மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் சிறந்து விளங்கும் 'மில்க்பேஸ்கட்’
நான்கு நண்பர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்ட இரண்டு வணிக முயற்சிகள் தோல்வியை சந்தித்திருப்பினும் மூன்றாவது முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு கோடிகளில் வருவாய் ஈட்டுகின்றனர்.
தொழிலில் கடினமான சூழல்களைச் சந்தித்து பலர் தோல்வியைத் தழுவியிருந்தபோதும் சிலர் பிரச்சனைகளை துணிந்து எதிர்கொண்டு வெற்றியடைகின்றனர். இதில் சிலரது வெற்றி வெறும் சாதனையாக மட்டும் நின்றுவிடாமல் பல தொழில்முனைவோர்களுக்கு முன் உதாரணமாக திகழும் அளவிற்கு சிறந்ததாக அமைந்துவிகிறது.
அனந்த் கோயல் (தற்போதைய சிஇஓ), ஆசிஷ் கோயல், அனுராக் ஜெயின், யதீஷ் தல்வாடியா ஆகிய நான்கு நண்பர்களும் ஒன்றிணைந்து 2015-ம் ஆண்டு குருகிராமில் 'மில்க்பேஸ்கட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மில்க்பேஸ்கட் நிறுவனம் 2021-ம் ஆண்டு வரை வருடாந்திர வருவாயாக ஒரு பில்லியன் டாலர் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதுவரை மேஃபீல்ட் அட்வைசர்ஸ், பென்னெக்ஸ்ட், கலாரி கேப்பிடல், யூனிலிவர் வென்சர்ஸ், லெனோவோ கேப்பிடல், ப்ளூம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மில்க்பேஸ்கட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த நண்பர்களின் முந்தைய வணிக முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் இழந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் தோல்வியில் இருந்து புதிய படிப்பினைகளை கற்றுக்கொண்டனர். இந்த நண்பர்கள் ஒன்றிணைந்து முதலில் வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப சேவையளிக்கும் பெயிண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர். ஆனால் அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
அதைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியாக ரியல் எஸ்டேட் பிரிவில் செயல்பட்டனர். ஒரே ஆண்டில் 25 லட்ச ரூபாய் அளவிற்கு இழக்க நேர்ந்தது. இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்த நண்பர்கள் தோல்விக்கான காரணத்தை ஆராயத் தொடங்கினர்.
வணிக முயற்சி சிறப்பிக்க சந்தை குறித்த புரிதல் அவசியம் என்பதை உணர்ந்து சந்தையை ஆய்வு செய்தனர். பின்னர் மூன்றாவது முயற்சியாக 2015-ம் ஆண்டு ‘மில்க் பேஸ்கட்’ நிறுவனத்தைத் தொடங்கி வெற்றகரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிறுவனம் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் சேவையளிக்கிறது.
இன்று ’மில்க் பேஸ்கட்’ நிறுவனத்தின் வணிக மாதிரியை பல நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இந்நிறுவனம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.
மில்க் பேஸ்கட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் யூனிலிவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 72.73 கோடி ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது. இதுவே இந்நிறுவனத்தின் அதிகமான முதலீட்டுத் தொகையாகும். மில்க் பேஸ்கட் நிறுவனத்தின் 8,500-க்கும் அதிகமான SKUக்களில் இருந்து பால் அல்லாத பொருட்கள் மூலம் 70 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது.
வணிக முயற்சிகளில் தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தாலும் முறையான சந்தை புரிதலும் திட்டமிடலும் இருப்பின் அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றியை வசப்படுத்தமுடியும் என்பதையே இந்நிறுவனங்களின் வெற்றிப்பயணம் உணர்த்துகிறது.