'ஒரு நிமிடத்திற்கு 137 ஆர்டர்கள்' - 2022ம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் சாப்பிட்ட உணவு எது தெரியுமா?
2022ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 7வது முறையாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 7வது முறையாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் உணவில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர்கள். அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவுகள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று சாப்பிடக்கூடியவர்கள். அதன் விளைவாக, இன்றைய ஃபுட் ரிவியூ வீடியோக்களின் வியூஸ்களையும், அதன் வரவேற்பையும் பார்க்கலாம்.
கொரோனா பெருந்தோற்று காலக்கட்டத்தில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை கடைகளில் சென்று விரும்பிச் சாப்பிடமுடியாமல் தவித்து வந்தனர். அப்படி தவித்தவர்கள், ஸ்விக்கி, ஜோமேட்டோ மூலமாக தங்கள் உணவு ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.
தற்போது பெங்களூரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தொடர்ந்து 7வது ஆண்டாக மக்களின் விருப்பமான உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு 137 ஆர்டர்கள்:
இந்தியர்கள் மத்தியில் பிரியாணிக்கு எப்போதும் தனி மவுசு இருப்பதை ஸ்விக்கி வெளியிட்டுள்ள பட்டியல் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐதராபாத் தம் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, லக்னோவி பிரியாணி, மோகல் பிரியாணி, மோட்டி பிரியாணி, முட்டை பிரியாணி... ஏன் வெஜ் பிரியாணி என பல வகைகள் இருந்தாலும் சிக்கன் பிரியாணி தான் 7வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
2022ம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர்கள் வந்ததாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, விநாடிக்கு 2.28 பிரியாணிகள் வீதம் ஆர்டர் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்: சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகும்.
அதேபோல், புதுப்புது உணவு வகைகளையும் முயற்சித்துள்ளனர். குறிப்பாக பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் நூடுல்ஸ், சுஷி என பல நாட்டின் உணவுகளையும் ஒரு பிடி பிடித்துள்ளனர். குறிப்பாக ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியன்) ஆகியவை வெளிநாட்டு உணவுகளிலேயே அதிகம் ஆர்டர் செய்யப்பட்டவையாக உள்ளது.
இனிப்பில் எது பெஸ்ட்?
பிரியாணியை போலவே இந்தியர்களின் விருப்பமான உணவாக குலாப் ஜாமூன் மாறியுள்ளது. இந்த ஆண்டு குலாப் ஜாமூன் மட்டும் 27 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரசமலாய் 16 லட்சம் முறையும், சாக்கோ லாவா கேக் 10 லட்சம் முறையும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீமில் சோகோ சிப், அல்போன்சா மாம்பழம், டெண்டர் கோகனட், டெத் பை சாக்லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் ஆகியவை அதிகம் ஆர்டர் செய்யப்பட்டன.
ஸ்நாக்ஸ் வகைகள் என்னென்ன?
இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது.
"ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட முதல் 10 ஸ்நாக்ஸ்கள் பட்டியலில் சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ப்ரைஸ், பூண்டு பிரட் ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட்," ஆகியவை இடம் பிடித்துள்ளது.
அதிகரிக்கும் ஆர்டர் பசி:
2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1,00,000 புதிய உணவகங்கள் மற்றும் கிளவுட் கிச்சன்கள் ஸ்விக்கியில் இணைந்துள்ளன. உணவுகளை ஆர்டர் செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதால், ஆர்டர் அளவுகளும் அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளியின் போது பெங்களூரில் 75,378 ரூபாய்க்கு ஒரே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. புனேவிலிருந்து ஒருவர் தனது ஒட்டுமொத்த டீமிற்கு 71,229 ரூபாய் மதிப்புள்ள பர்கர்கள் மற்றும் பிரெஞ்ச் பிரைஸ் ஆர்டர் செய்தது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனோஜ் விகே, திருச்சியைச் சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் பானிபட்டைச் சேர்ந்த சச்சின் சைனி போன்ற டெலிவரி ஊழியர்கள் ஒரே ஆண்டில் 8,300க்கும் அதிகமான ஆர்டர்களை செய்துள்ளனர். பெண் டெலிவரி நிர்வாகிகளில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திரேசியா மற்றும் விஜி ஆகியோர் 6,000 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளனர்.
இனி ஹைதராபாத் பிரியாணியை சென்னையில் இருந்து ஆர்டர் செய்யலாம் - Zomato-வின் புதிய திட்டம்!