சம்பளம் மற்றும் சலுகையுடன் எவ்வளவு வேணும்னாலும் லீவு திட்டம்: Meesho அறிவித்துள்ள புதிய விடுப்பு திட்டம்!

சமூக வர்த்தக நிறுவனம் மீஷோவின் புதிய கொள்கை, தனது ஊழியர்கள் 365 நாட்கள் வரை, மருத்துவ மற்றும் ஒரு சில மருத்துவ அல்லாத காரணங்களுக்காக சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழி செய்கிறது.
0 CLAPS
0

இ-காமர்ஸ் யூனிகார்ன் நிறுவனம் 'Meesho' 'மீஷோ' மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத காரணங்களுக்கான புதிய சம்பளத்துடன் கூடிய வரம்பில்லாத விடுப்பு கொள்கையை அறிவித்துள்ளது.

ஊழியர்கள், 365 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும். தீவிர நோய் காரணமாக, ஊழியர் அல்லது ஊழியரின் நெருக்கமான குடும்ப உறுப்பினருக்கு தொடர் மருத்துவமனை சிகிச்சை தேவை எனில் இது பொருந்தும்.

ஊழியர்கள் தங்களுக்கு நோய் எனில் இந்த காலம் முழுவதும் முழு சம்பளத்தையும், மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சை எனில், ஊதியத்தில் 25 சதவீதத்தை மூன்று மாதங்களுக்கு பெறமுடியும், என எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

நிதி இழப்பீடு தவிர, ஊழியர்கள் காப்பீடு, பிஎஃப் சேமிப்பு உள்ளிட்ட கூடுதல் பலன்களை ஊழியர்கள் தொடர்ந்து பெறலாம்.

தங்கள் தனிப்பட்ட இலக்குகளை நோக்கிச்செல்லும் ஊழியர்களுக்கும் இந்த கொள்கை பொருந்தும். எனினும் பொதுவான, மருத்துவம் அல்லாத விடுமுறைகளுக்கு இது பொருந்தாது.

"தனிப்பட்ட இலக்குகளுக்காக ஊழியர்களுக்கு நீண்ட விடுப்பு தேவைப்படுவது அல்லது அவர்கள் உடலநலக்குறைவு அல்லது குடும்ப உறுப்பினரின் உடல்நலக்குறைவு காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுப்பு தேவைப்படுவதை உணர்ந்துள்ளோம். இந்தத் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கை அமைகிறது,” என மீஷோ சி.எச்.ஆர்.ஓ, அசிஷ் குமார் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

பல ஊழியர்கள் இந்த கொள்கையை பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்காவிட்டாலும், தேவையான ஊழியர்களுக்கு இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ஆட்குறைப்பு செய்தாலும், மீஷோவில் 2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நிறுவனம், கடந்த ஆண்டு சாப்ட்பேங்க் தலைமையில் 300 மில்லியன் டாலர் நிதி திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது.

ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்