பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது, அதை விலை பேசாதீர்'- லஞ்சத்துக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தும் கரூர் துணை வட்டாட்சியர்!

அரசு அலுவலகங்கள் என்றாலே லஞ்ச, லாவண்யத்தில் ஊறிப் போன இடங்கள். காசை வெட்டினால்தான் காரியம் நடக்கும் என்பதே பொதுமக்களின் பொதுவான கருத்து. இதில் ஓரளவுக்கு உண்மையும் இல்லாமல் இல்லை. ஆனால் காசு, பணத்துக்கு மசியாமல் கடமையே கண்ணாக இருக்கும் அலுவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Divyatharan
12th Jul 2019
69+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

அரசு அலுவலகங்கள் என்றாலே லஞ்ச, லாவண்யத்தில் ஊறிப் போன இடங்கள். காசை வெட்டினால்தான் காரியம் நடக்கும் என்பதே பொதுமக்களின் பொதுவான கருத்து. இதில் ஓரளவுக்கு உண்மையும் இல்லாமல் இல்லை. ஆனால் காசு, பணத்துக்கு மசியாமல் கடமையே கண்ணாக இருக்கும் அலுவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.


கரூர் மாவட்டத்தில்தான் இருக்கிறார் அப்படி ஓர் வருவாய்த் துறை அதிகாரி. கரூர் மண்டல துணை வட்டாட்சியராகப் பணிபுரிபவர் மோகன்ராஜ் (45). இவர் தனது இருக்கைக்குப் பின்புறம் உள்ள சுவரில், ’எனது கையெழுத்து விலைமதிக்க முடியாதது, தயவு செய்து அதனை விலைபேசாதீர்கள்’ என எழுதி வைத்துள்ளார். மேலும், லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்களை எழுதி வைத்திருக்கும் அவரிடம் இதுகுறித்து கேட்டபோது,

உண்மைதான், எனது கையெழுத்ததை அரசுக்கோ, அரசின் திட்டங்களுக்கோ அல்லது மக்களுக்காகவோ தான் பயன்படுத்துவேனே தவிர ரூ.500க்கும் 1000க்கும் விற்க முடியாது. அதனால்தான் அவ்வாறு எழுதி வைத்துள்ளேன்,” என்கிறார் அவர்.
mohan

திரு மோகன்ராஜ், கரூர் மண்டல துணை வட்டாட்சியர்.

கரூரைச் சொந்த மாவட்டமாகக் கொண்ட இவர், பள்ளி, கல்லூரி படிப்பையும் இங்கேயே முடித்துள்ளார். பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி முடித்துள்ள இவர், மருத்துவப் பிரதிநிதியாக தனது வாழக்கையைத் தொடங்கியுள்ளார்.


இந்நிலையில், 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்வாகி, வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த நாளில் இருந்தே தனது இருக்கைக்குப் பின்புறம் இவ்வாறு எழுதி வைத்திருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.


பொதுவாகவே அரசு அலுவலர்கள் என்றாலே லஞ்சத்தில் ஊறியவர்கள் என்ற கருத்து மக்களிடம் இருக்கும்போது, உங்களது இந்த நேர்மையான நடவடிக்கைகளால் உங்களுக்கு இதுவரை எவ்வித இடையூறும் வரவில்லையா எனக் கேட்டபோது,

”இதுவரை எனக்கு எவ்வித தொந்தரவும் வந்ததில்லை. நான் என்னால் முடிந்தளவுக்கு மக்களுக்குச் சேவை செய்து வருகிறேன். என்னிடம் யாரும் இதுவரை லஞ்சம் அளிப்பது அல்லது கடமை தவறி செயல்பட வலியுறுத்தியது போன்ற தவறான அணுகுமுறையில் நெருங்கியதில்லை,” என்றார்.

இவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஜுன் மாதம் கரூர் அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, 5 மரக்கன்றுகளை நட்டால் ஓர் நாளில் பட்டா வழங்குவதாக மக்களிடம் அறிவித்து மக்களை மரம் நட ஊக்குவித்து, அவர்களுக்கு சொல்லியபடியே பட்டாவும் வழங்கி அசத்தினார்.

மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திட்டம் குறித்து அவரிடம் கேட்டபோது,

ஆமாம், மக்களிடம் நான் அறிவித்தபபடியே, 5 மரக்கன்றுகளை நட்டு. அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், முதுநிலை வரிசைப்படி இல்லாமல் முன்னுரிமை வரிசைப்படி, அன்றே ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்குவேன். இதில் ஓரிருவர் ஏற்கெனவே பட்டா பெற்றுச் சென்றவர்கள், மீண்டும் என்னிடம் வந்து நான் எளிதாக பட்டா பெற்றுச் சென்றுவிட்டேன். எனவே நான் எனது பங்காக 5 மரக்கன்றுகளை நட்டுவிட்டேன் எனக் கூறிச் செல்வது பெருமையாக இருந்தது.

அதிகாரிகளாகிய நாம் மக்களிடம் அன்பாக நேர்மையாக பழகும்போது, மக்களும் நம்மிடம் அதே அன்புடனும், நேர்மையுடனும் பழகுகிறார்கள் என்பதே நான் அனுபவத்தில் அறிந்த உண்மை என்கிறார்.


உங்களின் இந்த நேர்மை, சமூக நலச் சிந்தனைக்கு யார் காரணம் எனக் கேட்டபோது, புத்தகங்களே எனது ஆசான். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது, பல்வேறு வகையான புத்தகங்களை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த புத்தகங்களில் இருந்த நீதிநெறிகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.


உதாரணமாக, ஓர் நூலில் ராஜாஜி குறித்து படித்தேன். அப்போது, ராஜாஜி அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து அரசுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இரவு 10 மணியைத் தாண்டியவுடன் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, சிறிய மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்து எழுதத் தொடங்கினாராம். அப்போது, அருகில் இருந்தவர்கள் காரணம் கேட்டபோது, இதுவரை நான் அரசுப் பணியே மேற்கொண்டேன். எனவே அரசின் மின்சாரம் மற்றும் மின்விளக்கை பயன்படுத்தினேன். ஆனால் தற்போது நான், எனது நண்பருக்கு கடிதம் எழுதுகிறேன். இது சொந்த வேலை. எனவே அரசு சொத்தை பயன்படுத்துவது தவறாகும் என்பதால் இவ்வாறு செய்வதாகக் கூறினாரராம்.

இதுபோன்ற ஏராளமான நூல்களைப் படித்ததால் எனது உள்ளத்தில் நேர்மை குடிகொண்டுள்ளது என்கிறார்.

இவரைப் போன்றே அனைத்து அரசு அதிகாரிகளும் சிந்தித்து மக்கள் பணியாற்றினால், தமிழகம் இந்திய அளவில் சிறப்புற்று திகழும். இந்தியா முழுவதும் இவரைப் போன்று அரசு அதிகாரிகள் பணியாற்றினால் உலக அரங்கில் இந்தியா வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதியாகக் கூறலாம்.


69+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags