சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலை வாங்கிய எம்ஜிஎம் மருத்துவமனை குழுமம்!

மருத்துவமனையாக மாற்ற திட்டம்?!
39 CLAPS
0

சென்னை மற்றும் கோயம்புத்தூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான லீ மெரிடியன் ஹோட்டல் தற்போது புதிய மாற்றம் காணவிருக்கிறது. ஆம் இந்த இரண்டு நகரங்களில் இருக்கும் இந்த இரண்டு ஹோட்டல்களையும் சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையை நடத்தி வரும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ரூ.423 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் பிரைவேட் நிறுவனம் லீ மெரிடியன் ஹோட்டல் நிர்வாகத்தை நடத்தி வந்தது. சென்னையில் கிண்டியில் இருந்தது இந்த ஹோட்டல். இதற்கிடையே, 2020 ஆம் ஆண்டில், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், கடன் பாக்கிக்காக இந்திய சுற்றுலா வளர்ச்சி நிதிக் கழகம், கம்பெனி திவால் சட்ட விதிகளின் படி ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக, திவால் நிலை கொண்டுவந்தது. இந்த திவாலானது, கடன் பாக்கிக்காக கடந்த 2016ல், தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாய சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்ததால் வந்தது.

இந்த ஹோட்டல்களை வாங்க பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) எம்.ஜி.எம். ஹெல்த்கேரின் தலைவரும் எம்.டி.யுமான எம்.கே.ராஜகோபாலன் வாங்க ஒப்புதல் அளித்தது. அதன்படி,

1600 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் இந்த ஹோட்டல்களை, ரூ.423 கோடி கொடுத்து எம்.ஜி.எம் குழுமம் வாங்கியிருக்கிறது. எம்.கே.ராஜகோபாலன் ஏற்கனவே ரூ.150 கோடியை திரட்டியுள்ளதாகவும், மீதமுள்ள 273 கோடி ரூபாய்க்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிதியுதவி கோரியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கோயம்புத்தூரில் இருக்கும் ஹோட்டலை அப்படியே ஹோட்டலாக நடத்தவுள்ளதாகவும், சென்னையின் கிண்டியில் உள்ள ஹோட்டலை மட்டும் மருத்துவமனையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பீடு தொடர்பாக பழனி ஜி பெரியாசாமி தலைமையிலான அசல் விளம்பரதாரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் பேசிய பெரியசாமி,

“சொத்துக்கள் மிகக் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதற்கு குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது," என்றுள்ளார் . இந்த சொத்து மதிப்பு 1,600 கோடி ரூபாய் என்று குழு வாதிட்டதால் ஆட்சேபனை எழுந்துள்ளது. செப்டம்பர் 2019ல் செய்யப்பட்ட மற்றொரு மதிப்பீட்டை விட சொத்தின் மதிப்பீடு குறைந்து 30% குறைவாக இருப்பதாக பெரியசாமியின் வழக்கறிஞர் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest

Updates from around the world