'4 வயதில் கண்ட கனவு மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் நிறைவேறியது’ - ஆர்த்தி சம்பத்

‘மாஸ்டர் செஃப் தமிழ்’ மூலமாக நடுவராக அறிமுகமாகி தமிழக மக்கள் மத்தியில் ‘நியூயார்க் தமிழச்சி’ என பிரபலமான செஃப் ஆர்த்தி சம்பத் தனது சமையல் கலை பயணம், ஹோட்டல் நடத்தும் தொழில்முனைவு முயற்சி போன்ற பல சுவாரசியமானவற்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
1 CLAP
0

சமையல் போட்டி என்றாலே உணவுப்பிரியர்களின் மனதில் வருவது ‘மாஸ்டர்செஃப்’ தான். சர்வதேச அளவில் பிரபலமான MasterChef பல நாடுகளில், ஆங்கில மொழியில் வெளிவந்தாலும், அதனைத் தேடிப் பார்த்து ரசித்துவந்த இந்திய ரசிகர்களுக்காக வெளிவந்தது ‘மாஸ்டெர்செஃப் இந்தியா’.

ஹிந்தியில் மட்டுமே ஒளிப்பரப்பாகி வந்த மாஸ்டர்செஃப், தமிழில் முதன்முறையாக வெளிவந்து தனக்கான ரசிகர்களைப் பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து நடத்த, 3 முன்னணி செஃப்கள் நடுவர்களாக வந்து நளபாகத்தின் சிறப்புக்களை அழகாய் வெளிப்படுத்தினர்.

அதில், நடுவர்களில் எல்லாரையும் வியக்கவைத்தவர் ‘நியூயார்க் தமிழச்சி’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட செஃப் ‘ஆர்த்தி சம்பத்’. அமெரிக்காவில் செட்டில் ஆன இவர், அங்கு பிரபல சமையல் போட்டி நிகழ்ச்சியான ‘Chopped’-ல் கலந்துகொண்டு வெற்றிப் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர்.

ஆனால், அந்த வெற்றியைத் தாண்டி அவர் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ மூலமாக நடுவராக அறிமுகமாகி தமிழக மக்களிடம் பிரபலம் ஆகி, நமக்குப் பிடித்துப்போன நியூயார்க் தமிழச்சி ஆனார்.

சென்னையில் பிறந்து, மும்பையில் வளர்ந்து அமெரிக்காவில் சமையல் வல்லுனராகத் திகழும் ஆர்த்தி சம்பத் உடன் யுவர்ஸ்டோரி தமிழ் சார்பாக பிரத்யேகமாக உரையாடியதில் இருந்து சுவாரசியமான் பக்கங்கள்...

யுவர்ஸ்டோரி: ஆர்த்தி, செஃப் ஆர்த்தி ஆனது எப்படி? எப்போது இந்த கனவு தொடங்கியது?

செஃப் ஆர்த்தி: நான் சென்னையில் பிறந்து மும்பை புறநகர் பகுதியில் வளர்ந்தேன். என் அப்பாவும் சகோதரரும் பொறியாளர்கள், குடும்பத்தில் பலர் டாக்டர்கள். அதனால், நானும் மருத்துவரோ, இஞ்சினியரோ ஆகவேண்டும் என்பதே அம்மா-அப்பாவின் விருப்பம். ஆனால், எனக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பு, கலை, கைவினை வேலைகள் உள்ளிட்ட படைப்பாற்றலுடன்கூடிய செயல்களில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. பள்ளியில் நடக்கும் நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்பேன்.

அதேபோல், சிறு வயதிலிருந்து உணவின் மீது தீராக் காதல். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவேண்டும் என்பதில் அம்மா அதிக அக்கறை காட்டுவார். சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார்.

