‘கம்ப்யூட்டர் பெண்கள்’ - புதிய தொடர்: கம்ப்யூட்டர் புரோகிராமர் என்பவர் யார்?
கம்ப்யூட்டர் துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, தொழில்நுட்ப உலகில் முத்திரை பதித்த பெண் சாதனையாளர்களை அறிமுகம் செய்யும் புதிய தொடர்.
ஒரு சின்ன புதிருடன் துவங்கலாம்...
கம்ப்யூட்டர் புரோகிராமர் என்றதும் உங்கள் மனதில் தோன்றும் சித்திரம் என்ன?
உங்களில் பெரும்பாலானோருக்கு, இளம் வயது பில்கேட்ஸ் அல்லது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவரின் உருவம் மனக்கண்ணில் தோன்றியிருக்கலாம். அல்லது மார்க் ஜக்கர்பர்க் போன்ற ஜீன்ஸ் – டி.ஷர்ட் அணிந்த இளைஞரின் உருவம் இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியிருக்கலாம்.
இப்போது, இன்னொரு துணைக்கேள்வி?
கம்ப்யூட்டர் புரோகிராமர் என்றதும் ஏன் இளைஞர் ஒருவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறது. ஒரு கம்ப்யூர்ட்டர் புரோகிராமராக ஒரு இளம் பெண்ணை ஏன் நாம் நினைத்து பார்ப்பதில்லை.
இதே போல, தொழில்நுட்ப அறிவுஜீவிகளை குறிக்கும் ’கீக்’ ’Geek' எனும் வார்த்தையை கேட்டதும் நம் மனதில், மூக்குக் கண்ணாடி அணிந்த ஜீன்ஸ் இளைஞர் ஒருவரின் தோற்றமே நம் மனதில் தோன்றுவது ஏன்? கீக் என சொல்லத்தக்கவர்கள் பெண் பாலில் இல்லையா என்ன?
கம்ப்யூட்டர், கோடிங் என்று வந்தாலே ஆண்கள் தொடர்புடையதாக இருக்க வேண்டும் எனும் வகையில் பொதுமக்கள் மத்தியில் பதிந்திருக்கும் எண்ணமே இவற்றுக்குக் காரணமாகிறது.
கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் என்றாலும் சரி, கோடிங் புலிகள் என்றாலும் சரி, அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறோம். கம்ப்யூட்டர் துறையிலும், மென்பொருள் துறையிலும் பெண்கள் இருக்கின்றனர் என்றாலும், அவர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
ஆண் புரோகிமார்களுக்கும், பெண் புரோகிராமர்களுக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. அமெரிக்காவில் புரோகிராமர்களில் 20 சதவிதத்தினரே பெண்கள் என ஒரு புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் இது இன்னும் கூட குறைவாக இருக்கலாம்.
பெருமளவில் பெண்கள் புரோகிராமிங் பக்கம் வராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நிச்சயம் ’தகுதி’ அவற்றில் ஒன்றல்ல. ஆண்கள் போலவே பெண்களுக்கும் புரோகிராமிங் புலியாக விளங்கும் ஆற்றல் இருக்கிறது. எனினும், பல பெண்கள் புரோகிராமிங்கில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு சமூகக் காரணங்களே தடையாக இருக்கின்றன.
புரோகிராமிங் என்றில்லை, பொதுவாகவே அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை பெண்கள் வேப்பங்காயாக நினைத்து ஒதுங்குவதாகக் கருதப்படுகிறது. அல்லது அவ்வாறு விலகி நிற்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
சமூக தடைகளை மீறி புரோகிராமிங் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் துறையில் நுழையும் பெண்களும் கூட, பணியிடத்தில் தலைக்கு மேல் இருக்கும் கண்ணாடி கூரையை இடித்துத் தள்ள போராட வேண்டியிருக்கிறது. ஆண் புரோகிராமர்களுக்கு இணையான ஊதியமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை, பதவி உயர்வும் அத்தனை எளிதாக கைகூடுவதில்லை.
அன்றாட வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் கம்ப்யூட்டர் இரண்டற கலந்திருக்கும் 21ம் நூற்றாண்டில் இத்தகைய பாலின பாகுபாடு தொடர்வது நியாயம் இல்லை என்பதோடு, நம் எதிர்காலத்திற்கும் தீங்கானது. புரோகிராமர்கள் என்பவர்கள் அடிப்படையில் பிரச்சனைகளுக்கு கம்ப்யூட்டர் கொண்டு தீர்வு காண்பவர்கள் என புரிந்து கொண்டோம் என்றால், நிச்சயம் இந்த தீர்வு காண்பதில் பெண்களில் பங்களிப்பும், பிரதிநித்துவமும் அதிகமாக இருக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டே, கோடிங் துறையில் பெண்கள் அதிக அளவில் நுழைவதை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகள் இயங்கி வருகின்றன. உதாரணம் அமெரிக்காவில், ’கேர்ள்ஸ் ஹூ கோடு’ (https://girlswhocode.com), கோடிங் கேர்ள்ஸ் (coding-girls.com).
இந்த பாலின சமத்துவத்தோடு, நிற பேதமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பின பெண்களை கோடிங் துறையில் ஊக்குவிக்கும் பிளாக் கேர்ள்ஸ் கோடு (https://www.blackgirlscode.com) போன்ற அமைப்புகளும் இருக்கின்றன.
கேர்ள்ஸ் ஹூ கோடு அமைப்பு இந்தியாவிலும் செயல்பட்டு வருவதோடு, இந்தியன் கேர்ள்ஸ் கோடு (Indian Girls Code) போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. இன்னொரு பக்கம், பெண்கள் கோடிங் ஆர்வம் கொண்டால் மட்டும் போதாது, ஸ்டெம் (STEM) என ஆங்கிலத்தில் சுருக்கமாக சொலப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு துறைகளிலும் பெண்கள் ஆர்வம் காட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. சிறுவயதிலேயே இந்த ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஸ்டெம் ஆதாரவாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.
இதே போலவே ஸ்டார்ட் அப் துறையிலும் அதிக பெண் நிறுவனர்கள் தேவை, முதலீட்டாளர்களிலும் அதிகப் பெண்கள் தேவை எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
பொதுவாகவே சமூகத்தில் எல்லா துறைகளிலும் பாலின பாகுபாடு இருக்கிறது என்றாலும், புரோகிராமிங் துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்கள் முக்கிய பங்காற்றி வந்திருக்கின்றனர் என்பது தான் இதில் முரண்நகை.
ஆம், கம்ப்யூட்டர் வளர்ச்சியிலும் சரி, புரோகிராமிங்கிலும் சரி, பெண்களின் பங்களிப்பு கணிசமாகவே இருந்திருக்கிறது.
இவ்வளவு ஏன், உலகின் முதல் புரோகிராமரே ஒரு பெண் எனும் போது இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. அது மட்டும் அல்ல, மென்பொருள் பொறியியல் எனும் வார்த்தையை முதலில் உருவாக்கியவரும் ஒரு பெண் புரோகிராமர் தான். முதல் புரோகிராமிங் மொழியை உருவாக்கியவரும் ஒரு பெண் தான். இரண்டாம் உலக போரின் போது கம்ப்யூட்டர் உதவியோடு என்கிரிப்ஷன் பூட்டை உடைக்க உதவியவரும் ஒரு பெண் தான்.
இத்தகைய சாதனைப் பெண்களை அறிமுகம் செய்வது தான் இந்த தொடரின் நோக்கம்.
கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி தொழில்நுட்ப வரலாற்றில் மைல்கற்களாக விளங்கும் கம்ப்யூட்டர் பெண்கள் பற்றி வரும் வாரங்களில் தெரிந்து கொள்வோம், வாருங்கள்!