100% தடுப்பூசிப் போட்டுக் கொண்ட முன்மாதிரி இந்திய கிராமம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தடுப்பூசி தொடர்பான அச்சம் மற்றும் தயக்கங்களை போக்கி, கிராமத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் வெற்றி பெற்று முன்னோடி கிராமமாக விளங்குகிறது மகாராஷ்டிராவின் ஜனேபல்.
1 CLAP
0

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியே முக்கியப் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுவது முக்கியமாகிறது. ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சாவல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த பின்னணியில், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

மாநிலத் தலைநகர் மும்பையில் இருந்து 228 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜனேபல் எனும் கிராமம் தான் இப்படி நூறு சதவீதம் தடுப்பூசியை நிறைவேற்றி கவனத்தை ஈர்த்துள்ளது.

தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் அச்சம், தயக்கம் ஆகியவற்றை மீறி, தடுப்பூசி போடுவதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக வழிகாட்டும் முன்னோடி கிராமமாக ஜனேபல் விளங்குவதாக சர்வதேச பத்திரிகையான நேஷனல் ஜியாக்ரபிக் சிறப்புக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான கிராம மக்கள் போலவே இந்த கிராமத்தில் உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டியிருக்கின்றனர். தடுப்பூசி தொடர்பான இயல்பான அச்சம் ஒரு பக்கம் இருக்க, வாட்ஸ் அப் போன்றவற்றில் பகிரப்படும் பொய்த்தகவல்கள் இந்த அச்சத்தை பல மடங்காக அதிகரிக்கச்செய்துள்ளன.

ஜனவரி மாதம் தடுப்பூசித் திட்டம் துவங்கிய போது, வதந்திகளின் தாக்கத்தால் கிராம மக்கள் மத்தியில் பெரிய அளவில் தயக்கம் நிலவியது. மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு தடுப்பூசியின் பலன்களை எடுத்துக்கூறினாலும், அவர்கள் அச்சம் முழுமையாக விலகிவிடவில்லை.

விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்தால், நூறு பேர் வரவேண்டிய இடத்தில் 40 பேர் மட்டுமே வரும் நிலை இருந்தது. இதையும் மீறி, அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தால், மறு நாள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் பலரும் பின் வாங்கிவிடுவது வாடிக்கையாக இருந்தது.

”வாட்ஸ் அப் வதந்திகளே இதற்குக் காரணம். தடுப்பூசியால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என பரவும் செய்திகளே,” இந்த அச்சத்திற்கு முக்கியக் காரணம் என்கிறார் கிராம பஞ்சாயத்து தலைவரான கிருஷண கவாண்டே.

மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதிக பயன் ஏற்படவில்லை. காவல் துறையினரை பார்த்தாலே மக்கள் வீடுகளின் கதவை சாத்திவிடும் நிலை ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரி சயீத் புதன் கூறிகிறார்.

அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மத்தியில் இத்தகைய அச்சம் அதிகமாக இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில், கிராம மக்களை பாதுகாக்க தடுப்பூசி போட்டுவது அவசியமானது.

ஜனேபல் கிராமத்தில் இருந்தவர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றாலும், அருகாமையில் உள்ள கிராமத்தினர் வந்து செல்லும் நிலையில், நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி பாதுகாப்பு அவசியம் என்பதை மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் தான், சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி பற்றிய உண்மைகளை எடுத்துக்கூறினர். சரளா ஜட்லே உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் மக்களை சந்தித்து, மற்ற தடுப்பூசிகள் போல தான் கொரோனா தடுப்பூசி என்று புரிய வைக்க முயன்றனர்.

நானும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறேன், அதன் பிறகும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என அவர் மக்களிடம் விளக்கிக் கூறினார்.

இதனிடையே, கிராம நிர்வாகம் சார்பில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் அடங்கிய சிறப்புகுழு அமைக்கப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக மக்களை தயார்படுத்தும் பொறுப்பை இந்தக்குழு ஏற்றுக்கொண்டது.

இந்தக்குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று, கிராமவாசிகளுடன் பேசியதோடு அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தக்குழு நடத்திய ஆய்வில், பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினாலும், தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதில் தயக்கம் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, கிராமத்திலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு தீர்மானித்தனர். அதே போல கிராமவாசிகள் பலரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதிலும் தயக்கம் காட்டினர். பரிசோதனை செய்ய வந்தால் கிராமவாசிகள் ஊரை விட்டு ஓடிவிடும் வழக்கம் கொண்டிருந்தனர்.

கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் மருத்துவமனைக்கு தனியே அனுப்பிவிடுவார்கள் என்ற அச்சமே இதற்கு அடிப்படையாக இருந்தது. இதனையடுத்து, நோய்த்தொற்று இருந்தால் கிராமத்திலேயே தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை அடுத்து நல்ல நாளாக பார்த்து தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே பரிசோதனையில் கிராமவாசிகள் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவரவே மக்கள் இந்த செய்தியை கைத்தட்டி வரவேற்றனர்.

Image Credits: Unsplash

இந்த மகிழ்ச்சிக்கு நடுவே, மருத்துவர் சப்லே அன்றைய தினம், 65 பேருக்கு தடுப்பூசி போட்டார். இதன் மூலம் கிராமத்தில் நூறு சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது.

ஜனேபல் கிராமத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதை அடுத்து மற்ற கிராமங்களும் இதே போன்ற முயற்சியில் இறங்கியுள்ளன.

ஜனேபல் சுகாதார மையத்தின் கீழ் 16 சிறிய கிராமங்கள் இருக்கிறது. இதில் 32 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஜனேபல் கிராமமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து, மற்ற கிராமங்களைச் சேர்ந்த 3,500 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது இப்படியே தொடர்ந்து மற்ற கிராமங்களும் 100% தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திக்கட்டுரை உதவி- நேஷனல் ஜியாக்ரபிக் | தொகுப்பு: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world