4 ஆண்டுகளில் 7.5 கோடி டர்ன்ஓவர்: ஆண்களின் அந்தரகப் பகுதி வாஷ், கிரீம்கள் தயாரிக்கும் நண்பர்கள்!

இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சர்தக் தனேஜா, ராகவ் சூட் இருவரும் ஆண்களுக்கான பிரத்யேக பராமரிப்பு பொருட்களின் தேவை இருப்பதை உணர்ந்து நிறுவனம் தொடங்கி லாபகரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
1 CLAP
0

இந்தியாவில் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் என்றாலே பெண்களுக்கானது என்று கருதப்பட்ட காலம் உண்டு. ஆனால் நுகர்வோர் தேவைகள் தொடர்ந்து மாறி வருகிறது. இதற்கு ஏற்றார்போல், இவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில்முனைவோர்களும் புதுமையான தீர்வுகளை உருவாக்கி வெற்றி பெறுகிறார்கள்.

இப்படித்தான் ஆண்களுக்கான தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் நண்பர்களான சர்தக் தனேஜா மற்றும் ராகவ் சூட்.

சர்தக் தனேஜா, ராகவ் சூட் இருவரும் சிறு வயது நண்பர்கள். இவர்கள் 2017-ம் ஆண்டு ஸ்கின் எலிமெண்ட்ஸ் (Skin Elements) என்கிற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்களது முதல் தயாரிப்பு ஆண்களின் அந்தரங்க பகுதியை சுத்தப்படுத்த உதவும் ஃபோம்.

“அழகு மற்றும் சுகாதாரப் பிரிவில் நாங்கள் செயலபடத் தொடங்கியபோது மக்களிடையே டி2சி பிரபலமடைந்து கொண்டிருந்தது. பல பிரபல பிராண்டுகள் ஏற்கெனவே செயல்பட்டு வந்தன. தனிநபர் சுகாதாரப் பிரிவில் எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றே நினைத்தோம். ஆண்களுக்கான பிரத்யேக தயாரிப்பில் கவனம் செலுத்தி சந்தையில் பிரபலமடைந்தோம்,” என்கிறார் சர்தக்.

சர்தக், ராகவ் இருவரும் தங்களது சொந்த சேமிப்பில் இருந்து 10 லட்ச ரூபாய் திரட்டி இமாச்சலப்பிரதேசத்தில் ‘ஸ்கின் எலிமெண்ட்ஸ்’ தொடங்கினார்கள்.

இந்தியாவில் தனிநபர் சுகாதாரப் பிரிவில் ஸ்கின் எலிமெண்ட்ஸ் முன்னோடியாக செயல்பட்டதாக சர்தக் தெரிவிக்கிறார்.

பிரத்யேக பிரிவு

இந்தியாவில் தனிநபர் பராமரிப்புத் துறை சந்தை 3 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”அமெரிக்கா போன்ற நாடுகளில் தனிநபர் சுகாதாரச் சந்தை பாலினம் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் ஆய்வு செய்யத் தொடங்கியபோது தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் பெண்களுக்கானதாகவே இருந்தது. ஆண்களுக்கென அழகு பிராண்டுகள் மட்டுமே இருந்தன,” என்கிறார் ராகவ்.

இமாச்சலப் பிரதேசத்தின் பட்டி பகுதியில் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்கள் செயல்படுகின்றனர். நிறுவனர்கள் இருவரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் உள்நாட்டிலேயே தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

தொழில் நகரமான பர்வனூ பகுதியில் மூன்றாம் தரப்பு உற்பத்தியாளரை அணுகினார்கள். தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் நிறுவனர்களுடன் இந்த உற்பத்தியாளரும் இணைந்துகொண்டார்.

இவர்கள் அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தப்படுத்த உதவும் வாஷ். அதைத் தொடர்ந்து சரும எரிச்சலைத் தடுக்கும் க்ரீம் தயாரித்தனர். இது விளையாட்டு வீரர்களின் பிரத்யேக தேவையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது.

“சரும எரிச்சலுக்கு மக்கள் வேசலின் பயன்படுத்துவது வழக்கம். இது சரியான தீர்வல்ல. எனவே புதிய தயாரிப்பை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 550 யூனிட்கள் விற்பனை செய்கிறோம்,” என்றார்.

ஸ்கின் எலிமெண்ட்ஸ் தயாரிப்புகள் ஆரம்பத்தில் அமேசான் தளம் மூலமாகவே விற்பனை செய்யப்பட்டன. தற்போது அனைத்து முன்னணி மின் வணிக தளங்களிலும் கிடைக்கின்றன. தொடக்கத்தில் இருந்தே வணிகம் லாபகரமாக செயல்பட்டு வருவதாக ராகவ் குறிப்பிடுகிறார். இந்நிறுவனம் Redcliffe Capital தீரஜ் ஜெயின் தலைமையில் 102 ஆயிரம் டாலர் சீட் நிதி உயர்த்தியுள்ளது.

இன்று இந்த பிராண்ட் சுகாதாரம், நறுமணப் பொருட்கள், சரும எரிச்சலைத் தடுக்கும் தீர்வுகள், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என 19 தயாரிப்புகளை வழங்குகிறது. 2017-ம் ஆண்டு இந்நிறுவனம் குருகிராமில் இரண்டாவது அலுவலகத்தைத் திறந்தது.

போட்டி மற்றும் சவால்

தற்போது Beardo, Pee Safe போன்ற பிராண்டுகள் ஆண்களுக்கான சுகாதாரப் பிரிவில் செயல்படுகின்றன். சந்தையில் போட்டி இருப்பினும் ஸ்கின் எலிமெண்ட்ஸ் இந்தியா, அமெரிக்கா, மலேசியா, யூகே ஆகிய நாடுகளில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை வென்றுள்ளது.

2021 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 7.5 கோடி ரூபாய்.

இந்நிறுவனம், தனிநபர் பராமரிப்புப் பிரிவில் அந்தரங்க பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தயாரிப்புகளை வழங்குவதால் இவற்றை சந்தைப்படுத்தும் நபர்களைக் கண்டறிவதில் ஆரம்பத்தில் சிரமத்தை சந்தித்துள்ளனர். பலர் தயக்கம் காட்டியதாகத் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இதன் தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கத் தொடங்கியதும் பயனர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் கூடுதலாக 10 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதாக சர்தக் தெரிவிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world