பொதுவாகவே வேண்டாம் என்பதை செய்து பார்த்துவிடவேண்டும் என்று நினைப்போம் அல்லவா? அதுபோலவே நானும் செய்தேன். பள்ளியில் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் படித்ததால் நண்பர்கள் பள்ளிக்குக் கொண்டு வரும் வெவ்வேறு உணவு வகைகளைப் பகிர்ந்துகொண்டு சாப்பிடுவோம். அந்த நினைவுகள் எனக்குள் எப்போதும் பசுமையாகப் பதிந்திருக்கின்றன.

11ம் வகுப்பு படித்த சமயத்தில், வளர்ந்து என்ன ஆகவேண்டும் என்கிற பேச்சு வரும்போது நான் நடிகையாக வேண்டும் என்றேன். சிறுவயது முதல் என் தோற்றம், நிறம் குறித்த கேலிப் பேச்சுக்களைக் கேட்டு வளர்ந்துள்ளேன். அதனால், நடிகையாக என் தோற்றம் சரிவராது என்பதே அதற்கு பதிலாக இருந்துள்ளது. அது என் மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

கோடை விடுமுறைக்கு சென்னையில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு நாங்கள் செல்வது வழக்கம். 13 வயது இருக்கும்போது அப்படிச் சென்றபோது என் பாட்டி என்னை சமையல் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். அதுதான் என்னுடைய சமையல் பயணத்தின் தொடக்கப் புள்ளி.

யுவர்ஸ்டோரி: சமையல் தான் இனி உங்கள் கேரியர் என எப்போது முடிவு எடுத்தீர்கள்?

செஃப் ஆர்த்தி: சென்னையில் சமையல் வகுப்பு முடிந்து ஊருக்குத் திரும்பியதும் சமையலை மேலும் ஆர்வமாக முயற்சி செய்து பார்க்க விரும்பினேன். அப்போது எனக்கு 14 வயதிருக்கும். அம்மாவின் ரெசிபிக்களை முயற்சி செய்தேன். இதையே தொழில் வாழ்க்கையாகவும் தொடர முடிவு செய்தேன்.

அந்த சமயத்தில் முறையாக சமையல் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிகம் இல்லை. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் துறை தொடர்பாக பயிற்சியளிக்கும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள் இருந்தன. இதில் நுழைவுத் தேர்வு எழுதினேன். IHM ஜெய்ப்பூரில் சேர்ந்தேன். மூன்றாண்டு கால பயிற்சி. எக்ஸ்டர்ன்ஷிப்பிற்காக ஓபராய் ராஜ் விலாஸ் சென்றேன்.

காலை 9.30 மணிக்கு ஹோட்டலுக்கு செல்வேன். கிட்டத்தட்ட 10 மணி நேரம் நின்றுகொண்டே இருப்பேன். ஆண்கள் அதிக ஆதிக்கம் செய்துவந்த துறையில் வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இப்பயிற்சிக்குப் பிறகு கல்லூரிப் படிப்பு முடிந்தது, பிறகு தாஜ் ஹோட்டலில் வேலை கிடைத்தது. இங்கு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் 12-13 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் நானும் இருந்தேன். டெல்லியில் தாஜ் குழுமத்தின் வெவ்வேறு ஹோட்டல்களில் பணிபுரிந்தேன்.

கடும் போராட்டங்களை சந்தித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகாலம் இதிலுள்ள நுணுக்கங்களைக் கற்ற பின்னர் இத்துறையில் மேலும் ஆர்வம் அதிகரித்து, ஒரு பெண் செஃப் ஆக இத்துறையில் முத்திரை பதிக்க விரும்பினேன்.

யுவர்ஸ்டோரி: குடும்பத்தினர் இத்துறையில் செயல்பட எந்த அளவிற்கு ஒத்துழைப்பு அளித்தார்கள்?

செஃப் ஆர்த்தி: உணவுப் பிரிவில் செயல்படுவது குறித்து அவர்களுக்குத் தெரியாது. கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு எம்பிஏ படிக்கச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த சமயத்தில், விருந்தோம்பல் துறையில் படித்த பல பெண்கள் படிப்பை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால், நான் இதில் தீவிரமாக இருப்பதை பார்த்து பெற்றோர்கள் ஆதரவு அளித்தனர்.

