இந்தியாவில் 'Money Heist' ஃபீவர்: நைரோபியை நினைவூட்டும் ஸ்ருதி ஹாசன்; லீவு கொடுத்த ஐடி நிறுவனம்!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகிடக்கும் 'மனி ஹீஸ்ட்' வெப் சிரீஸின் 5வது சீசன், நெட்பிளிக்சில் நாளை(செப்3ம் தேதி) வெளியாக உள்ள நிலையில், வெப் சிரீஸை காண ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து குஷிப்படுத்தியுள்ளது. (வேற மாதிரி.. வேற மாதிரி..)
102 CLAPS
0

நாட்டில் தியேட்டர்கள் திறக்காமல், மால்கள் இல்லாமல், ஓட்டல், பீச் என எதுவுமின்றி நாலு சுவருக்குள் வாழ்ந்த லாக்டவுன் காலத்திலும், மக்களுக்கு டைம்பாஸாக இருந்து காத்து வந்தன வெப் சிரீஸ்கள். அதிலும், வேர்ல்ட் ஃபேமஸான 'Money Heist' 4வது சீசன் கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளியாக, வெளியான அன்றே அனைத்து எபிசோட்களைப் பார்த்து முடித்துவிட்டு அப்போதே அடுத்த சீசன் எப்போது என்று புலம்பத் தொடங்கிவிட்டனர் மனி ஹீஸ்ட் ரசிகர்கள்.

இந்தியாவிலும் மனி ஹீஸ்டின் பீவர் எக்குத்தப்பாய் எகிறிக் கிடக்கிறது. அதற்கு சிறு உதாரணம், மனி ஹீஸ்ட்டின் 5 சீசன் ரிலீசை முன்னிட்டு,

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துள்ளது. நிறுவனத்தின் ஹாலிடே டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் 'வாட் எ கம்பெனி' என உச்சிமுகர்ந்து சிலிர்த்துவருகின்றனர்.

20ம் நுாற்றாண்டிலே உருவாகிய பாடல்!

கடந்த 2017ம் ஆண்டு ஸ்பானிஷ் தொலைக்காட்சியில் ‘La Casa De Papel' (தி ஹவுஸ் ஆஃப் பேப்பர்) என்ற பெயரில் க்ரைம் தொடர் ஒன்று ஒளிப்பரப்பாகியது. அதை விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், ஹை பட்ஜெட் 'மனி ஹீஸ்ட்' சிரீஸாக மாற்றியது. பேசிக்கலி திருட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ் இது. ஆனால், திருட்டு நடக்கும் இடமும், திருடும் முறைகளும், திருட்டையும் ரசிக்க வைக்கும்.

ஸ்பெயின் நாட்டில் கொள்ளையடிக்கும் கும்பலாக களமிறங்கும் நாயகக் கூட்டத்துக்கும் காவல்துறைக்கும் இடையேயான கதையே மனி ஹீஸ்ட். இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு சீசன் முடிவிலும் சஸ்பென்சுடனே என்ட் கார்டு போட்டு முடித்துவிடுவார்கள். 4வது சீசனும் அவ்வாறே முடிவடைந்தது.

செப்டம்பர் 3ம் தேதி மனி ஹீஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி சீசன் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்திய மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கான வேலையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இன்னபிற புரமோஷன் வேலைகளை மீம்ஸ், டுவிட் வழியாக நாடி நரம்பில் மனி ஹீஸ்ட் ஊறிய ரசிகக்கூட்டம், இலவசமாய் சோஷியல் மீடியாக்களில் சிறப்பாய் செய்துவருகிறது.

இந்தியாவில் சிரீஸை விளம்பரப்படுத்துவதற்காக இந்திய பிரபலங்களை வைத்து நெட்ப்ளிக்ஸ் இந்தியா "ஜல்தி ஆவோ" எனும் சிரீஸிற்கான கொண்டாட்டப் பாடலை வெளியிட்டு இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நைரோபியை நினைவூட்டிய ஸ்ருதி ஹாசன்! மனி ஹீஸ்ட் கீதம்...

இந்திய மின்னணு இசையமைப்பாளர் நியூக்லேயா இசையமைத்த மனி ஹீஸ்ட் கீதப்பாடல், கடந்த வாரம் நெட்ப்ளிக்சில் வெளியாகி, ரசிகர்களின் பல்சை அதிகரித்தது. "பெல்லா சியாவோ" எனும் பாடலின் இந்திய வெர்ஷனே "ஜல்தி ஆவோ" பாடல்.

20ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட பாசிச எதிர்ப்புப் பாடல் பெல்லா சியாவோ. ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியர்கள் நாஜி ஆக்கிரமிப்பு முடிவின் ஆண்டுவிழாவாகக் கொண்டாடும் அவர்களது விடுதலை நாளான ஏப்ரல் மாதம் 25ம் தேதி இப்பாடலை பாடி மகிழ்கின்றனர். மனி ஹீஸ்டின் முதல் சீசனில், ஆச்சரியமான காட்சிகளில் ஒன்றான, பெர்லின் மற்றும் பேராசிரியர் தங்கள் அணியுடன் ராயல் மிண்ட் ஆஃப் ஸ்பெயினைக்குள் செல்வதற்கு முன் 'பெல்லா சியாவோ' பாடல் இசைத்தது. திக் திக் காட்சிக்கு வேற லெவல் ஃபீலை உண்டாக்கியது இப்பாடல்.

