நுகர்வோரின் ரியல் எஸ்டேட் தேவைகளின் இடமாக உருவாக விரும்பும் NoBroker!

வாடிக்கையாளர்களின் பிரச்சனை முனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் வழிவகுத்தது என இணைய ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான நோபுரோக்கர் நிறுவனர்கள் டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.
0 CLAPS
0

'நோபுரோக்கர்' (NoBroker) நிறுவனத்திற்கான எண்ணம், நிறுவனர் சவுரப் கார்க் மும்பையில் வீடு தேடிய போது கிடைத்த மோசமான அனுபவத்தால் உண்டானது. வரி விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களுக்கு அதிகக் கட்டணம் கொடுக்காமல் வீடு தேட முடியாமல் திணறியதால், இந்த இந்திய பிரச்சனைக்கு உரிய தீர்வு தேவை என சவுரப் நினைத்தார்.

2014ல் நிறுவப்பட்டது முதல் இந்நிறுவனம் தனது மேடை, உரிமையாளர்கள் எனும் போர்வையில் புரோக்கர்கள் வீடுகளை பதிவிட முடியாததை உறுதி செய்துள்ளதோடு, ரியல் எஸ்டேட் மற்றும் வாடகை சார்ந்த துணை சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்காலத்தில், வாடிக்கையாளர்களின் அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த தீர்வுகளுக்கான இடமாக இருக்க வேண்டும் என நிறுவனம் விரும்புவதாக , யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சியில் இதன் நிறுவனர்கள், யுவர்ஸ்டோரி சி.இ.ஓ ஷரத்தா சர்மாவிடம் பேசும் போது தெரிவித்தனர்.

“புரோக்கர்களை எதிர்கொள்வது அனைத்து தரப்பினருக்குமான பிரச்சனையாக இருக்கிறது. ஒரு சிறு சேவைக்காக நீங்கள் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது,” என்கிறார் இணை நிறுவனரான அகில் குப்தா.

புக்மைஷோ மற்றும் மேக்மைடிரிப் போன்ற நிறுவனங்கள் திரைப்பட டிக்கெட் பதிவு மற்றும் பயண பதிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இதே போன்ற சேவை ரியல் எஸ்டேட் துறையிலும் ஏன் இருக்கக் கூடாது எனும் கேள்வியோடு ’நோபுரோக்கர்’ சேவை உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், நிறுவனர்கள் முதலீட்டாளர்களின் தயக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலீட்டாளர்கள் அமெரிக்கா அல்லது சீனாவில் வெற்றி பெற்ற வழிகளின் மாதிரியை எதிர்பார்த்தனர், என்கிறார் இன்னொரு இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அமீத் குமார் அகர்வால்.

நிறுவனம் இதுவரை ஜெனரல் அட்லாண்டிக், டைகர் குளோபல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 150 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

“உலகில் எந்த நாட்டிலும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைக்காக முன்னதாகவே பணம் செலுத்துவதில்லை. எனினும் வீடு உரிமையாளர்களுக்கு எங்கள் சேவை பிடித்திருந்தால் கட்டணம் செலுத்துவார்கள் என்று நினைத்தோம்,” என்கிறார் அமீத்.

வாடிக்கையாளர்களுக்கான பிரச்சனை முனைக்கு தீர்வு கண்டது நிறுவனம் வளர் வழி செய்தது.

வர்த்தக விரிவாக்கம்

வாடகை பொருத்தம் சேவையாக துவங்கிய நிலையில், வாடிக்கையாளர்கள் வாடகை ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் சேவையை எதிர்பார்த்தனர். இவை பெரும்பாலும் புரோக்கர்களால் நிறைவேற்றப்படுபவை. இந்த சேவையோடு பேக்கர்கள்- மூவர்கள் உள்ளிட்ட வசதியையும் நிறுவனம் அளிக்கத்துவங்கியது.

“வாடகையில் துவங்கி, வாங்கி விற்பதற்கு மற்றும் குடியிருப்பில் இருந்து வர்த்தக ரியல் எஸ்டேட் ஆகியவற்றை அளித்தோம். வாடகை தவிர, போக்குவரத்து, பெயின்ட் சேவை போன்றவற்றையும் அளித்தோம். பின்னர், வீட்டுக்கடனையும் சேர்த்தோம். மற்ற சேவைகளையும் வழங்கி வருகிறோம்,” என்கிறார் அமீத்.

கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்த வழி செய்ய வங்கிகளுடன் நிறுவனம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்று கூறுகிறார் அகில்.

வாடிக்கையாளர்கள் சார்பில் குறிப்பிட்ட இடத்தில் வாடகையை கணிக்க தொழில்நுட்பத்தை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம்

அலுவகத்தில் இருந்து சில நிமிடங்களில் பயணிப்பதற்கு ஏற்ற வீடுகளை இந்த தளம் பரிந்துரைக்கிறது. இது பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் பயனுள்ளதாக அமைகிறது.

“வாடிக்கையாளர் சார்ந்த சேவை என்பதால், இந்த மேடையில் உருவாகும் தரவுகள் செயற்கை நுண்ணறிவு கொண்டு அலசப்படுகிறது. புரோக்கர்கள் செய்வதை எல்லாம் நாங்கள் அல்கோரிதம் கொண்டு செய்கிறோம்,” என்கிறார் சவுரப் கார்க்.

தொழில்நுட்பம் புரோக்கர்களின் சார்பு மனநிலையில் இருந்தும் விடுவிக்கிறது என்கிறார் அமீத்.

”வாடிக்கையாளருக்கு ஒரு வீட்டில் ஆர்வம் இருப்பதை உணரும் போது புரோக்கர்கள் பற்றாக்குறை நிலையை ஏற்படுத்தி அந்த வீடு இனியும் கிடைக்காது என்கின்றனர். எங்கள் மேடை ஒரு வீட்டை இதுவரை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்று காண்பிக்கிறது. மேலும், அல்கோரிதம் புதிய வீடுகளை முன்னிறுத்தி ஏற்கனவே பார்க்கப்பட்ட வீடுகளை பின்னுகுத் தள்ளுகிறது,” என்கிறார் அவர்.

குறிப்பிட்ட பகுதிகளின் வாடகை கணிப்பை இந்த மேடையில் ரெண்டோமீட்டர் வழங்குகிறது.

“வாடிக்கையாளர்களிடம் வீட்டிற்கான பட்டியல் விலையை நாங்கள் சொல்வது இல்லை. ரெண்டோமீட்டர் கணிப்பை விட வாடகை அதிகமாக இருந்தால் அது பற்றி வாடிக்கையாளர்களுக்கு இ-மெயிலில் தகவல் அளிக்கிறோம்,” என்கிறார் சவுரப்.

வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்கான ரியல் எஸ்டேட் மேடையாக நிறுவனம் விளங்க விரும்புகிறது. வரி விளம்பர நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் இந்த சேவையை துவக்கினாலும், புரோக்கர்கள் இல்லாத சேவை எனும் அடிப்படையைக் கொண்டு நிறுவனம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. நிறுவனத்தை உருவாக்கியதில் பொறுமை முக்கிய அம்சமாக இருக்கிறது என்கிறார் அகில்.

ஆங்கிலத்தில்: பாயல் கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்