பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

மணமகளே இல்லாமல் ஆடம்பர திருமணம்: மனவளர்ச்சி குன்றிய மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை!

குஜராத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது மனவளர்ச்சி குறைபாடுள்ள மகனின் ஆசையைத் தீர்த்து வைப்பதற்காக மணமகளே இல்லாமல் பிரமாண்ட திருமணம் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

Chitra Ramaraj
15th May 2019
35+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு பரோட். அரசு பேருந்து நடத்துனரான இவரது மகன் அஜய் பரோட்டிற்கு தற்போது 27 வயதாகிறது. சிறு வயதிலேயே தனது தாயைப் பறிகொடுத்ததோடு, மனவளர்ச்சியும் பாதிக்கப்பட்டு கற்றல் குறைபாடு ஏற்பட்டது அஜய்க்கு. இதனால் அவரை குறையில்லாமல் மிகுந்த செல்லமாக வளர்த்துள்ளார் விஷ்ணு.

Photo courtesy : ANI

‘சிறு வயது முதலே திருமணங்களில் கலந்து கொள்வது என்றால் அஜய்க்கு அலாதி பிரியம். யார் வீட்டில் திருமணம் என்றாலும் முதல் ஆளாக அஜய் அங்கு ஆஜராகி விடுவார். அங்கு ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு நடனம் ஆடி மிகவும் மகிழ்ச்சியாக அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார். நாளாக நாளாக மற்ற திருமணங்களைப் பார்த்து தனக்கும் இதே போல் திருமணம் எப்போது நடைபெறும் என கேட்கத் தொடங்கி விட்டார்,’ என ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் விஷ்ணு.

மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்க மணமகள் தேடியுள்ளார் விஷ்ணு. ஆனால், மனவளர்ச்சி குறைபாடு இருந்ததால், அவருக்கு பொருத்தமான மணமகள் கிடைக்கவில்லை. ஆனாலும் மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

அப்போது தான் இந்த புதுமையான யோசனை அவருக்கு உதித்துள்ளது. அதாவது மணமகளே இல்லாமல் அஜய்க்கு திருமணம் நடத்தி முடிப்பது தான் அது. உடனடியாக இது தொடர்பாக தனது உறவினர்களிடம் விஷ்ணு ஆலோசித்துள்ளார். அவர்களும் இதற்கு உதவுவதாகச் சொல்ல, உடனடியாக களத்தில் இறங்கி திருமண வேலையை ஆரம்பித்து விட்டார்.

முதலில் திருமண தேதி முடிவு செய்யப்பட்டது. இதற்கென பிரத்யேகமாக பத்திரிகை அடிக்கப்பட்டது. விஷ்ணுவே நேரடியாக தனது செல்ல மகனின் திருமணப் பத்திரிகையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். குஜராத் முறைப்படி திருமண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.

நிஜ திருமணம் போலவே விஷ்ணு வீட்டிற்கு உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். குஜராத்தி முறைப்படி திருமணத்திற்கு முந்தைய நாள், மணமகனுக்கு மெகந்தி வைக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Photo courtesy : ANI

அதன் தொடர்ச்சியாக திருமண நாளன்று, மணமகனுக்கு தங்க நிற செர்வாணி உடை அணிவிக்கப்பட்டது. கழுத்தில் மாலையோடு 200 உறவினர்கள் புடை சூழ குதிரையில் அஜய் மணமகன் ஊர்வலம் வந்தார். குஜராத்தி மொழியின் மிக பிரபலமான பாடல்களை வாத்திய குழுவினர் இசைக்க, விருந்துக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர். மணமகன் அஜய்யும் மகிழ்ச்சியாக நடனத்தில் கலந்து கொண்டார். பின்னர் உறவினர்கள் உள்பட 800 பேருக்கு தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது.

மணமகளே இல்லாமல் நிறைவாக வந்திருந்தவர்கள் ஆசியுடன் அஜய் திருமண விழா மகிழ்ச்சியாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த வினோதமான திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், மகனுக்காக இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்து வைத்த பாசக்கார தந்தை விஷ்ணுவை பாராட்டினர். மகனின் ஆசையை நிறைவேற்றிய திருப்தியில் விஷ்ணு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“அஜய்க்கு ஏற்ற ஜோடியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. அதன் பின்னர் தான் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு திருமணத்தை நடத்துவது என்று முடிவெடுத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகனின் கனவை நிறைவேற்றியிருக்கிறேன்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஷ்ணு.

வழக்கமான எல்லாத் திருமணங்களைப் போன்றே இத்திருமணமும் எல்லா சடங்குகளுடன் நடைபெற்றுள்ளது. அஜய்யின் கனவுத் திருமணமான இதை நிறைவாக செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் விஷ்ணுவிற்கு, அவரது உறவினர்கள் பெரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

Photo courtesy : ANI

“என்னுடைய சகோதரனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் தான் இப்படி விமர்சையாக அனைவரது ஆசியுடன் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என இப்படிச் செய்யவில்லை. எங்களுக்கு அஜய்யின் மகிழ்ச்சியே முக்கியமானதாக இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார் இத்திருமணத்தில் கலந்து கொண்ட அவரது சகோதரி.

இந்த திருமணத்தை நடத்தி முடிக்க விஷ்ணுவிற்கு ரூ. 2 லட்சம் செலவானதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை விட தன் மகனின் சந்தோசமே முக்கியம் எனக் கருதி, நாடே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இப்படி தடபுடலாக ஒரு திருமணத்தை நடத்திக் காட்டிய விஷ்ணு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் தான்.

தகவல் உதவி: ஏஎன்ஐ

35+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags