உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்று கவனம் ஈர்த்த பட்டதாரி இளம் பெண்கள்!

ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் தங்கை வெற்றி!
1 CLAP
0

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திலேயே இளம் வயது ஊராட்சி மன்றத் தலைவியாகி இருக்கிறார் 21 வயது பெண் பொறியாளர் சாருலதா. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சாருலதா என்ற 21 வயது இளம்பொறியாளர் வேட்பாளராக களமிறங்கினார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களைவிட ஒரே ஒரு வாக்கு அதிகமாகப் பெற்று தற்போது வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார்.

இந்த வெற்றி மூலம் தமிழகத்திலேயே இள வயது ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் சாருலதா.

இந்தத் தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்ச தகவல்களும் கிடைத்து உள்ளன. அதில் ஒன்று தான், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தல் முடிவு. ஆம், அந்த தேர்தலில் போட்டியிட்ட 21 வயது பெண் வேட்பாளரான சாருலதா, வெற்றிபெற்று இளம் வயதில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் பெற்று உள்ளார்.

லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்தவரான சாருலதாவின் தந்தை ரவி சுப்பிரமணியன் (54) ஒரு தொழிபதிபர். அவரது தாய் சாந்தி (50) பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாருலதா, தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். அவரது விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே, தேர்தலில் களமிறங்கி முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உழைப்பின் பலனாக தற்போது வெற்றிக்கனியைப் பறித்துள்ளார்.

“கிராமப்புறமே இந்தியாவின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதனாலேயே கிராமப்புறங்கள் மற்றும் கிராம மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு மேலோங்கி இருந்தது. அதனால்தான் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவியில் போட்டியிட முடிவு செய்தேன்,” என்கிறார் சாருலதா.

தனது தேர்தல் வாக்குறுதியாக வெங்கடாம்பட்டி கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் எனவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தருவேன் எனவும் கூறியுள்ளார் சாருலதா.

22 வயதில் பதவிக்கு வந்த மலைக்கிராம பெண்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 451 வாக்குகள் உள்ள இந்த வார்டில் பல பெண்கள் போட்டியிட்டனர். என்றாலும் திமுக ஆதரவுடன் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்ற பெண் 112 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இவர் 22 வயது நிரம்பிய பட்டதாரி பெண். சமீபத்தில் தான் கல்லூரி முடித்திருக்கிறார். இளம் வயதில் போட்டியிட்டதுடன் இவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி என்ற பெண்ணை 2 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கவனம் பெற்றார்.

ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் தங்கை வெற்றி!

இதேபோல், நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உள்பட்ட 5-வது வார்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா சங்கரின் உடன்பிறந்த தங்கை உமாதேவி போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட உமாதேவி, 1,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

உமா தேவி M.sc வரை படித்தவர். இதைவிட, அவரின் சகோதரரை போலவே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். கடந்த இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ள உமாதேவி, அதில் இன்டெர்வியூ வரை சென்று தோல்வியுற்றுள்ளார். என்றாலும் இப்போது தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்திய இளம்பெண்

படித்தவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும், இது போன்ற அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்த பதவிகளுக்கு வர வேண்டும் என்ற மூத்த தலைவர்களின் கனவை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார்கள் சாருலதா, நதியா, உமாதேவி போன்றவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட இளம்பெண் சிந்துலேகா. இந்த ஊராட்சியில் பிரதான வேட்பாளராக ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த நபர், என்றாலும் நடந்து முடிந்த தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் சிந்துலேகா திமுக வேட்பாளரை விட 246 வாக்குகள் அதிகம் பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றினார்.

இவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த சில காலங்களாக முடிச்சூர் ஊராட்சியில் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest

Updates from around the world