சம்பவம் செய்யத் தவறவில்லை. வாக்குப்பெட்டிச் சாவி காணாமல் போன இடத்தில், சுத்தியலால் பெட்டியை உடைத்து ஆக்சனும் செய்தார்கள், டீ, காபி தரவில்லை என வேலை பார்க்காமல் அடம் பிடித்து அதிரடியும் செய்தார்கள்.

மேற்கூறிய அந்த இரண்டாவது சம்பவம் நடைபெற்றது தென்காசி ஒன்றிய ஓட்டு எண்ணிக்கை நடந்த குற்றாலம் பராசக்தி கல்லூரியில். தேர்தல் அலுவலர்களுக்கு யாரும் டீ, காபி கூட வாங்கித் தராத காரணத்தால், மாலையில் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர், ஒரு வழியாக காபி, டீ வழங்கப்பட்டதையடுத்து மீண்டும் வேலையை ஆரம்பித்தார்கள் அலுவலர்கள்.

ஒண்ணுகூட இல்ல..

ஒரு சில பகுதிகளில் எல்லோருக்கும் வாக்குகளைப் போட்டு வாக்காளர்கள் அதகளப் படுத்தியிருந்தார்கள் என்றால், மற்ற சில இடங்களில் ஒரு வாக்குக்கூட வாங்காத பரிதாபமாக வேட்பாளர்களையும் பார்க்க முடிந்தது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு 13வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் என்பவருக்கு ஒரு ஓட்டுக்கூட விழவில்லை.

இதே போல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சண்முகம், திருமூர்த்தி ஆகியோருக்கும் ஒரு ஓட்டுக்கூட விழவில்லை.

சம்பந்தப்பட்ட இந்த இரண்டு வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிட்ட வார்டில் குடியிருக்கவில்லை. எனவே அவர்கள் தங்களது வாக்குகளை வேறு ஒரு வார்டில் பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. இல்லையென்றால் அவர்களது சொந்த ஓட்டாவது அவர்களுக்கே கிடைத்திருக்கும்.

குலுக்கலில் வெற்றி

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் வெள்ளப்பனேரி பஞ்சாயத்து 7வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 3 பெண்கள் போட்டியிட்டனர். இதில் இரண்டு பெண் வேட்பாளர்கள் தலா 99 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தனர். எனவே, அவர்களில் ஒருவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க குலுக்கல் முறை முடிவு செய்யப்பட்டது. அதன்படி,

வேட்பாளர்கள் இருவரது பெயரும் தனித்தனியே சீட்டில் எழுதப்பட்டு குலூக்கல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பெண் வேட்பாளர் கலா இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதே போல், தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதிவிக்கு போட்டியிட்ட சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவருமே தலா 1034 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் யாரை ஊராட்சிமன்றத் தலைவராக நியமனம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே பழைய நடைமுறையப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் சந்திரசேகர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வானார்.

என்னதான் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டாலும் கடைசியில் குடவோலை முறையில் தலைவரைத் தேர்ந்தெடுத்த சம்பவங்கள் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்கா-தங்கை வெற்றி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுரங்கம். இவரது இரண்டு மகள்களான மாலா சேகர் (50) மற்றும் உமா கண்ணுரங்கம் (48) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் காவேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலா 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல், அவாது தங்கையான உமா ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 1,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இப்படியும் ஒரு ராஜதந்திரம்

ஒரே வீட்டில் அண்ணனை எதிர்த்து தம்பி... தம்பியை எதிர்த்து அண்ணன்... அப்பாவை எதிர்த்து மகன்... மகளை எதிர்த்து அப்பா... கணவனை எதிர்த்து மனைவி.. இப்படிக் கேள்விப்பட்டாலே அவர்களுக்குள் போட்டியோ, பிரச்சினையோ இருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால், இப்படி போட்டியிடுவதன் பின்னணியில் ஒரு ராஜதந்திரமும் இருக்கிறது என நிரூபித்திருக்கிறார்கள் தேனியைச் சேர்ந்த தம்பதி ஒன்று.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தின் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையாவை எதிர்த்து அவரது மனைவி ஈஸ்வரி சுயேட்சையாக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக, அமமுக உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் களத்தில் நின்ற அந்த தேர்தலில், 1702 வாக்குகள் பெற்று கருப்பையா அமோக வெற்றி பெற்றார். கருப்பையாவின் மனைவியும் சுயேட்சை வேட்பாளருமான ஈஸ்வரிக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.

இதில் என்ன ராஜதந்திரம் என்றால், தேர்தல் வேலைக்கு பூத் ஏஜெண்ட் வேண்டும் என்பதால் தன் மனைவியையே சுயேட்சை வேட்பாளராக்கி இருக்கிறார் கருப்பையா. மற்ற ஆட்களை இப்படி நிறுத்தினால் தனக்கு எதிராக சதி செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால், தன் மனைவியையே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் அவர்.

சுயேட்சையாக போட்டியிட்ட போதும், தனது பிரச்சாரத்தில் கணவருக்காகவே வாக்கு சேகரித்துள்ளார் ஈஸ்வரி. எனவே கணவரின் வெற்றி தனக்கும் வெற்றி தான் என மகிழ்ச்சியில் இருக்கிறாராம் அவர்.