யுவர்ஸ்டோரி: நீங்கள் அமெரிக்கா எப்போது சென்றீர்கள்? முதல் இந்தியராக ‘Chopped' கலந்து கொண்டு வெற்றி பெற்றது எப்படி?

செஃப் ஆர்த்தி: நான்கரை ஆண்டுகள் தாஜ் ஹோட்டலுடன் இணைந்திருந்தேன். வீட்டில் திருமண பேச்சு வந்தது. ஓராண்டு வரை அவகாசம் கிடைத்தது. உணவுத் துறை குறித்து புரிந்துகொள்ள நான் பல பகுதிகளுக்கு பயணம் செல்ல விரும்பினேன். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய செஃப்கள் பற்றி படித்துத் தெரிந்துகொண்டேன்.

சமையல் தொடர்பாக பயிற்சியளிக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதே என் விருப்பம். அமெரிக்காவில் ரோட் ஐலேண்ட் ஜான்சன் & வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். தாஜ் ஹோட்டலில் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் அமெரிக்கா வந்ததும் மீண்டும் எக்ஸ்டர்ன்ஷிப்பில் ஈடுபடவேண்டியிருந்தது.

பின்னர், நியூயார்க் ரெஸ்டாரண்டில் சேர்ந்தேன். படிப்பு முடித்த பிறகு அதே ரெஸ்டாரண்டில் வேலையில் சேர்ந்தேன். அப்போதுதான் Chopped சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆர்லாண்டோவில் ‘அமெரிக்கன் ஜிம்கானா’ என்கிற அசிஸ்டிவ் ரெஸ்டாரண்ட் திறக்க உதவினேன். மிகவும் பரபரப்பான வேலைகளுக்கு நடுவில் போட்டியில் கலந்துகொண்டேன்.

யுவர்ஸ்டோரி: இந்தியாவில் பெண் செஃப்களின் நிலை கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டீர்கள். அமெரிக்காவில் பணிச்சூழல் எப்படி இருந்தது?

செஃப் ஆர்த்தி: அமெரிக்காவில் இந்தியாவைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட சூழல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், மேற்கத்திய நாடுகளிலும் பாலின வேறுபாடு சூழல் இருந்ததை உணரமுடிந்தது.

ஆண்கள், பெண்களை சிறுபான்மையினராக நடத்தும் போக்கும் காணப்பட்டது. பெண்களை பெரிதாக ஊக்கப்படுத்தவில்லை. நாமாகவே நம்மை ஊக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். கடினமான சூழல்கள் வந்தாலும் நாமே நம்மைத் திடப்படுத்திக்கொள்ளவேண்டும். நம்முடைய இலக்கில் உறுதியாக இருக்கவேண்டும்.

எனக்கு இளம் வயதில் வழிகாட்ட யாரும் இல்லை, எனவேதான் ஃபுட் ஷோவில் பங்கேற்க வேண்டும் என்று தோன்றியது. உணவுத் துறையில் ’மீ டூ’ பிரச்சாரம் பிரபலமானதால் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களை துன்புறுத்திய முதலாளிகள் பலரின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன.

யுவர்ஸ்டோரி: அமெரிக்காவில் இந்திய உணவு வகைகளையும் புதிய சுவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமாக இருந்ததா?

செஃப் ஆர்த்தி: வெளிநாட்டவர்களுக்கு புரிய இந்திய உணவு வகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் வைக்கவேண்டி இருந்தது. இந்திய உணவுகள் விலை குறைவானவை, தரம் இல்லாதவை என அவர்களிடையே கருத்து நிலவியது. பல இந்திய செஃப்கள் தரமான உணவுகளை அறிமுகப்படுத்தியதால், அமெரிக்காவின் பெருநகரங்களில் இந்த மனநிலை மெல்ல மாறியதை உணரமுடிந்தது.

