Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

’உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே என் நோக்கம்’- லட்சுமி ராமகிருஷ்ணன்

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணனை பிரபலமாக்கி இருந்தாலும் ஆரம்பத்தில் தொலைக்காட்சி, திரைப்படத் துறையில் செயல்படுவது குறித்து அவர் சிந்தித்ததில்லை.

’உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே என் நோக்கம்’- லட்சுமி ராமகிருஷ்ணன்

Thursday June 20, 2019 , 4 min Read

”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?” – இது பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் பிரபல வரிகள்.

இந்த நிகழ்ச்சியில் ஏழாண்டுகள் இணைந்திருந்த பின்னர் 2018-ம் ஆண்டு லட்சுமி இந்நிகழ்ச்சியை விட்டு விலகினார். ஒரு ரியாலிட்டி ஷோ என்பது பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்கிற கருத்தினை இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்திய பிறகே நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.

1

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் எய்ட்ஸ் நோயாளிகள், கொலைகாரர்கள், மனைவியை ஏமாற்றிய கணவன்கள், கணவனை ஏமாற்றிய மனைவிகள் போன்ற பலரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு தொகுத்து வழங்கப்பட்டது. இதில் உண்மைச் சம்பவங்கள் விவாதங்களுடனும் கலந்துரையாடல்களுடனும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. அது ஒருபுறம் இருக்க இந்நிகழ்ச்சி வாயிலாக பலருக்கு நியாயமும் கிடைத்துள்ளது.

ஒழுக்கமற்ற கணவரை வேறொரு பெண்ணின் முன்னிலையில் அவரது மனைவி எதிர்கொள்வது டிஆர்பி ரேட்டிங்கிற்கு சிறப்பாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இந்நிகழ்ச்சி பலரது வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக லட்சுமி குறிப்பிடுகிறார்.

”இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதை பலர் விரும்பவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை ஜன்னல் வழியாகவும் பின்கதவு வழியாகவும் மீட்டுள்ளோம். அவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீஸிடம் அழைத்துச் சென்றுள்ளோம். உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமே என்னைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தவைத்தது,” என்று லட்சுமி தெரிவித்தார்.

உண்மைக்கான தேடல்

லட்சுமி ராமகிருஷ்ணன் சில நேரங்களில் தெளிவற்ற சூழல் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

”மனித உரிமைகள் முறையாக பாதுகாக்கப்படாத சமூகத்தில்தான் நாம் வசிக்கிறோம். எனவே தாராளவாத சிந்தனைப்போக்கு பெரும்பாலான சம்பவங்களுக்குப் பொருந்தாது. உதாரணத்திற்கு 49 வயதான ஒருவர் ஒன்பது வயது குழந்தையை தவறான முறையில் நடத்திய சம்பவத்தைக் குறிப்பிடலாம். இந்தத் தளம் அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நீதி அமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக இவர்கள் நினைப்பதால் இவர்கள் தாமாகவே தங்களது கதைகளுடன் என்னை அணுகுகின்றனர்,” என்கிறார் லட்சுமி.

இந்த நிகழ்ச்சியை எந்தவிதத்திலும் மாற்றியமைக்காமல் உண்மையான அக்கறையுடனேயே இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

“எனக்கு டிஆர்பி பற்றியோ என்னுடைய இமேஜ் பற்றியோ கவலையில்லை. என்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை,” என்கிறார்.

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியானது லட்சுமிக்கு விரைவாகப் புகழைக் கொடுத்திருந்தாலும் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்களில் பங்கேற்பது குறித்து அவர் துளியும் சிந்தித்ததில்லை.

பாலக்காடு பிராமணர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த லட்சுமிக்கு 16 வயதிருக்கையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 18 வயதில் திருமணம் நடந்தது. கோயமுத்தூரில் புகுந்த வீட்டினருடன் கூட்டுக்குடும்பமாக வசித்ததில் தனக்காக அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

”எனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளாமல் போய்விடுவோமோ என்கிற பயம் ஏற்பட்டது,” என்று அந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்தார் லட்சுமி.

லட்சுமி கூறும்போது, “என்னுடைய நிலையை உணர்த்த நான் சண்டையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய எதிர்ப்புக் குரல் கண்டுகொள்ளப்படவில்லை. ஆறு மாத திருமண வாழ்க்கையில் ஒரு விஷயத்தை எதிர்த்து நான் குரல் கொடுத்தபோது அதற்கு மேல் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது,” என்றார்.

