கோதாவரி நதி மாசுபடாமல் பாதுகாக்கும் சந்திரா கிஷோர்!

- +0
- +0
உலகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் கழிவுகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள் போன்றவை கொட்டப்படுகிறது. இதனால் பல நீர்நிலைகள் மாசுபடுகிறது. இது மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார் நாசிக் பகுதியைச் சேர்ந்த சந்திரா கிஷோர் பாடில். எனவே இவர் கோதாவரி நதியில் வீசப்படும் கழிவுகளின் அளவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஐஎஃப்எஸ் அதிகாரி ஸ்வேதா பொட்டு சந்திரா கிஷோரின் செயல் குறித்து ட்வீட் செய்த பிறகே இவரது முயற்சி பலருக்கு தெரிய வந்தது.
சந்திரா கிஷோரின் குடியிருப்பு நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. நதியில் கலக்கப்படும் கழிவுகளின் அளவு அதிகரித்து வருவதை இவர் கவனித்தார். குறிப்பாக பண்டிகை காலங்களுக்குப் பிறகு இந்த அளவு மேலும் அதிகரிப்பதை கவனித்தார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணத் தீர்மானித்தார். நதிக்கு அருகில் நின்றுகொண்டு மக்கள் கழிவுகளை நதியில் கொட்டாமல் இவர் தடுக்கிறார். இவர் நதி நீரை ஒரு டம்ளரில் வைத்துக்கொண்டு அவரைக் கடந்து செல்பவர்களைக் குடிக்கச் சொல்கிறார். மக்கள் செய்யும் தவறால் தண்ணீர் மோசமாக மாசுப்படுவதை அவர்களுக்கு உணர்த்துகிறார்.
“நான் காலை 11 மணி வரை நதிக்கு அருகில் நிற்கிறேன். நதியில் குப்பை கொட்ட வருபவர்களை, விசில் அடித்து எச்சரிக்கிறேன். பலர் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் அப்படிச் செய்யவேண்டாம் என்று வலியுறுத்துகிறேன்,” என்று சந்திரா கிஷோர் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இடம் கூறியுள்ளார்.
“நான் ஐந்தாண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என் உடல்நிலை சீராக இருக்கும்வரை தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபடுவேன்,” என்று நியூஸ்18 இடம் தெரிவித்துள்ளார்.
பாலத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர்.
இதேபோல் கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 69 வயது என் எஸ் ராஜப்பன் வேம்பநாட் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகிறார்.
இவர் தினமும் படகில் சென்று ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கிறார். ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு 12 ரூபாய் இவருக்குக் கிடைக்கிறது. இருந்தாலும் ஏரியை சுத்தப்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் இவர்களைப் போன்றோரின் பங்கு அளப்பரியது.
கட்டுரை: THINK CHANGE INDIA
- கழிவு மேலாண்மை
- ஆறுகள்
- பிளாஸ்டிக் கழிவுகள்
- நீர்நிலைகள்
- Cleaning lakes
- Water management
- பிளாஸ்டிக் மாசு
- THINK CHANGE INDIA
- கோதாவரி நதி
- Godavari
- +0
- +0