யுவர்ஸ்டோர்: ஒரு செஃப் ஆக டிவி நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்க காரணம் என்ன?

செஃப் ஆர்த்தி: ரெஸ்டாரன்ட் திறக்கவேண்டும் என்பதே என் விருப்பம். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சில செஃப் மக்களிடையே ஓரளவிற்கு பிரபலமாகியிருந்ததை கவனித்தேன். இவர்களது ரெஸ்டாரண்டில் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும்.

நான் மக்கள் மத்தியில் பிரபலமானால் என் ரெஸ்டாரண்ட் எளிதாக பிரபலமாகிவிடும் என்று நம்பினேன். அதுமட்டுமின்றி, மக்கள் மத்தியில் பெண் செஃப்களின் மதிப்பும், நிலையும் மாறும் என்று நினைத்தேன்.

பள்ளியில் படித்த நாட்களிலேயே நிறம் சார்ந்த பாகுபாடுகளை சந்தித்திருக்கிறேன். ஓப்ரா வின்ஃப்ரி எனக்கு கடவுள் போன்றவர். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவருக்கு சாத்தியப்படுமானால், நம்மாலும் முடியும் என நினைத்தேன். அழகான தோற்றம் இல்லை என்று நினைக்கும் என்னைப் போன்ற பலருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.

யுவர்ஸ்டோரி: இதுவரையிலான உங்கள் பயணத்தில், நீங்கள் எந்த வகையில் மேம்பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறீர்கள்?

செஃப் ஆர்த்தி: என்னுடைய இத்தனை ஆண்டு அனுபவத்தில் பணக்காரப் பிரிவினரின் சுவையறிந்து சமைக்கவும் கற்றுக்கொண்டேன். அதேபோல், ஃபுட் ட்ரக் நடத்திய அனுபவத்தைக் கொண்டு சாமானிய மக்களின் தேவையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

உங்கள் ரெஸ்டாரண்டில் நீங்கள் பெரிய செஃப் என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், அடிப்படை தேவையிருப்போருக்கு நீங்கள் பிரபலமானவரா, இல்லையா என்பது பொருட்டே அல்ல. அவர்களுக்குத் தேவை உணவு மட்டுமே.

இதில், எனக்குக் கிடைத்த பல வகையான அனுபவங்கள் மற்றவர்களின் தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவியுள்ளது. நல்ல செஃப் மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் என்னை செதுக்கியுள்ளது.

யுவர்ஸ்டோரி: வெளிநாட்டிற்குச் சென்று தொழில் தொடங்குவது எளிதல்ல. நீங்கள் அங்கு ஹோட்டல் துறையில் சந்தித்த சவால்கள் என்ன?

செஃப் ஆர்த்தி: செஃப் என்பதைத் தாண்டி தொழில்முனைவராக சிந்திக்கும்போது லாபம் ஈட்டவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும். உணவு ட்ரக் என்பது சிறியளவில் நடக்கும் தொழில். மூன்று செஃப் மட்டுமே உள்ளனர். இவர்களை முறையாக நிர்வகிக்கவேண்டும்.

ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டு கணக்கிடவேண்டும். செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து சிந்திக்கவேண்டும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியை யோசிக்கவேண்டும்.

செஃப் எனும்போது இதுபோன்ற சிந்தனைகள் இருக்காது. ஆனால், தொழில்முனைவோராக மேலே குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தவேண்டியிருந்தது. செஃப் என்பது தனிப்பட்ட நபரின் வளர்ச்சி. ஆனால், தொழில்முனைவில் என்னிடம் வேலை செய்வோரின் வளர்ச்சியையும் சேர்த்து நான் யோசிக்கவேண்டும்.

யுவர்ஸ்டோரி: நீங்கள் அமெரிக்காவில் இருந்த நிலையில் மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?

