இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? ஆய்வு சொல்லும் முக்கியத் தகவல்!

அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு தொடர்பான ஆண்டறிக்கை, பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான சுவாரஸ்யமான விவரங்களை தெரிவிப்பதோடு, இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் பாஸ்வேர்டுகளையும் சுட்டிக்காட்டுகிறது.
4 CLAPS
0

உலக பாஸ்வேர்டு பயன்பாட்டில் இருந்து இந்தியா வேறுபட்டிருப்பது, பாஸ்வேர்டு தொடர்பான அண்மை ஆய்வற்றிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால் இதில் மகிழ்ச்சி அடையத் தேவையில்லை. மற்ற நாட்டினரின் பாஸ்வேர்டுகளை நினைத்து கவலைப்படுவது போலவே இந்தியர்களின் நிலையும் இருக்கிறது.

பாஸ்வேர்டு நிர்வாகச் சேவையான ’NordPass’ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பாஸ்வேர்டு பயன்பாடு அறிக்கை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

பாஸ்வேர்டு பட்டியல்

பல்வேறு டாப் டென் பட்டியல் போல, நோர்ட்பாஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலும் அண்மையில் வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும், 123456 என எண்களின் வரிசை கொண்ட பாஸ்வேர்டே அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக இருக்கிறது. அதாவது முதலிடத்தில் உள்ளது. பாஸ்வேர்டு எனும் ஆங்கில சொல்லையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவது இரண்டாவது இடத்தில் வருகிறது.

கீபோர்டு அமைப்பை குறிக்கும் குவெர்ட்டி (qwerty), பாஸ்வேர்டு123 , ஐலவ்யூ உள்ளிட்ட பாஸ்வேர்டும் முன்னணியில் உள்ளன.

இந்தப் பட்டியலை பார்க்கும் போது, அட எல்லாம் நமக்குத்தெரிந்த பாஸ்வேர்டாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். ஏனெனில் இவை எல்லாமே பிரச்சனைக்குறிய பாஸ்வேர்டுகளாக அறியப்படுபவை. அதாவது எளிதில் களவாடப்படக்கூடிய பாஸ்வேர்டுகள். ஏனெனில் இவை எல்லாம் திருட்டு பாஸ்வேர்டுகளின் தொகுப்பில் இருந்து திரட்டப்பட்டவை என்பது தான்.

பாஸ்வேர்டு திருட்டு

பாஸ்வேர்டு திருட்டு, பாதுகாப்பு மீறல் என்றெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம் அல்லவா? இப்படி திருட்டுக்கு உள்ளான பாஸ்வேர்டு பட்டியல்களை ஆராய்ந்து, அவற்றில் இருந்து அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளை நார்டுபாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக சைபர் வல்லுனர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

திருட்டு பாஸ்வேர்டு தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பாஸ்வேர்டு என்றால், இந்தப் பட்டியலில் இருக்கும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது ஆபத்தானது என்பதாகும். இதை புரிந்து கொள்வது எளிது. ஏனெனில், இந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் பலவீனமாக இருப்பதால் தானே அவை தாக்குதலுக்கு உள்ளாகி பொது வெளிக்கு வந்திருக்கின்றன. அப்படியிருக்க அதே பாஸ்வேர்டுகளை பயன்படுத்தினால் தாக்காளர்கள் வேலை இன்னும் எளிதாகும் தானே.

உண்மையில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான், நார்டுபாஸ் போன்ற நிறுவனங்கள் அதிகம் பிரபலமாக உள்ள பாஸ்வேர்டு பட்டியலை வெளியிடுகின்றன.

ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, இணையவாசிகளில் பெரும்பாலானோர் பலவீனமான பாஸ்வேர்டுகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதை இந்த ஆண்டு பட்டியலும் உணர்த்துகிறது.

இந்தியா வேறுபாடு

மேலும், இந்த ஆண்டு பட்டியலில், கூடுதலாக பல பிரிவுகள் இடம்பெற்றுளன. உலக அளவிலான பட்டியல் தவிர, தனித்தனி நாடுகளுக்கான பட்டியல், பாலினம் சார்ந்த பயன்பாடு போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

உலக அளவிலான பட்டியலில் கணக்கில் கொள்ளப்பட்ட 50 நாடுகளில் 43 நாடுகளில் 123456 பாஸ்வேர்டு முதலிடம் வகிப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. மாறாக, இந்தியர்கள் மத்தியில் 'Password' எனும் சொல் முதலிடத்தில் உள்ளது. இதுவும் பலவீனமான பாஸ்வேர்டு என்பதால், பிரச்சனைக்குறியதே.

இது தவிர, ஐலவ்யூ, கிருஷ்ணா, சாய்ராம், ஓம்சாய்ராம் ஆகிய சொற்களும் முன்னணி பாஸ்வேர்டுகளாக உள்ளன. இந்தியர்கள் பெயர்களையும் பாஸ்வேர்டாக அதிகம் பயன்படுத்துகின்றனர். பிரியங்கா, ராஜேஷ், சஞ்சய் ஆகிய பெயர்கள் முன்னணியில் உள்ளன.

ஒலிம்பிக்ஸ் தாக்கம்

பொதுவாகவே, பெயர்கள், பிறந்தநாள் போன்றவை எல்லாம் பலவீனமான பாஸ்வேர்டாக கருதப்படுவதால் இதும் சிக்கலானதே. பாலின அடிப்படையில் பார்த்தால் ஆண்கள் வசைச்சொற்களை அதிகம் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர் என்றால், பெண்கள் ஐலவ்யூ பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் டால்பின் பெயர் அதிகம் பாஸ்வேர்டாக பயன்படுத்தப்படுகிறது.

பெயர்களில் மைக்கேல் அதிக அளவில் பாஸ்வேர்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தாக்கத்தால் விளையாட்டு தொடர்பான பாஸ்வேர்டை பலர் நாடியுள்ளனர்.

பலவீனமான பாஸ்வேர்டை பயன்படுத்தும் மோசமான போக்கு தொடர்வதாக சுட்டிக்காட்டும் அறிக்கை,

இந்த ஆண்டு பட்டியலில் உள்ள பாஸ்வேர்டுகளில் 84.5 சதவீதம் ஒரு நொடிக்கும் திருடப்படக்கூடியவையாக இருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த விகிதம் 73 சதவீதமாக இருந்துள்ளது.

ஆக நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் இந்த பட்டியலில் உள்ளவை போல இருந்தால் எச்சரிக்கை தேவை எனப் பொருள். அதோடு உடனடியாக பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். புதிய பாஸ்வேர்டு பழைய பாஸ்வேர்டு போல பலவீனமாக இல்லாமல் வலுவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

தகவல் உதவி: NordPass

Latest

Updates from around the world