பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

'மார்க் என்பது வெறும் நம்பர் விளையாட்டு தான்'- வைரலாகும் சட்டீஸ்கர் கலெக்டரின் மதிப்பெண்கள்!

தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவருக்காக தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை வெளியிட்டு, இணையத்தில் வைரலாகி இருக்கிறார் சட்டீஸ்கரைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அவானிஷ் சரண்.

Chitra Ramaraj
16th May 2019
215+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என எவ்வளவோ கவுன்சிலிங்குகள் கொடுக்கப்பட்டாலும், 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பலரின் காதுகளுக்கு அவை சென்று சேர்வதில்லை. இந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்து விட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண்களைப் பெற்று விட்டாலோ அவ்வளவு தான், வாழ்க்கையே முடிந்து விட்டது என மூலையில் முடங்கி விடுகின்றனர். சிலர் வாழ்க்கையையே முடித்துக் கொள்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளார் சட்டீஸ்கர் மாவட்ட ஆட்சியர் அவானிஷ்.

கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் ஆனவர் அவானிஷ் சரண். தற்போது இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவார்தா மாவட்ட ஆட்சியாளராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,

“தேர்வு என்பது வெறும் நம்பர்களின் விளையாட்டு மட்டுமே. உங்கள் திறமையை நிரூபிக்க உலகில் வேறு அதிகமான களங்கள் உள்ளன. எனவே தேர்வுகளில் தோல்வியடைந்தால் அங்கேயே தேங்கி விடாமல், தொடர்ந்து முன்னேறி உங்களுக்கான களங்களைத் தேர்ந்தெடுங்கள்,” என அவர் தெரிவித்திருந்தார்.

வெறும் அறிவுரைகள் மட்டும் போதாது என, தானும் அப்படி நம்பர்களின் விளையாட்டைக் கடந்து வந்தவன் தான் என்பதை தெளிவுப்படுத்த, இந்தப் பதிவில் அவர் தனது 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைத்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு மாவட்டத்தையே ஆளக்கூடிய பணியில் இருக்கும் அவானிஷ், தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் 44.5 சதவீத மதிப்பெண்களையும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டேனே என முடங்கிப் போய் இருந்தால் இன்று தான் ஒரு மாவட்ட ஆட்சியாளராக உருவாகி இருக்க முடியாது என தன் வாழ்க்கைப் பாடம் மூலம் அவர் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மறைமுகமாக அறிவுரை கூறி இருக்கிறார்.

இப்படி அதிரடியாக தனது மதிப்பெண் பட்டியலை அவானிஷ் வெளியிட்டதன் பின்னணியில் ஒரு உருக்கமான காரணம் உள்ளது. கடந்த வாரம் சட்டீஸ்கர் மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர், சோகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அந்தச் செய்தியைப் படித்து வேதனையடைந்த அவானிஷ், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில்,

“இன்றைய சூழலில் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய எவ்வித தடையும் இல்லை. ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பள்ளி மதிப்பெண்கள் மட்டும் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் மாற வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார் அவானிஷ்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் அனைவருக்குமே வெற்றி சாத்தியப்பட்டு விடுவதில்லை. அனைவராலுமே முதல் இடத்தை பெறுவது என்பது இயலாத காரியம். எனவே, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பள்ளிகள் மட்டுமல்ல, பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். அதை விடுத்து மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்ற மனநிலையை மாணவர்களிடத்தில் விதைக்கக் கூடாது என்பதற்காகத் தான் அவானிஷ் தனது மதிப்பெண்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வாழும் உதாரணமாக மாணவர்களின் நலனுக்காக அவானிஷ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அவானிஷை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ‘நிச்சயமாக நீங்கள் பல மாணவர்களுக்கு உத்வேகம் தரும் முன்னுதாரணமாக இருப்பீர்கள்’ என அவர்கள் தங்களது கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

அவானிஷைப் போலவே வாழ்க்கையில் வெற்றி பெற்ற மேலும் சிலரும் தங்களது கல்வி குறித்து பொது தளங்களில் வெளிப்படையாக பேசினால், வளரும் தலைமுறைக்கு மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற தெளிவு இன்னும் மேம்படும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையும் படிங்க: '10ம் வகுப்பில் என் மகன் 60% மார்க்'- பெருமையுடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தாய்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


215+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags

Latest Stories