ஆன்லைனில் அதிகம் ஷாப்பிங் செய்யும் மில்லினியல் தலைமுறை தாய்மார்கள்: ஆய்வு முடிவு!
false
true
இன்று இணையமும் சமூக வலைதளங்களும் நம்மைக் கட்டிப்போட்டுள்ளன. எங்கும், எதற்கும் மொபைல் போனை கையில் எடுக்கவேண்டிய காலமாக மாறிவிட்டது. வாழ்க்கை முறை மட்டுமல்ல நாம் வாங்கும் முறையும் வெகுவாக மாறிவிட்டது.
இந்தச் சூழலில் மில்லினியல் தலைமுறை தாய்மார்கள் இணையத்தை என்ன காரணத்திற்காக அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
YouGov நடத்திய இந்த ஆய்வில் மில்லினியல் தலைமுறை தாய்மார்கள் ஷாப்பிங் செய்யவும் சமூக வலைதளங்களில் புதிய பிராண்டுகளைக் கண்டறியவும் இணையத்தைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
26 முதல் 41 வயது வரையிலும் உள்ள தாய்மார்களில் பெரும்பாலானோர் பொருட்களையும் சேவைகளையும் பெற இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆடியோ அல்லது வீடியோ சார்ந்த பொழுதுபோக்கிற்கும் இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைதள செயலிகளைக் கண்டறிவது, தகவல்களைத் தேடித் திரட்டுவது, வேலை சம்பந்தப்பட்ட இ-மெயில் மெசேஜ், செய்திகள் படிக்க போன்றவற்றிற்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
புதிய பிராண்டுகளைக் கண்டறிய 89 சதவீதம் பேர் சமூக வலைதள செயலிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் இருக்கும் குழுக்களை 84 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். அதேபோல், சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்கள் (Influencers), வலைப்பதிவர்கள் (Bloggers) போன்றோர் மூலம் 52 சதவீதம் பேர் புதிய பிராண்டுகளைக் கண்டறிகின்றனர்.
“பெருந்தொற்று சூழல் நம் எல்லோரையும் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாற்றியுள்ளது. இந்தச் சூழலில் மில்லினியல் தலைமுறை தாய்மார்கள் தங்களது ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இணையத்தைத் தேர்வு செய்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை,” என YouGov அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தாய்மார்களில் பாதியளவிற்கும் மேற்பட்டவர்கள் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 41 சதவீதம் பேர் தயாரிப்பின் தரமதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
மில்லினியல் தலைமுறை தாய்மார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மை இல்லாத மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளையே விரும்புவதாக இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 76 சதவீத தாய்மார்கள் புதிய பிராண்டை முயற்சி செய்து பார்க்கத் தயக்கம் காட்டவில்லை. தரமான சருமப் பராமரிப்புப் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.
பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு ஏராளமானோர் மாறியுள்ள நிலையில் இந்தியாவில் டி2சி பிராண்டுகளும் அமோக வளர்ச்சியடைந்திருக்கிறது.
2020ம் ஆண்டில் 33.1 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்த டி2சி சந்தை 2025-ம் ஆண்டில் மும்மடங்கு வளர்ச்சியுடன் 100 பில்லியன் டாலர் மதிப்புடையதாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா