விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு!
0 CLAPS
0

தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. புதிதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், விரைவாக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றம் வரை நடந்தது வந்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ளார். பழனிகுமார் தனது பேச்சில்,

"தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது, செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் முடிவு 22ம் தேதி முடியும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை, திரும்ப பெற 25ம் தேதி கடைசி நாளாகும்.

வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. என்றாலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணிவரை வாக்களிக்கலாம், என்று அறிவித்தார்.

கடந்த ஆட்சியில் 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest

Updates from around the world