உலகெங்கிலும் பரவிய அப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்து முனுமுனுத்தனர் மனிஹீஸ்டின் ரசிகர்கள். இந்த பாடலையே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் கலந்து, அந்தந்த மொழிப் பிரபலங்களை கொண்டு இந்திய இசை வாத்தியங்களுடன் இசையமைக்கப்பட்டு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய ரசிகர்கள் சிரீசுக்காக காத்துக்கிடக்கும் யதார்த்த நிலையையும், இந்தியாவில் மனிஹீஸ்ட் எவ்வாறு புகழ்பெற்றுள்ளது என்பதையும் பிரதிபலிக்கும் விதமான காட்சிளுடன் கலர்ஃபுல்லான விளம்பரப் பாடலை வெளியிட்டுள்ளது.

அனில் கபூர், ராணா டகுபதி, ஸ்ருதி ஹாசன், விக்ராந்த் மாஸ்ஸி, ராதிகா ஆப்தே மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற பல இந்திய பிரபலங்களும் இசை வீடியோவில் நடித்துள்ளனர்.

நைரோபியை நினைவூட்டும் விதமாக ஸ்ருதி ஹாசன் ஒரு ஸ்ட்ரெச்சர் படுக்கையில் படுத்து, உதட்டில் பூ வைத்துக்கொண்டு தமிழில் பாடல் வரிகளை பாடுகிறார். ’ஜல்தி ஆவோ’ பற்றி நியூக்லேயா தி இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில்,

"நான் மனி ஹீஸ்டின் மிகப்பெரிய ரசிகன். இதற்கு இசையமைக்க என்னை அணுகியபோது, நான் உடனடியாக 'யெஸ்'னு சொன்னேன். இந்த கீதத்தில் வேலை செய்வது மிகவும் ஃபன்னாக இருந்தது. தொடரை நேசிக்கும் அனைத்து ரசிகர்களும் என்ன ஃபீல் செய்கின்றனர் என்பதை பாடல் வெளிப்படுத்துகிறது. வீடியோவை படமாக்குவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறந்த கலைஞர்களும் அதை உயிர்ப்பிக்கச் செய்துள்ளனர்,” என்றார்.

ஒரிஜினல் வெர்ஷனின் முக்கிய சாராம்சத்தினையும், டியூனையும் மாற்றவில்லை. பின்னணி குரலை மாற்றி இந்திய ரசிகர்களுக்கு கனெக்ட் செய்ய வைப்பதே 'ஜல்தி ஆவோ'விற்கு தேவையானதாக இருந்தது. உதாரணமாக, தமிழ் வரிகள் இடம்பெறும் பகுதியில், முழு தென்னிந்திய டிரம்ஸ் வாத்தியங்களை இசைத்தோம்," என்று கூறியுள்ளார்.

'மனி ஹீஸ்ட்' ஹாலிடே... ப்ரீ சப்ஸ்கிரிஷன்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் 'வெர்வ் லாஜிக்' என்ற ஐடி நிறுவனம் செப் 3ம் தேதியை மனி ஹீஸ்ட் பார்ப்பதற்காகவே விடுமுறையாக அறிவித்துள்ளது. அந்த விடுமுறைக்கு "நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே" என்று பெயரிட்டு அன்று ஊழியர்கள் டுபாக்கூர் காரணங்களை சொல்லி விடுப்பு எடுப்பதை தவிர்ப்பதற்காக நிறுவனமே விடுமுறை அறிவித்துள்ளது.

விடுப்பு பற்றி அந்நிறுவனம் டுவிட்டரில் பதிவிட, நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின் டெக்கான் க்ரானிக்களிடம் பேசுகையில்,

"கடந்த இரு ஆண்டுகளாக எங்களது ஊழியர்கள் நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு ப்ரீ டைம் அளித்து, ஆபிசிலே மனி ஹீஸ்ட் வெப் சிரீசை காட்ட நினைத்தோம். பிறகு தான், அன்று ஒரு நாள் விடுப்பு அளித்திட முடிவு செய்தோம். அதிலும், நெட்பிளிக்சை சப்ஸ்கிரிப்ஷன் செய்யாதோருக்கு சப்ஸ்கிரிப்ஷனும் கொடுத்தோம். அனைவரும் உற்சாகமாக மகிழ்ச்சியாகிவிட்டனர்," என்றார்.

வேலை பளுவிற்கு மத்தியில், ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கி அவர்களின் குடும்பத்தினரோடு தரமான நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

நீங்களும் மனி ஹிஸ்ட்டின் வெறிக்கொண்ட ரசிகர் எனில், உங்களது நிறுவனத்தின் சிஇஓ கண்ணில் படும்வரை கட்டுரையை ஷேர் செய்யுங்கள்.

.