நியூஸ் வியூஸ்

வாய்தா கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்: ரௌடியை கரம்பிடித்த பெண் போலீஸ்!

நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வந்த இடத்தில் ரௌடி ஒருவருடன், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ் காதலில் விழுந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது அம்மாநில போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chitra Ramaraj
12th Aug 2019
18+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

போலீசுக்கும் ரௌடிக்கும் காதல், ஹீரோவின் ரௌடியிசத்தைப் பார்த்து போலீசாக இருக்கும் நாயகி மயங்குவது போன்ற காட்சிகள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் பாயல். இவர் சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, உள்ளூர் தாதாவான ராகுல் என்பவர் வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.


ராகுல் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி சிறைவாசம் அனுபவிப்பதும், வெளியில் வந்ததும் மீண்டும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதும் ராகுலின் வழக்கம். இதனால் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளார் ராகுல்.

Payal

பட உதவி: The Hindu

அப்போது எதிர்பாராத விதமாக இருவருக்கும் இடையே நட்பு உண்டானது. நாளடைவில் நட்பு காதலானது. சிறையில் இருந்த போதும், பெயிலில் வெளியே வந்த பிறகும் தொடர்ந்து பாயலுடன் யாருக்கும் தெரியாமல் காதல் வளர்த்து வந்துள்ளார் ராகுல்.


இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. ரகசிய இடத்தில் வைத்து நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமீபத்தில் ராகுல் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பெண் போலீஸ் ஒருவர் கிரிமினலைத் திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியுள்ளது. இதைப் பார்த்த உத்தரபிரதேச போலீசார் 'ஷாக்' ஆகியுள்ளனர்.


இதுகுறித்து அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரியான வைபவ் கிருஷ்ணா டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,

‘இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் போலீசா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை,’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அம்மாநிலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிஜமாகவே அவர் போலீசில் பணி புரிந்து வருகிறாரா என அவர்கள் விசாரித்து வருகின்றனர். ஆனால், ராகுல் குற்றப்பின்னணி உள்ளவர், தற்போது பெயிலில் வெளியில் வந்திருக்கிறார் என்பதை மட்டும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.


ராகுலின் குற்றங்கள் எதிலாவது பாயலுக்கு தொடர்பு இருக்கிறதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஏதாவது இருந்தால் பாயல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது ஒருபுறம் இருக்க பாயல் தனது சொந்தக் கிராமத்தில் ராகுலின் செல்வாக்கை வைத்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இதுவரை யாரும் முறைப்படி புகார் அளிக்கவில்லையாம். அப்படி புகார் தரும் பட்சத்தில் இது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.


எது எப்படியோ நம் இயக்குநர்களுக்கு ஒரு புதுக்கதை கிடைத்து விட்டது. இந்த நிஜ சம்பவத்தை வைத்து கூடிய விரைவில் யாராவது படம் தயாரித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


18+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags