அங்கன்வாடி சமையல்காரர் ஆன பிரமிளா ஒடிசா எம்.பி. ஆகிய ஊக்கமிகு கதை!

5 வயதில் பால்ய திருமணம் ஆகி, சாதாரண பெண்ணாக வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து போராடி, முன்னேறி இன்று பாராளுமன்றத்தில் எம்.பி.யாக உயர்ந்தது வரை கடும் இன்னல்களைத் தாண்டி சாதித்தவர்தான் பிரமிளா.
0 CLAPS
0

பிரமிளா பிசோய் (68), ஒடிசாவில் அஸ்கா தொகுதியைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்.பி. நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பெண் எம்.பி.க்களில் ஒருவர்.

இந்தத் தேர்தலில் இவ்வளவு பெண்கள் எம்.பி.க்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், இந்த பெண்கள் அனைவரும் வெவ்வேறு தளங்களில் இருந்து இங்கு வந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், சிலர் பிரபலங்களின் மனைவி, மகள் என இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதில், சாதாரண பெண்ணாக வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து போராடி, முன்னேறி இன்று பாராளுமன்றத்தில் எம்.பி.யாக உயர்ந்தது வரை கடும் இன்னல்களைத் தாண்டி சாதித்தவர்தான் பிரமிளா.

பெண் என்பவள் வீட்டில் வைத்திருக்கும் அழகு பதுமையோ, குடும்பத்தில் சமைத்து, துவைத்துப் போடும் பணியாளோ, சமூகம், சாஸ்திரம் என்ற பெயரில் அடக்கி வைக்கப்படும் அடிமையோ அல்ல.

பெண் என்பவள் ஓர் உயிர் சக்தி. அவளுக்கும் உணர்வுகள் உண்டு. அவளுக்கும் லட்சியம் உண்டு. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிப்பதைப் போல, அரசியலிலும் கால் பதித்து மக்கள் சேவையாற்ற இயலும் என நிருபித்தவர்.

பிரமிளாவின் வாழக்கை ஓர் சுவாரசியம் நிறைந்த கதை. ஆனால் போராட்டங்கள் நிறைந்த, கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் கூடிய லட்சியத்தை அடையத் துடிக்கும் பெண்களுக்கு உதாரணமாக கூறத் தகுதியான உயர்ந்த கதை.

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டம், நலகன்ட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமிளா. இவருக்கு பால்மணம் மாறதாக பிஞ்சாக இருந்த 5 வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டது. இதனால் அவரது பள்ளிப் படிப்பு 3ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கன்வாடியில் சமையல் பணியாளராகப் தனது பணியைத் தொடங்கினார். ஆனால் இந்த வேலை அவருக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அவர் தனது திறமைகளை மேம்படுத்தி சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபட விரும்பினார். அதற்கான வழிகளைத் தேடினார்.

அப்போதுதான் அவர் தேடிய வழி அவரது கண்களுக்குப் புலப்பட்டது. முதலில் ஒரு சுய உதவிக்குழுவில் சேர்ந்தார். இதுவே அவரது பொதுவாழ்க்கையின் சமூக மேம்பாட்டுக்கான அவரது பணியின் முதல் மைல்கல்லாக அமைந்தது.

தொடர்ந்து, அவரது கடினமான உழைப்பு, பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான அர்ப்பணிப்பு உணர்வு போன்ற அவரது நற்குணங்கள் அவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன.

ஆம் அவர் ஒடிசாவின் பெண்களின் சுய உதவிக்குழு இயக்கமான ’மிஷன் சக்தி’யின் பிரதிநிதியானார். இதைத் தொடர்ந்து சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும், அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதிலும், வருமானத்தை பெருக்குவதிலும் பாடுபட்டார்.

மேலும், இப்பெண்களின் குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழுவில் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப ஊக்குவித்தார். மேலும், அவர் தனது கிராமம் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் சுகாதாரம், ஊட்டச்சத்து, எழுத்தறிவித்தல் உள்பட பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரது கடும் முயறசியால் இவரது கிராமம் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் பிரமிளா, தனது குடும்பத்தையும் எவ்வித குறையும் இன்றி பராமரித்து வந்தார். ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் இவர் ஒரு சாதாரண விவசாயியாகத்தான் தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இவரது மகன்களில் ஒருவர் தேநீர் கடைநடத்தி வருகிறார், மற்றவர் மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

நட்ட விதைகள் வீணாகாது முளைத்து பலன் தருவது போல, இவர் ஆரம்ப காலம் தொட்டு செய்து வந்த மக்கள் நலப் பணிகள் இவரது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இவர் பாஜகவின் மதிப்புமிக்க தொகுதியான அஸ்கா பாராளுமன்றத் தொகுதியில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கால் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, பெரும்பாலானோரின் புருவங்கள் உயர்ந்தன. ஏனெனில் அத்தொகுதியில் நின்றுதான் 3 முறை நவீன் பட்நாயக் வெற்றி பெற்றுள்ளார். மேலும், அத்தொகுதியில் நன்கு படித்த உயர்குல மகளிரை நிறுத்த வாய்ப்பிருந்தபோதும், பிரமிளாவை நவீன் பட்நாயக் நிறுத்தியது ஒடிசாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையின் தொடக்கமாகவே பார்க்கப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவினரின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட மிஷன் சக்தியின் முகமாகவே பிரமிளா வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அனைவரின் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சியளிப்பதுபோல, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அனிதா சுபதர்ஷினியை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் பிரமிளா.

பட உதவி - தி இந்து

வாழ்க்கை முழுவதும் ஓடியாடி உழைத்தவர் இன்று தனது 68 வதிலும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற ஓடிக் கொண்டுதான் இருக்கிறார். ஆரம்பம் முதலே இவரது சேவைகளைப் பெற்றவர்கள், இந்த வயதிலும் இவரின் சேவைகள் தேவை என எண்ணித்தானோ என்னவோ அவருக்கு வாக்களித்துள்ளனர்.

உழைப்பதற்கு வயது முக்கியமல்ல. சமுதாயத்துக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணமே நமது உடலுக்கு ஆற்றலை அளித்து மக்கள் பணியாற்றத் தூண்டும் என்கிறார் பிரமிளா.

வாழ்க்கையில் கீழ்நிலையில் ஓர் சாதாரணப் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று பாரதமே நிமிர்ந்து பார்க்கும் பாராளுமன்றத்தில் உறுப்பினராக அமர்ந்து மக்கள் சேவையாற்றுவது என்பது சாதாரணமல்ல, ஓர் பெரிய சாதனையே ஆகும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனத் துடிப்பவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கடைமையாற்றினால் உயர்வு நிச்சயம் எனக்கூறும் பிரமிளாவின் வாழ்க்கை ஓர் உற்சாக டானிக் என்றால் மிகையல்ல.

Latest

Updates from around the world