‘என் பெயர் கோவிட்; ஆனால் நான் வைரஸ் இல்லை’ - பெயரால் பிரபலமான தொழில் முனைவர்!

கோவிட் என்ற தனது பெயர் மூலம் சமூகவலைதளத்தில் மினி செலிபிரிட்டி ஆகி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவர் ஒருவர். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "என் பெயர் கோவிட்.. ஆனால். நான் ஒரு நோய்க்கிருமி இல்லை" என்று பதிவு செய்துள்ளார். இவரது ஒவ்வொரு டிவீட்டுகளும் மரணபங்கம்.
0 CLAPS
0

பெயர் என்பதுதான் ஒவ்வொருவரின் அடையாளமே.. ஆனால் அந்த அடையாளமே சமயங்களில் சிலருக்கு பிரச்சினை ஆகி விடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் 31 வயது கோவிட் கபூர்.

Holidayfy என்ற சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருபவர் பெங்களூருவைச் சேர்ந்த கோவிட் கபூர் (Kovid Kapoor). கோவிட் என்ற பெயராலேயே இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார் இவர். விளம்பரத்திற்காக எல்லாம் இப்படி தன் பெயரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அவரது பெற்றோர் வைத்த பெயரே இதுதான்.

2019 இறுதிவரை இந்தப் பெயரால் அவர் பிரச்சினை எதையும் சந்திக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னர் அவர் தன் பெயரால் பிரச்சினைகளை சந்திக்காத நாளே இல்லையாம். எந்தவொரு பொது இடங்களுக்குச் சென்றாலும், தன் பெயரைச் சொல்லவே சங்கடமாக இருப்பதால், சமயங்களில் தனது வேறு பெயரைக்கூறி தான் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறாராம் இந்த கோவிட்.

கோவிட் கபூர்

கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய போது அதற்கு விஞ்ஞானிகள் கோவிட்-19 எனப் பெயர் வைத்தனர். அப்போது வரை உலக மக்களுக்கு 'கோவிட்' என்ற பெயர் சாதாரணமாகத்தான் இருந்துள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கோவிட் பற்றி பேசத் தொடங்கியதில் இருந்து, கோவிட் கபூர் பேரைக் கேட்டாலே மக்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்களாம்.

தனது தொழில் ரீதியாக கோவிட் கபூர் சறுக்கல்களைச் சந்தித்த போதும், சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் பிரபலமாகி விட்டார். தன் பெயரால் தனக்கு ஏற்பட்ட பல வித்தியாசமான அனுபவங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் கோவிட். காமெடியான அந்த டிவீட்கள் எல்லாம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒவ்வொரு பதிவும் வித்தியாசமானதாக, சுவாரஸ்யமானதாக இருப்பதாலேயே மக்கள் அதனை விரும்பிப் படிக்கின்றனர். கோவிட் தனது பதிவு ஒன்றில்,

“என் பெயர் கோவிட். ஆனால் நான் வைரஸ் அல்ல.." எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 31 வயதாகும் கோவிட் கபூர், தனது 30வது பிறந்தநாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பற்றியும் ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார். அதில்,

“எனது 30வது பிறந்தநாளுக்கு நண்பர் ஒருவர் கோவிட் என கேக்கில் எழுதும்படி, பேக்கரிக் கடைக்காரரிடம் கூறியிருக்கிறார். கடைக்காரரோ இது ஏதோ காமெடி என நினைத்து, அந்தக் கேக்கில் Kovid என்பதற்கு பதில் covid 30 என எழுதித் தந்துள்ளார்,” எனக் கூறி, அந்தக் கேக்கின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஒரு டிவீட்டில், அவர் கொரோனா பீர் குடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில், ‘கொரோனாவைக் குடிக்கும் கோவிட்’ என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். மற்றொரு காமெடியான அனுபவம் என ஸ்டார்பக்கில் நடந்த சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், தன் பெயரை அழைத்ததும், அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்ததாக அவர் கூறியுள்ளார்.

சரி, மக்கள்தான் இப்படி தன் பேரைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றால், கூகுளும் தன் பங்கிற்கு அவரை வெறுப்பேற்றத் தவறவில்லை. கூகுளில் தன் சொந்த மெயில் ஐடியைத் தேடுவதற்காக அவர் தனது பெயரை டைப் செய்தால், அதில் ‘Did you mean Covid' எனக் கேட்கிறதாம்.

மற்றொரு டிவீட்டில், கஸ்டர்மர் கேர் அதிகாரியுடன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை நகைச்சுவையாக விவரித்துள்ளார். அதில், கஸ்டமர் கேர் நிர்வாகி ஒருவர், கோவிட் கபூருக்கு போன் செய்துள்ளார். தேவையான தகவல்களைக் கூறியபின், அவர் கூறிய விசயத்தைக் கேட்டு பாவம் கோவிட் கபூர் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்.

ஆம், கோவிட் கபூருக்கு போன் செய்வதற்கு முன், அவரின் பெயரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், தன் நண்பருடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஓய்வு எடுக்கும் அறையில், ‘கோவிட்டிற்கே நான் போன் செய்யப் போகிறேன்..’ எனக் கூறி நண்பருடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்ததாகக் கோவிட் கபூரிடம் கூறியிருக்கிறார் அந்தக் கஸ்டமர் கேர் நிர்வாகி.

‘என்ன கொடுமை சார் இது?’ எனக் கேட்கும் அளவிற்கு கோவிட் கபூருக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவங்களும் மரணபங்கமாக இருக்கிறது. ‘என் பெயர் பங்கமாக கலாய்க்கப்படுவதை ஜாலியாக எடுத்துக் கொள்கிறேன்’ என கோவிட் கபூர் கூறினாலும், சில இடங்களில் தேவையில்லாத சங்கடங்களைத் தவிர்க்க, கபீர் கபூர் என்ற தனது மற்றொரு பெயராலேயே அறிமுகப் படுத்திக் கொள்கிறாராம் கோவிட்.

“பேண்டமிக்கின் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது, கோவிட்டின் பெயரைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். கொரோனாவும் இப்போதைக்கு நம்மை விட்டபாடில்லை, இனி வரும் ஆண்டுகளிலும் இந்தப் பெயரை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை,” என நகைச்சுவையாகக் கூறுகிறார் கோவிட்.

தனது பெயர் கலாய்க்கப்படுவதை தானும் ஜாலியாக எடுத்துக் கொள்வதால், இதனை எளிதில் கடந்து செல்ல முடிவதாகக் கூறும் கோவிட், இந்தப் பெயரால் தற்போது மினி செலிபிரிட்டியாக தான் மாறி விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இந்தியாவில் ஒமைக்ரானால் மூன்றாவது அலை வீசி வரும் வேளையில், கோவிட்டின் இந்த டிவீட்டுகள் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. இவரை வைத்து மீம்ஸ்களையும் பகிரத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

‘இத்தகைய வரவேற்பைத் தாம் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறும் கோவிட், ‘எப்படியோ இந்த பிரபலத்தை வைத்து தனது வியாரத்திற்கு விளம்பரம் கிடைத்தால் சரி’ என்கிறார். கூடவே தனது பெயருக்கான அர்த்தம் ’ஸ்காலர்’ எனவும் விளக்குகிறார் கோவிட்.

தகவல் உதவி: ட்விட்டர் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Latest

Updates from around the world