NDTV-க்கு ரூ.493 கோடி ஓபன் ஆஃபர்; கூடுதலாக 26% பங்குகளை வாங்க அதானி குழுமம் முடிவு!

By YS TEAM TAMIL
November 23, 2022, Updated on : Wed Nov 23 2022 05:01:33 GMT+0000
NDTV-க்கு ரூ.493 கோடி ஓபன் ஆஃபர்; கூடுதலாக 26% பங்குகளை வாங்க அதானி குழுமம் முடிவு!
இந்தியாவின் பிரபலமான மற்றும் முன்னணி ஆங்கில செய்தி தொலைக்காட்சியான என்டிடிவியின் 26 சதவீத பங்குகளை கூடுதலாக கைப்பற்ற ரூ.493 கோடிக்கான சலுகையை அதானி குழுமம் இன்று அறிவித்துள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவின் பிரபலமான மற்றும் முன்னணி ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV-யின் 26 சதவீத பங்குகளை கூடுதலாக கைப்பற்ற ரூ.493 கோடிக்கான சலுகையை அதானி குழுமம் இன்று அறிவித்துள்ளது.


இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் அம்பானி, சிஎன்என் நியூஸ்18 மற்றும் சிஎன்பிசி TV18 என Network18 மூலம் இயக்கக்கூடிய ஏராளமான மொழிகளைச் சேர்ந்த செய்தி சேனல்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே, அம்பானியை போல் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தடம் பதித்துள்ள கெளதம் அதானி, தற்போது NDTV-யின் பங்குகளை கைப்பற்றியதன் மூலமாக ஊடகத்துறையில் கால் பதித்துள்ளார்.


செய்தித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்டிடிவி நிறுவனம் மதிப்புமிக்கதாக வலம் வருகிறது. இதனை ராதிகா மற்றும் பிரணாய் ராய் தம்பதி தொடங்கி நடத்தி வருகின்றனர். என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இயங்கி வருகின்றன. இதன் 29 சதவீத பங்குகளை அதானி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.

NDTV

விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் (VCPL) என்ற நிறுவனத்திடம் என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்துள்ள ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் வாங்கியிருந்தது. கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனாதால், 29.18 சதவீத பங்குகள் விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வசம் வந்தன.


VCPL என்ற நிறுவனத்தின் 100% பங்குகளையும் ரூ.113.7 கோடிக்கு அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் (AMVL) வாங்கியுள்ளதால், அதானி குழுமத்திற்கு என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகள் வந்தடைந்தன.


ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத என்டிடிவி நிர்வாகம், தங்களுக்கு எந்த விதமான அறிவிப்பு கொடுக்காமல் RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் மூலமாக பங்குகள் மாற்றப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டியது. இந்நிலையில், கூடுதலாக என்டிடிவின் 26 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதற்கான ஓபன் ஆஃபரை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது.

தற்போது என்டிடிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் இந்நிறுவனத்தில் முறையே 15.94 சதவீதம் மற்றும் 16.32 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் 14.72 சதவீத பங்குகளையும், தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் நிறுவனத்தில் மொத்தம் 23.84 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தையில் இன்று என்டிடிவியின் ஒரு பங்கின் விலை ரூ.383 ஆக உள்ள நிலையில், அதானி குழும நிறுவனங்களின் சார்பாக ஒரு பங்கின் விலை ரூ.294 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த சலுகை டிசம்பர் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


ஆசியாவின் பெரும் பணக்காரருக்கும், முன்னணி டிவி நிறுவனர்களுக்கும் இடையிலான கையகப்படுத்தும் போரை தொடங்கி வைக்கும் விதமாக, இந்தியாவின் மூலதன சந்தை கட்டுப்பாட்டாளர் SEBI கடந்த வாரம் கடந்த வாரம் திறந்த சலுகைக்கு ஒப்புதல் அளித்தது. இதன் படி, அதானி குழுமம் முன்மொழிந்த திறந்த சலுகையின் அளவு கிட்டத்தட்ட ரூ. 493 கோடி ஆகும்.


இந்த ஆஃபரை என்டிடிவி ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...


தொகுப்பு - கனிமொழி