விபத்தில் ஒரு கையை இழந்த பின் ஆன்லைன் விற்பனையில் புதிய பாதை கண்ட கோமல்!

சாலை விபத்தில் தனது கையை இழந்த மருத்துவ விற்பனை பிரதிநிதி மனம் தளராமல், பிளிபார்கார்ட் மூலம் இ-காமர்ஸில் ஈடுபட்டு வெற்று பெற்றிருக்கிறார்.
6 CLAPS
0

இந்தியாவின் பெரும்பாலான மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் வாழ்க்கை போலவே கோமல் பிரசாத் பாலின் பணி வாழ்க்கையும் அமைந்திருந்தது. வழக்கமான பணி நாட்களில், டாக்டர்களை சந்திப்பது, மருத்தக உரிமையாளர்களை சந்திப்பது, என அவர் தினமும் 9 மணி நேரம் பணியில் செலவிட்டார்.

“இது களைப்பை அளித்தது என்றாலும், வேறு வழியில்லை. அதோடு பாதுகாப்பு பற்றிய கேள்வியும் இருந்தது,” என்கிறார் கோமல்.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், அவர் மோசமான சாலை விபத்தில் சிக்கினார்.

“கண் விழித்து பார்த்த போது மருத்துவமனை ஐசியூவில் இருந்தேன். அதைவிட என் வலது கை இல்லாதது திகைக்க வைத்தது. உடல் அளவிலும், மனதளவிலும் மரத்துப்போயிருந்தேன்”.

அதன் பின் அவர் மீண்டு வந்தார். “ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தேன். ஆரம்ப அதிர்ச்சி மறைந்த உடன், பொழுது போவது பிரச்சனையாக இருந்தது. என் எதிர்காலம் பற்றி பெரிய கேள்விகள் இருந்தாலும் அப்போது நேர் நிறையாக இருக்க விரும்பினேன்,” என்கிறார் கோமல்.

அந்த நேரத்தில் தான் ஓவியம் வரைவதில் ஈடுபடத்துவங்கினார். “என் அப்பாவிடம் கொஞ்சம் காகிதம் கேட்டேன். அதைக்கொண்டு, ஏற்கனவே செய்திருப்பது போல, இடது கையால் வரையத் துவங்கினேன். இந்த சவாலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது, நல்ல முன்னேற்றம் இருந்தது” என்கிறார் கோமல். ஆனால் மருத்துவச் செலவுகளை சமாளிக்க வேகைக்குச் செல்ல வேண்டும் என்பது புரிந்தது. ஆனால், மற்றவர்களுக்கு சுமையாக அல்லது பரிதாபத்துக்கு உரியவராக இருக்க அவர் விரும்பவில்லை. மருத்துவ விற்பனை பிரதிநிதி பணிக்கேச் சென்றார்.

“இது கடினமாக இருந்தது. ஒரு பக்கம் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் சமூகப் பாகுபாடு பற்றிய அச்சம் இருந்தது. மற்றொரு பக்கம், முன்போல செயல்பட முடியவில்லை. என் பணியை தொடர முடியாமல் விலகினேன்”.

நான் எடுத்த முடிவுகளில் இது தான் மிகவும் கடினமானது. குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டும் உறுப்பினர் என்ற முறையில் எல்லாமே சிக்கலாக இருந்தது என்கிறார் கோமல்.

அவர் பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்துக்கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர் ஃபிளிப்கார்ட் விற்பனை பற்றி கூறினார். இதன் மூலம் புதிய பாதை கண்டவர், அடுத்த சில நாட்கள் ஃபிள்ப்கார்ட் விற்பனை பற்றி ஆய்வு செய்தார்.

எனக்குத் தேவையான தகவல்கள் கிடைத்ததும் நல்ல தெளிவு உண்டானது. ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்வது என தீர்மானித்தேன். அதன் பிறகு விற்பனையாளராக பதிவு செய்து கொண்டதும் ஃபிளிப்கார்ட் விற்பனையாளர் கையகப்படுத்தல் குழுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“இந்தக்குழு அடிப்படையான விஷயங்களை விளக்கியதோடு, ஆவணங்கள் தயாரிப்பிலும் உதவியது. பதிவு செய்வது முதல் துவக்குவது வரை எல்லாம் எளிதாக இருந்தது,” என்கிறார் கோமல்.

மருத்துவப் பிரதிநிதியாக இருந்த போது கிடைத்த தொடர்புகளைக் கொண்டு, ஃபிளிப்கார்ட்டில் விற்கக் கூடிய பொருட்கள் பட்டியலை உருவாக்கினார். மருத்துவ விற்பனை பிரதிநிதி அனுபவம் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் உதவியது என்கிறார்.

2019 மே மாதம், அல்டிமேட் ஹைஜின் (Ultimate Hygiene) எனும் பிராண்ட் பெயரில் ஃபிளிப்கார்ட்டில் மருத்துவப் பொருட்களை விற்பனையைத் துவக்கினார். அறிமுக நாளிலேயே விற்பனை செய்ய முடிந்தது அவருக்கு உற்சாகம் அளித்தது.

இன்று கோமல், நெபுலைசர், பேபி ஆயில், வேபரைசர், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை விற்பனை செய்கிறார். ஒரு சில பொருட்கள் ஃபிளிப்கார்ட் பரிந்துரையில் சேர்க்கப்பட்டன,

“சராசரியாக தினமும் 50 பொருட்கள் விற்கிறேன், கடந்த சில மாதங்களில் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்கிறார்.

எதிர்காலம் பற்றிய நம்பிகையுடன் இருப்பவர்,

“எனக்கும், குடும்பத்திற்கும் தேவையானதை சம்பாதிப்பதோடு, உதவிக்காக ஒருவரை வேலைக்கு வைத்திருக்கிறேன். மற்றவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ள முடிந்திருப்பது திருப்தி அளிக்கிறது,” என்கிறார் கோமல்.

ஃபிளிப்கார்ட்டில் விற்பனையாளராகி இருப்பது வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் இருக்கிறது என்கிறார் அவர் உற்சாகத்துடன்.

“குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டும் நபராக இருந்தேன். இப்போதும் அப்படி தான் இருக்கிறேன். ஆனால் முன்னர் விற்பனை பிரதிநிதியாக இருந்த போது, குடும்பத் தேவைக்கு மட்டும் சம்பாதிக்க முடிந்தது. இன்று, கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற முடிகிறது,” என்கிறார் கோமல்.

ஆங்கிலத்தில்: சிந்து எம்.வி. | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world