மகள் திருமணத்திற்காக சேமித்த பணத்தில் 5 குடும்பங்களுக்கு வீடு கட்டிய கொத்தனார்!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டியைச் சேர்ந்தவர் சுந்தரன். கட்டிட மேஸ்திரியான இவர், தன்னுடைய மகளின் திருமணத்திற்காக சிறுகச் சிறுக பணம் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் பணியில் சேர்ந்துள்ள சுந்தரனின் மகள் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், தன்னுடைய திருமணத்திற்கு சேமித்து வைத்த பணத்தை மனிதாபிமானம் சிறக்கும் விதத்திலான காரியத்திற்காக செலவிடவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தானே கட்டிடம் கட்டும் தொழிலில் உள்ளதால் 5 ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க சுந்தரன் மற்றும் அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதன்படி, கொல்லக்கடாவில் 750 சதுர அடியில் இரண்டு படுக்கையறை, சமையலறை, குளியலறை, திண்ணை முற்றம் மற்றும் ஹால் கொண்ட 5 வீடுகளைக் கட்டியுள்ளனர்.
5 வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும் விதத்தில் பொதுவாக ஒரு கிணறும் தோண்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் பயனாளர்களுக்கு திருவோணம் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
இந்த வீடுகளைக் கட்டுவதற்கு ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுந்தரனின் மனைவி ஷீனா மற்றும் அவரின் மகள்கள் சோனா, சயந்தா வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட சுந்தரன் தன்னுடைய சொந்த ஊரான வட்டியராவில் இலவச வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
கட்டுமானத் துறையில் கொத்தனாரான சுந்தரன் அடைந்துள்ள வெற்றியின் காரணமாகவே மனிதாபிமானத்தை வளர்க்கும் விதமான செயல்களில் அவர் மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்ய உதவியாக அமைந்துள்ளது. மகள் திருமணத்திற்கு சேமித்த பணத்தோடு மற்றவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்று வீடுகளைக் கட்டி முடித்துள்ளார் இவர்.
வீடுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளர்கள் விண்ணப்ப முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 165 பேர் வீடு கோரி விண்ணப்பித்த நிலையில், தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகு பச்சயம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 3 குடும்பங்கள் மற்றும் ஐயன்குன்னு பஞ்சாயத்தைச் சேர்ந்த 2 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஓணம் பண்டிகையின் போது இந்த 5 குடும்பங்களும் புது வீடுகளில் குடியேற உள்ளனர். அது மட்டுமின்றி அவர்களின் உடனடி செலவிற்காக தலா ரூ.20 ஆயிரம் ரொக்கமும், மெத்தை, படுக்கை உள்ளிட்ட இதர வசதிகளும் அந்த குடும்பங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட உள்ளது. 5 வீடுகளில் முதல் வீடு மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு அளிக்கப்பட உள்ளது.
சாதாரண கொத்தனாராக இருந்தாலும் மனிதாபிமான சிந்தனை அடிப்படையில் வாழும் உதாரணங்களாக இருக்கும் சுந்தரன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஈட்டும் வருமானத்தை பூட்டி வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவ தானம் செய்யும் இவர்களின் செயல் மற்றவர்களுக்கு மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்த்துகிறது.
1 லட்சம் ஏழை மாணவர்கள் 5 கோடி ரூபாய் கல்வியுதவி பெற உதவிய 80 வயது ஆசிரியர்!