அப்பா உடன் பக்கோடா வியாபாரம், நோ கோச்சிங் கிளாஸ்; முதல் முயற்சியிலே ‘GATE’ தேர்வில் வெற்றி!

ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான தகுதி தேர்வான கேட் தேர்வில் நல்ல ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றபின், ‘பக்கோடா வியாபாரி’- ஆக வேண்டும் என்று கனவு காண்பீர்களா?!
2 CLAPS
0

பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான தகுதித் தேர்வான ‘GATE’ தேர்வில் முதல் முயற்சியிலே வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதிலும் கோச்சிங் சென்டருக்கே செல்லாமல் தேர்ச்சி பெறுவது என்பது பாராட்டுதலுக்குரியது. அப்படி பாராட்டப்படவேண்டியவர் மட்டுமல்ல சாகர் ஷா, இன்ஸ்பையரிங் மனிதரும் கூட.

ஏனெனில் சாகர், அவருடைய அப்பா நடத்தி வரும் டீ கடையில் பக்கோடா வியாபாரம் செய்து கொண்டே, கோச்சிங் சென்டர்களுக்கு செல்லாமலே கேட் தேர்வை எழுதிய முதல் முயற்சியிலே வெற்றியடைந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

பட உதவி: news18

உத்ரகாண்ட் மாநிலம் சமோலியை அடுத்த பிபல்கோட்டி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் சாகர் ஷா. ஒரு எளிய கிராமத்தை சேர்ந்த மிடில் கிளாஸ் பய்யன் என்றாலும் சாகரின் கனவுகள் எப்போதும் பெரிதாகவே இருந்து வந்தன. சொந்த ஊரிலே அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சமோலியில் உள்ள இன்ஜீனியரிங் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

பட்டப்படிப்பு முடித்த கையோடு, வேலையினை தேடி வெளியூருக்கு செல்லாமல் மேற்படிப்பு படிக்க திட்டமிட்டார். அதற்காக கேட் தேர்வை சந்திக்கவும் அவரை ஆயுத்தப்படுத்தினார். அதே சமயம், கிராமத்தின் முக்கியமான சந்தை பகுதியில் அவருடைய அப்பா நடத்தி வரும் டீ மற்றும் ஸ்நாக்ஸ் கடைக்கு சென்று உதவியுள்ளார். 

ஷாவின் பக்கோடா கடை பத்ரிநாத் மற்றும் ஹேம்குண்ட்டிற்கு வருகை தரும் உள்ளூர்வாசிகள் மற்றும் யாத்ரீகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற கடை. புனித யாத்திரை காலங்களில் எல்லாம், பொறித்தெடுத்து, அலமாரியில் அடுக்கப்படும் பக்கோடா பாக்கெட்கள் பரபரவென விற்று, பிசினஸ் பிச்சுக்குமாம்.

அச்சமயங்களில், சாகர் ஷா பக்கோடா பொறிப்பது மட்டுமின்றி, டீ ஆற்றுவது, பாத்திரங்களை கழுவுவது என்று கடையில் எந்த வேலையினையும் செய்து அவருடைய தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். அதே நேரம், பயிற்சி மைய வசதிகளற்ற பிபல்கோட்டி கிராமத்தில் வசித்த அவர், வீட்டிலேயே கேட் தேர்வுக்கு படித்துள்ளார்.

“என்னை படிக்கவைக்க செலவிடுவது என் குடும்பத்துக்கு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொண்டேன். இன்ஜீனியரிங் படித்து முடித்த உடனே கேட் தேர்வை எதிர்கொள்வதை சவாலாக எடுத்துக்கொண்டு, முழுமூச்சாய் பயிற்சி எடுத்து, பாஸ் ஆகினேன்,” என்று நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சாகர் ஷா.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்கொண்ட கேட் தேர்வில் சாகர் 8321வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். எந்தவொரு நல்ல தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அட்மிஷன் பெற இத்தரத்தில் தேர்ச்சி பெற்றது போதுமானதே. இருப்பினும், எம்.டெக் படிப்பில் சேருவது பற்றி அவர் இன்னும் முடிவெடிக்கவில்லை என்கிறார்.

பட உதவி:www.moneycontrol.com

“எம்.டெக் படிப்பது என்பது இன்னும் இரண்டு வருடங்களை வீணாக்குவதாகும், நான் அதைச் செய்ய விரும்பவில்லை, அதற்கு பதிலாக ஒரு வேலையை தேடிக்கொள்வதிலும், குடும்ப வியாபாரத்தை ஆதரிப்பதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிப்பதிலும் தான் ஆர்வமாக உள்ளேன். பக்கோடா கடையை நடத்துவதும் சவாலானதே. இந்த காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் சமையல்காரர்களைப் பிடிப்பது அவ்வளவு கடினமானது. அதனால் என் தந்தை, மாமாவுக்கு துணையாக கடையை மேம்படுத்த விரும்புகிறேன்,” என்றுள்ளார்.

இந்த இளம் சாதனையாளர் இறுதியாக அவரைப் போன்ற பல பக்கோடா விற்பனையாளர்களுக்கு உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தன்னைப்போல் தன் ஊரில் பல இளைஞர்கள் அறிவாற்றலோடு இருப்பதாகவும் அவர்களுக்கு தேவை சுயநம்பிக்கை மட்டும் கடின உழைப்பு மட்டுமே என்கிறார் சாகர்.

தகவல் உதவி : www.news18.com & www.moneycontrol.com | கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ

Latest

Updates from around the world