அம்மாவுக்கு திருமணம் செய்துவந்த மகன்கள்; மெச்சும் நெட்டிசன்கள்: நடந்தது என்ன?

தாயின் வலியை உணர்ந்த மகன்கள்!
104 CLAPS
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. கடந்த 2009ல் இவரின் கணவர் உடல்நலக்குறைவால் மறைந்துவிட தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். அப்போது மூத்த மகன் சித்தார்த்தன் கருணாநிதி இன்ஜினீயரிங் முதல் வருஷம் படிக்க, இளைய மகன் மகிழா ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்துள்ளார். இளம்வயதில் கணவரை இழந்த பெண் படும் கஷ்டங்கள் அனைத்தும் செல்வியையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மகன்கள் நலனே முக்கியம் என்று வாழ்ந்து வந்துள்ளார்.

காலங்கள் நகர்ந்தது. மகன்கள் இருவரும், வேலை படிப்பு வெளியூரில் தங்க வேண்டிய நிலை. அந்த சமயத்தில் மகன்களை பிரிந்தும் வாழ வேண்டிய நிலைக்குப் போனார் செல்வி. இந்த காலகட்டத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று செல்விக்கு நினைப்பு வரவேயில்லை.

ஏன், தன் கணவர் இறந்த பின்பு ஒருநாள் கூட அப்படி ஒரு நினைப்புக்கூட செல்விக்கு வந்ததில்லை. மகன்களே கதி என்று தான் வாழ்ந்தார். இதற்கு இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் கட்டமைப்பும் ஒரு காரணம். அதனால் செல்வி துணையை தேடாமல் வாழத் தொடங்கினார்.

ஆனால் அவரின் மகன்கள் அந்த சமூக கட்டமைப்பை உடைக்க நினைத்தனர். எப்படி மகன்களை பிரிந்து வாழ்ந்த செல்வி தனிமையை உணர்ந்தாரோ, அதேபோல் அவரின் மகன்களும் தாயின் நிலையை, வலியை உணர்ந்தனர்.

முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டு வளர்ந்த அவர்கள் தாய்க்கு மறுமணம் குறித்து யோசிக்கத் தொடங்கினர். அது தான் தாயின் தனிமைக்கு சரி என்று நினைத்தனர். தாயிடமும் சொல்லினர். இதை கேட்ட செல்விக்கு கண்முன் வந்தது எல்லாம் சமூகம் மட்டுமே. ஊர் உலகமும் என்ன பேசப்போகிறோதோ என்ற அச்சம் அவரை மகன்களின் பேச்சை கேட்க மறுத்தது.

அவர் நினைத்தது போலவே செல்வி குடும்பத்துக்கும் இந்த விஷயம் தெரியவர, பேரன்கள் உடன் அவர்கள் அதன் பிறகு பேசவேயில்லை. ஆனால், சித்தார்த்தன் கருணாநிதியும், மகிழனும் விடவில்லை. ஒருவழியாக, செல்வியை சம்மதிக்க வைத்தனர். செல்விக்கு தெரிந்தவர்கள் மூலமாகவே, பக்கத்தூரில் இருந்த ஏழுமலை பற்றி தெரியவந்தது. இவரும் மனைவியை இழந்தவர். மூன்று குழந்தைகளில் இரண்டு பெண்களை கட்டிக்கொடுத்துவைத்து விட்டு ஒற்றை மகனுடன் தனியாளாக இருந்துவந்துள்ளார். அவரிடமும் பேசி எல்லாம் சரியாக வர, திருமணம் செய்துவைத்துள்ளனர்.

கடந்த மாதத்துடன் இவர்களின் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் தனது தாய் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து, ‘Right to Marry' என்று புத்தகம் எழுதி சித்தார்த்தன் கருணாநிதி வெளியிட இந்த விஷயம் வெளியில் தெரிந்தது. இந்தப் புத்தகத்தை படித்தவர்கள் அனைவருமே செல்விக்கும், அவரின் மகன்களையும் மெச்சி வருகின்றனர்.

இந்த சம்பவங்களை கேட்க்கும் போது நம் நினைவுக்கு வருவது

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்ற குரல் மட்டுமே. உண்மையில் சித்தார்த்தன் கருணாநிதியும், மகிழ்னனும் பாராட்டுக்குரியவர்கள்.  

Latest

Updates from around the world