$210 மில்லியன் நிதி திரட்டல்: யூனிகார்ன் நிறுவனம் ஆன NoBroker.com

நிறுவனத்தின் மதிப்பீடு 1 பில்லியன் டாலரை தாண்டியது!
0 CLAPS
0

ப்ராப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான NoBroker.com 210 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக கூறியிருக்கிறது. இதன்மூலமாக அதன் மதிப்பீடு 1 பில்லியன் டாலர் என்பதை தாண்டி இருப்பதோடு யூனிகார்ன் மதிப்புக்கொண்ட நிறுவனங்களுடன் இணையவிருக்கிறது.

சமீபத்திய நிதிச் சுற்று மூலமாக இந்த நிதியை திரட்டியிருக்கிறது. நிதிச் சுற்றுக்கு ஜெனரல் அட்லாண்டிக், டைகர் குளோபல் மற்றும் மூர் ஸ்ட்ராடஜிக் வென்ச்சர்ஸ் போன்றவை தலைமை தாங்கின.

இந்த புதிய உச்சத்தால் இந்தியாவின் முதல் ப்ராப்டெக் யூனிகார்னாக மாறியுள்ள NoBroker.com, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் சமூக பயன்பாடு மற்றும் சந்தையான NoBrokerHood-ஐ 10,000 சமூங்கங்களில் இருந்து ஒரு லட்சம் சமூகங்களாக வளர்ப்பதற்காக அந்த நிதியை பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்; வீடு மற்றும் நிதி சேவைகளில் முதலீடு; மறுவிற்பனை மற்றும் முதன்மை விற்பனை போன்றவற்றில் முதலீடுகளை அதிகரிக்கவும் நிதி பயன்படுத்த இருக்கிறது.

NoBroker நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் குமார் அகர்வால், யுவர்ஸ்டோரியிடனான உரையாடலின் போது,

“டே ஜீரோவில் இருந்து எங்கள் கவனம் ஒரு வலுவான வருவாய் மாதிரியை (revenue model) உருவாக்கியது. நாங்கள் முழுவதுமாக இதில் இறங்கும் முன்பே எங்களிடம் ஒரு வருவாய் மாதிரி இருந்தது, அதற்காக வாடிக்கையாளர்கள் தற்போது எங்களுக்கு வெகுமதி அளித்துள்ளனர்.”

பிற ப்ராப்டெக் முயற்சிகளைப் போலவே எங்கள் நிறுவனமும் கடந்த ஆண்டு லாக்டவுனின் போது வணிகத்தில் சரிவை கண்டது. ஆனால், இப்போது தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது என்பதால் சரிவில் இருந்து மீள்கிறோம். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், வாடகை தேவை பெருமளவில் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் அதிகரித்துள்ளது.

”எங்களைப் பொறுத்தவரை, ஒரு வாடிக்கையாளருக்கான முழு பயணத்தையும் எளிதாக்குவது முக்கியம். குறிப்பாக, வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது, நம்பகமான மற்றும் மலிவு விலையில் பொருட்களை பேக் செய்பவர்களை கண்டுபிடிப்பது, வாடகை செலுத்துவது வரை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை செயல்படுத்தி வருகிறோம்" என்று பேசியுள்ளார்.

NoBroker.com போர்ட்டலில் கிட்டத்தட்ட 75 லட்சம் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1.6 கோடிக்கும் அதிகமான மக்கள் அந்நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

NoBroker.com கடந்த 2013ம் ஆண்டு அகில் குப்தா, அமித் மற்றும் சௌரப் என்பவர்களால் நிறுவப்பட்டது. இது பயனர்கள் வாடகை வீடுகளை புரோக்கிங் செலவு இல்லாத வீடுகளைத் தேடுவது மட்டுமல்லாமல், வீட்டுக் கடன், வீட்டை சுத்தம் செய்யும் சேவை போன்ற பல்வேறு சேவைகளை பெறுகின்றனர்.

NoBroker நிறுவனம் தொடங்கும் யோசனை, ஒரு சிரமத்துக்கு இடையில் வந்தது. இந்த நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான சவுரப் கர்க்கின் கசப்பான அனுபவத்திலிருந்து உருவானது எனலாம். மும்பையில் ஒரு வீட்டைத் தேடும் போது அவர் சந்தித்த அனுபவங்களால் இந்த யோசனை வரவே, விளம்பரங்கள் மற்றும் வாடகை தளங்களில் தரகு பணம் செலுத்தாமல் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க இந்த நிறுவனத்தை தொடங்கினர். அப்படி ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கி இதுவரை 361 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதுடன் தற்போது ஆறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

”பில்லியன் டாலர் மதிப்பீடு நிச்சயமாக எங்களுக்கு ஒரு மைல்கல். மேலும் நாங்கள் செய்துவரும் பணி நம்பகமானது என்பதை இது சான்றளிக்கிறது. இருப்பினும் இது எங்களுக்கு ஒரு தொடக்கம் தான்," என்று அகில் யுவர்ஸ்டோரியிடம் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world