‘நீட் தேர்வு அவ்வளவு கடினமானது அல்ல’ - நீட்டில் 720/720 பெற்ற தமிழக மாணவர் பிரபஞ்சன் சொல்லும் சக்சஸ் சீக்ரெட்!
நீட் தேர்வு என்றாலே மிகவும் கடினம், ஒரே முறையில் அதில் வெல்வது என்பது அரிது என்பது போன்ற பல பிம்பங்களை உடைத்தெரிந்து, தன் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழக மாணவரான பிரபஞ்சன்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழக மாணவர் பிரபஞ்சன்.
நீட் தேர்வு
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET UG) கடந்த மாதம் 7ம் தேதி, மணிப்பூரைத் தவிர்த்து நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு, இம்மாதம் 6ம் தேதி அங்கு நடத்தப்பட்டது. இதனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழக மாணவர் முதலிடம்
இந்நிலையில், நேற்று neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருந்த போதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பலர் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றானர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருப்பது, நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
முதல் முயற்சியிலேயே வெற்றி
நீட் தேர்வு என்றாலே மிகவும் கடினம், ஒரே முறையில் அதில் வெல்வது என்பது அரிது என்பது போன்ற பல பிம்பங்களை உடைத்தெரிந்து, தன் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் பிரபஞ்சன்.
தன் தொடர் பயிற்சியால் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள பிரபஞ்சன், படிப்பைப் போலவே பொழுதுபோக்கிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்தாக அதில் கூறியிருக்கிறார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள்
பிரபஞ்சனின் பெற்றோர்களான ஜெகதீஷ் மற்றும் மாலா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் ஜெகதீஷ். இதேபோல், செஞ்சி வட்டம் நெகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார் பிரபஞ்சனின் அம்மா மாலா.
பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளியில் படித்த பிரபஞ்சன், 12ம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா CBSE பள்ளியில் முடித்துள்ளார்.
“சிறுவயது முதலே எல்லாம் எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கவில்லை. எனக்கு பயாலஜியை படிக்க மிகவும் பிடிக்கும். 8ம் வகுப்பு படிக்கும் போதுதான், மருத்துவராக வேண்டும் என்ற ஆசை வந்தது.”
10 ஆம் வகுப்பு வரை நான் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். ஆனால், நீட் எனக்கு கடினமாக இருக்கவில்லை.
”நான் 11ம் வகுப்பு முழுவதும் விடுதியில் தங்கி இருந்தேன். அங்கு இருக்கும்போது நான் செல்போன் பயன்படுத்தவில்லை. 12ம் வகுப்பு என் உறவினர் வீட்டில் தங்கிப் படித்தேன். இங்கு வந்த பிறகும் நன்றாகப் படித்தேன். தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 அல்லது 12 மணி வரை நான் படிப்பேன்.”
தேர்வு எழுதியபோதே தெரியும்...
தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்ததும், நான் எழுதிய பதில்களைச் சரிபார்த்தேன். அப்போதே நான் எழுதிய அனைத்துப் பதில்களும் சரியாக இருந்தது. ஆனால், தேசிய அளவில் முதல் மாணவராக வந்தது தேர்வு முடிவுகள் வெளியான நேற்றுதான் எனக்கும் தெரியவந்தது. மகிழ்ச்சியில் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை, என வெற்றிக் களிப்பில் பேச வார்த்தைகளினின்றி பேசுகிறார் பிரபஞ்சன்.
அனைத்து இந்திய அளவில் நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்து கொண்டு, எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.
“கடும் உழைப்பால் நீட் தேர்வில் முழு மதிப்பெண் சாத்தியமாயிற்று. திட்டமிட்டு படித்ததால் 100% மதிப்பெண் கிடைத்தது. தொடர் பயிற்சியும் வெற்றியை சாத்தியமாக்கியது. யாராலும் முடியாது என்பது கிடையாது,” என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பிரபஞ்சன்.
அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே பிரபஞ்சனின் ஆசையாம். சூப்பர் ஸ்பெஷாலிட்டியை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படிக்கும்போது தனக்கு என்ன பாடத்தில் விருப்பம் இருக்கிறதோ அதை வைத்து முடிவு செய்ய இருப்பதாகக் கூறுகிறார் பிரபஞ்சன். தன் எதிர்காலத்தைப் பற்றிய ஒவ்வொரு திட்டத்திலும் அவர் தெளிவாக இருப்பது அவர் பேச்சில் நன்றாகப் புலப்படுகிறது.
தன்னம்பிக்கைதான் தேவை
நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்ச்சி பெற கடின உழைப்பும், பயிற்சியும் மிக மிக முக்கியம். ஒரே முறையில் தேர்வு ஆவதும், சில மாணவர்கள் பல ஆண்டுகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதும் அவரவரைப் பொறுத்தது.
”நீட் தேர்வு மிகவும் கடினமானது என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் முதலில் வெளிவர வேண்டும். அந்த மனநிலை வந்தால்தான் படிக்க முடியும். படிப்பதெல்லாம் அதற்கு பிறகுதான். எளிதானது என்று நம்மால் முடியும் என்றும் நம்ப வேண்டும். அதற்கு பிறகுதான் எல்லாமே. நீட் தேர்வு அந்த அளவுக்கு கடினமானது எல்லாம் இல்லை. புரிந்து படித்தாலே போதும்,” என தன் வெற்றிக்கான வழிமுறையைப் பற்றிக் கூறுகிறார் பிரபஞ்சன்.
பொழுதுபோக்கிற்கும் குறைவில்லை
டாக்டராக வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும், பொழுதுபோக்கிற்கும் குறை வைக்கவில்லையாம் பிரபஞ்சன். ஓய்வு நேரங்களில் தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பது, செல்போனில் விளையாடுவது என தன் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விசயங்களைச் செய்துள்ளார்.
“படிப்பும், பொழுதுபோக்கும் சம அளவிலேயே இருந்தது. பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துள்ளேன். கல்கியின் வருணனை எனக்கு மிகவும் பிடிக்கும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற புத்தகங்களையும் படித்திருக்கிறேன்,” என்கிறார் பிரபஞ்சன்.
‘தையல் இயந்திரம் மிதித்த தாயின் கனவு’ - நீட் தேர்வில் பாஸ் ஆகி மருத்துவம் படிக்கப் போகும் அண்ணன் - தங்கை