2

அதன் பிறகு லட்சுமியும் அவரது கணவர் ராமகிருஷ்ணனும் தனியாக வசிக்குமாறு குடும்பத்தினரால் நிர்பந்திக்கப்பட்டார்கள். இதனால் தங்களுக்குக் கிடைத்த மிகக்குறைந்த வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

”என்னுடைய கணவருக்கு உதவ விரும்பினேன். ஆனால் எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நான் ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுவேன். ஆனால் என்னிடம் தன்னம்பிக்கை இல்லை. ஆடைகளை வடிவமைப்பதில் எனக்கு திறன் இருப்பதை உணர்ந்தேன். ஃபேஷன் டிசைனிங் படிப்பில் சேர்ந்தேன். ஒரு தையல் இயந்திரத்துடன் ஆடைகளை வடிவமைக்கத் துவங்கினேன். அப்படி உருவானதுதான் ’க்ரியேஷன்ஸ்’,” என்றார் லட்சுமி.

லட்சுமி ஆடைகளை வடிவமைப்பதுடன் பிறந்த நாள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு தீம் பார்ட்டி ஏற்பாடு செய்யவும் துவங்கினார். ‘க்ரியேஷன்ஸ்’ சிறப்பாக வளர்ச்சியடைந்தது.

1992-ம் ஆண்டு அவரது கணவர் ராமகிருஷ்ணன் மஸ்கட்டில் ஒரு பணியில் சேர தீர்மானித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ’க்ரியேஷன்ஸ்’ செயல்பாடுகளை நிறுத்தவேண்டியதாயிற்று. அந்த சமயத்தில் 1994-ம் ஆண்டு அவருக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகளைப் பராமரிப்பது, வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்பது என வாழ்க்கை பரபரப்பானது.

1995-ம் ஆண்டு அவரது நண்பர்களுடன் யதேச்சையாக உரையாடியதை அடுத்து உருவானதுதான் நாட்டின் மிகப்பெரிய ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றான ’கிட்ஸ் கேம்ப்’. லட்சுமி குழந்தைகளுக்கான சம்மர் கேம்ப் ஏற்பாடு செய்யத் துவங்கினார். பின்னர் கார்ப்பரேட் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்தார். இவை அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

”இவ்வாறு வளர்ச்சியடைந்து வந்த சூழலில் ஓமன் நாட்டைச் சேர்ந்த அதிக செல்வாக்குள்ள தொழிலதிபர் ஒருவர் எனக்கு மிகுந்த வேதனையளித்தார். அவரது அணுகுமுறை அசௌகரியமான உணர்வையும் பயத்தையும் ஏற்படுத்தியது. அவரை நான் எதிர்த்தபோது என்னை மிரட்டினார்,” என நினைவுகூர்ந்தார்.

பின்னர் வெற்றிகரமாக இயங்கி வந்த ’கிட்ஸ் கேம்ப்’ முயற்சியை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. தனது குழந்தைகளுடன் இந்தியா திரும்பினார் லஷ்மி. ”ஒய்வுடன்கூடிய அமைதியான வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தேன். கோயமுத்தூரில் மிசஸ் ரோட்டரி போட்டியில் வெற்றி பெற்று இழந்த என் நம்பிக்கையைத் திரும்பப்பெற்றேன்,” என்றார்.

எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாள திரைப்பட இயக்குநர் லோஹிதாதாஸ் ’சக்கர முத்து’ என்கிற தனது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக லட்சுமியின் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்யபோது நடிப்பு வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக லட்சுமி தனக்கு அதிக ஆர்வமுள்ள பகுதியைக் கண்டறிந்தார். பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

ஆரோஹனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ’ஹவுஸ் ஓனர்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

3

சமூக நீதி

இதற்கிடையில் தான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில்,

“சமுதாய அமைப்பில் சீர்குலைவு, நீதி வழங்கப்படுவதில் நியாயமற்ற தன்மை, சமூகத்தில் காணப்படும் போலித்தனம், அனைத்தையும் சாதிய ரீதியாக மதிப்பிடும் போக்கு போன்றவைகளே இன்றைய உலகில் காணப்படுகிறது. இது நம்பிக்கை இழக்கச் செய்கிறது,” என்றார்.

லட்சுமி அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அவரை பெரிதும் பாதித்தது பற்றி பகிர்ந்தார். கணவரால் கைவிடப்பட்டு, குடும்பத்தினரால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் தொலைக்காட்சி அலுவலத்திற்கு வந்திருந்தார். அழுது கொண்டிருந்த அவர் லட்சுமியுடன்  பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

“அந்தச் சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. நான் அவருடன் பேசி அறிவுரை வழங்கினேன். சென்று முறையிட இடமில்லாத இத்தகைய சாமானியர்கள் குறித்து யார் பேசுவார்கள்?,” என கேள்வியெழுப்பினார்.

லட்சுமி பெண்களின் பிரச்சனைகளுக்கு, குறிப்பாக திரைப்படத் துறையில் இருப்போரின் பிரச்சனைகளுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல்கொடுக்க #MeToo இயக்கம் உதவியுள்ளதாக லட்சுமி தெரிவிக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இவரது ’ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

லட்சுமி எதிர்காலத் திட்டம் குறித்து கூறுகையில்,

“நான் எதையும் திட்டமிடுவதில்லை. வாழ்க்கையில் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வேன். என்னுடைய முதல் பேரக்குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா