ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தரமான பயிற்சி வழங்க சிறப்புப் பள்ளி நடத்தும் மாதவி ஆதிமுலம்!

மாதவி ஆதிமூலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தைக்கு தரமான சிறப்புப் பள்ளி தேடி கிடைக்காத காரணத்தால் சொந்தமாக சிறப்புப் பள்ளி தொடங்கி தரமான பயிற்சியும் பராமரிப்பும் வழங்கி வருகிறார்.
1 CLAP
0

மாதவி ஆதிமூலத்தின் குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும். குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவனுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதற்காக மாதவி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பலனில்லை.

“ஐடி நிறுவனத்தில் டெக்னிக்கல் கம்யூனிகேடராக இருந்தேன். என் மகனுக்காக யூகே-விற்கு பணி மாற்றம் வேண்டும் என்று கேட்டிருந்தேன். வயதான என் பெற்றோருக்கும் ஆதரவு தேவைப்பட்டது. எனவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஹைதராபாத் வந்துவிட்டேன். ஆனால் ஹைதராபாத்தில் என் மகனைப் படிக்கவைக்க சரியான பள்ளி கிடைக்கவில்லை,” என்கிறார்.

தரமான சிறப்புப் பள்ளிக்கான மாதவியின் தேடல் Ananya Child Development and Early Intervention Clinic (ACDEC) உருவாகக் காரணமாக இருந்தது.

மாதவி ஆதிமூலம்

சிறப்புப் பள்ளி

2007 காலகட்டத்தில் ஹைதராபாத்தில் சில சிறப்புப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால் அவை டே கேர் போன்றே செயல்பட்டன. குழந்தைகளுக்கு எந்தவித பயிற்சியும் அளிக்கப்படவில்லை.

இந்தியாவில் ஆட்டிசம் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மக்கள் மனதில் தவறான கருத்துக்கள் பதிந்துள்ளன.

இந்தக் குழந்தைகளுக்குள் எத்தனையோ திறமைகள் ஒளிந்திருக்கின்றன. முறையான பயிற்சியின் மூலம் அவற்றை மெருகேற்றி வெளிப்படுத்த முடியும். இந்தப் பயிற்சியை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டே ACDEC தொடங்கப்பட்டது.

“முன்னர் ஆட்டிசம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சியளிக்க ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்களை ஒன்று திரட்டினேன். இந்தியாவில் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை உயர்த்துவதே ACDEC நோக்கம்,” என்கிறார் மாதவி.

ஆட்டிசம் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவது, கல்வியறிவு வழங்குவது என ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பை ACDEC இன்று வழங்கி வருகிறது.

2018-ம் ஆண்டு ACDEC ஃப்ரான்சைஸ் மாதிரியுடன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்தது. ஹைதராபாத்தில் செயல்படும் மையம் தவிர புதிதாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டன. தினமும் 150 முதல் 200 குழந்தைகள் இந்த மையங்கள் மூலம் பலனடைகிறார்கள்.

சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களே இந்த ஃப்ரான்சைஸ் மாதிரியின் உரிமையாளர்களாக இணைந்துள்ளனர். இதனால் இவர்களால் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடிவதுடன் தொழில் ரீதியாகவும் முன்னேறி சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது.

வணிக மாதிரியைப் புரிந்துகொண்டார்

ACDEC உருவாக்கும் முயற்சியில் பல்வேறு தவறுகள் செய்துள்ளதாக மாதவி கருதுகிறார். இதனால் கிட்டத்தட்ட சேமிப்புத் தொகை முழுவதையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

'கோல்ட்மேன் சாச்ஸ் 10,000 பெண்கள்’ என்கிற உலகளாவிய திட்டம் உலகம் முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோர்களுக்கு வணிகம் மற்றும் மேலாண்மை பயிற்சியளிக்கிறது. பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கி ஒருங்கிணைய உதவுவதுடன் முதலீடு பெறவும் உதவுகிறது.

“2011-ம் ஆண்டு நான் இந்த பயிற்சியை நிறைவு செய்தேன். என்னுடைய வணிக மாதிரியை திட்டமிடவும் விலை நிர்ணயிக்கவும் நிலையாக செயல்படவும் இந்தப் பயிற்சி உதவியது. ஒரு அம்மாவாக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை தொழில்முனைவராக சிந்திக்கத் தூண்டியது இந்தப் பயிற்சிதான்,” என்கிறார் மாதவி.

இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பின்னர், மாதவி தனது வணிகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். லாப நோக்கத்துடன்கூடிய ஒரு பிரிவாகவும் லாப நோக்கமற்ற ஒரு பிரிவாகவும் இவரது வணிகம் செயல்படுகிறது.

அதாவது செலவுகளை சமாளிக்கக்கூடிய நிலையில் இருக்கும் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு லாப நோக்கமற்ற பிரிவின் மூலம் சேவை பெறலாம்.

“இந்தியாவில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாள்வதில் பாரபட்சத்துடன்கூடிய கண்ணோட்டம் மக்களிடையே இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏன் பயிற்சியளிக்கிறேன் என்றும் எதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன் என்றும் பலர் கேள்வியெழுப்பினார்கள்,” என்கிறார் மாதவி.

தரமான பயிற்சி வழங்கப்படும் நிலையில் கட்டணத்தை செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களிடன் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. மேலும், தரமான கல்வியும் பராமரிப்பும் வழங்கப்படுவது குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக விவரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வருங்காலத் திட்டங்கள்

தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் குழுவினர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆட்டிசம் குறைபாட்டையும் குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதையும் ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவும் செயலியை உருவாக்கும் முயற்சியில் மாதவி ஈடுபட்டுள்ளார்.

தற்போது நேரடியாக மையம் அமைத்து செயல்பட்டு வரும் நிலையில் வருங்காலத்தில் செயலி மூலமாக டிஜிட்டல் ரீதியில் செயல்பட்டு மேலும் பலரைச் சென்றடைய மாதவி திட்டமிட்டுள்ளார்.

பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் தென்படும் மாற்றங்களை கவனித்து ஸ்கிரீன் செய்ய இந்த செயலி உதவும் என்றும் நிபுணர்களின் வழிகாட்டலும் வழங்கப்படும் என்றும் மாதவி தெரிவிக்கிறார். அரசாங்கத்திடம் இது சமர்ப்பிக்கப்படவும் உள்ளூர் மொழிகளில் உருவாக்கப்பட்டு பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும் திட்டமிடப்படப்பட்டுள்ளது.

“இந்தியாவில் தொழில்முனைவிற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இளம் வயதிலேயே இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வை நீங்கள் உருவாக்கும்போது அந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தத் தயாராக இருந்தால் அதுவே உங்கள் தொழிலாக மாறிவிடும்,” என்று பெண் தொழில்முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் மாதவி.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world