மக்களே மாண்டஸ் புயல் நெருங்கிட்டு இருக்கு - செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன?
புயல் நெருங்கி வரும் சமயத்தில் மக்கள் என்னென்ன மாதிரியான விஷயங்களை செய்யலாம், எதையெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது என பார்க்கலாம்...
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'மாண்டஸ் புயல்' இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, புயல் நெருங்கி வரும் சமயத்தில் மக்கள் என்னென்ன மாதியான விஷயங்களை செய்யலாம், எதையெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது என பார்க்கலாம்...
வெளுத்து வாங்கும் கனமழை:
நேற்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த “மாண்டஸ்” 'Mandous' புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல்; தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வரை புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் நாளை திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும்,
நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளதை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58.47 லட்சம் நபர்களின் செல்போன்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
- புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
- தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
- சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
- மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
- கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக் கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடலோரத்தில் தங்கியுள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
- தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.
- பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்தையும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
- நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?
- ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- பொது மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.
- இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதோடு, வதந்திகளை நம்பக்கூடாது.
- அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
- கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்து வைக்கவேண்டும்
- வீட்டை விட்டு வெளியேறும் போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இறுக்கமாக முடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகளை அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
- மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை:
- இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
- பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தொகுப்பு - கனிமொழி