செஃப் ஆர்த்தி: பெருந்தொற்று சமயத்தில் நான் வேலை செய்த ரெஸ்டாரண்டில் வேலையை இழந்துவிட்டேன். உணவகங்கள் எல்லாமே மூடப்பட்டன. நான் குடும்பத்துடன் நேரம் செலவிட இந்தியா வந்திருந்தேன். அப்போதுதான் மாஸ்டர்செஃப் குழுவில் இருந்த என் நண்பர் அவர்கள் ஒரே ஒரு எபிசோடிற்காக கெஸ்ட் ஜட்ஜ் தேடுவதாகக் கூறினார். நானும் சம்மதித்தேன்.

பிறகு என்னை நடுவர்களில் ஒருவராக இருக்கமுடியுமா என்று கேட்டார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பயோடேட்டாவுடன் தமிழில் பேசி பதிவு செய்து அனுப்பச் சொன்னார்கள். இப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

யுவர்ஸ்டோரி: சிறுவயதில் நீங்கள் நடிகராக திரையில் தோன்றவேண்டும் என்ற கனவு இப்போது மாஸ்டர்செஃப் நிகழ்ச்சி மூலம் நிறைவேறியதாக கருதுகிறீர்களா?

செஃப் ஆர்த்தி: முதல் நாள் செட்டில் இருந்தபோதே எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

“4 வயதில் அந்த சின்ன ஆர்த்தி கண்ட கனவு இத்தனை ஆண்டுகள் கழித்து நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அதோடு, இந்த வாய்ப்பு மூலம் என்னைப் போன்ற பெண்கள் பலருக்கு நான் உந்துதலாக இருப்பேன் என்று சொல்லி விஜய் சேதுபதி ஊக்கமளித்தது மறக்க முடியாத தருணம்.”

நிகழ்ச்சியில் தோன்றுவதற்கோ பிரபலமாவதற்கோ நம் தோற்றம், பாலினம் போன்ற எதுவுமே தடையாக இருப்பதில்லை. இதை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்க விரும்புகிறேன்.

யுவர்ஸ்டோரி: மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் மறக்கமுடியாத அனுபவம் ஏதேனும் உள்ளதா?

செஃப் ஆர்த்தி: நான் என்னுடைய சிக்னேசர் டிஷ் தயாரித்த எபிசோடை என்னால் மறக்கவே முடியாது. என் பாட்டிகள் இருவருக்கும் அதை அர்ப்பணித்தேன்.

யுவர்ஸ்டோரி: இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

செஃப் ஆர்த்தி: பணிச்சூழல் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். பணி நேரங்கள் சரியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக, பணியிடத்தில் பெண் செஃப்கள் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும்.

யுவர்ஸ்டோரி: இந்தியாவில் தொழில் தொடங்கும் திட்டம் உள்ளதா?

செஃப் ஆர்த்தி: சென்னையிலும் மும்பையிலும் ரெஸ்டாரண்ட் திறக்க விரும்புகிறேன். சென்னையில் என் அப்பாவிற்கு சொந்தமான இடம் இருக்கிறது. அங்கு கஃபே அல்லது ரெஸ்டாரன்ட் தொடங்கவேண்டும் என்பது அவரது கனவு. அதை நிறைவேற்ற விரும்புகிறேன். 2023ம் ஆண்டில் இது நடக்கலாம். மாஸ்டர் செஃப் தமிழ் அடுத்தடுத்த சீசன்களிலும் பங்கேற்க விரும்புகிறேன்.

யுவர்ஸ்டோரி: எந்த மாதிரியான உணவு வகையைத் தேர்வு செய்வீர்கள்?

செஃப் ஆர்த்தி: சந்தையை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும். கலவையான சுவைகளில் நிச்சயம் இருக்கும்.

விரைவில் நியூயார்க் தமிழச்சியின் சுவையை சென்னை மண்ணில் ருசிக்கக் காத்திருக்கிறோம் எனக்கூறி உரையாடலை முடித்துக்கொண்டேன்.