6 மாதக் குழந்தை முதல் 60 வயது முதியோருக்கு அன்லிமிடெட் ஆரோக்கியம்: இது ஒரு அம்மாவின் வாக்குறுதி!

கொள்ளு நூடுல்ஸ், பீட்ரூட் ரோஸ்மில்க் என ஆரோக்கிய உணவுத் தயாரிப்பில் ஆண்டுக்கு 50 லட்சம் ஈன்று ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் மாம்ப்ரூனர் ஜென்சிலின் வினோத்.
2.1k CLAPS
0

ஹெல்த்தி + டூ மினிட்ஸ் குக்கிங் என்ற ஃபார்மூலாவுடைய ரெசிபிக்கான தேடலில் உள்ளீர்களா? கலர்கலராய் காற்றடைத்த பதப்படுத்திய ஸ்நாக்ஸ் அடிக்‌ஷனில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்குறீர்களா? உங்களுக்கான எளிய தீர்வு ’ஃபார்ம் டூ ஹோம் - ஒரு அம்மாவின் வாக்குறுதி’ (Farm To Home – A Mom’s Promise).

6 மாதக் குழந்தை முதல் 60 வயதுடையோர் வரை அனைத்து வயதினருக்குமான அன்லிமிடெட் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆகாரத்தை வழங்குவது ’ஃபார்ம் டூ ஹோம்’ன் இலக்கு.

Farm To Home – A Mom’s Promise நிறுவனர் ஜென்சிலின் வினோத்

ஜென்சிலின், நாகர்கோவிலை பூர்வீகமாய் கொண்டவர். பதப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள் மீது வெறுப்பு உணர்வுடையவர். அதில் சேர்க்கப்படும் ராசாயனங்களும், சுவையூட்டிகளையும் தவிர்ப்பதற்காக முடிந்தளவு தேவையான சமையல் பொருள்களை வீட்டிலே தயாரித்து வந்துள்ளார். அதில், அடுப்பாங்கரையின் அத்தியாவசியங்களான மஞ்சள் தூள், மல்லி தூள், மி.தூள், ஜாம், சாஸ் என சகலமும் அடங்கும்.

இவர் இன்ஜீனியரிங் பட்டம் முடித்தவர், அண்ணா யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர். பட்டப்படிப்பை முடிந்தவுடனே கேம்பசில் தேர்வாகி ஐடி நிறுவனத்தில் பணிக்குச் சென்றாலும், ஜென்சிலின் விரும்பாத பணி அது. கார்பரேட் சூழலை விரும்பாத அவரது வாழ்க்கையில் திருமணம், குழந்தை என அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடங்க குழந்தைகளது நலன் கருதியும் பணியைத் துறந்துள்ளார்.

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் பிசியாக இருந்த ஜென்சிலினுக்கு 24மணி நேரமும் குழந்தைகளது அசைவுகளால் நிரம்பியது. பிள்ளைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்ல, ஃப்ரீ டைம் அதிகமாகியது. அவ்வெற்றிடங்களை எல்லாம் சமையல்கலையால் நிரப்பியுள்ளார்.

குழந்தைகளுக்கான மார்னிங் டிரிங் தொடங்கி, ஹெல்தி ஸ்நாக்ஸ் வரை சகலத்தையும் செய்து அசத்தியுள்ளார். அவரது கைமணம் சொந்தபந்தம் தாண்டி அக்கம் பக்கம் வரை மணக்க, விருப்பப்படுபவர்களுக்கு சிலவற்றை செய்து கொடுத்தார். அங்கு எழுந்ததே, “ஃபார்ம் டூ ஹோம் - ஒரு அம்மாவின் வாக்குறுதிக்கான” பொறி.

“எனக்கு குக்கிங்னா பயங்கர விருப்பம். கிட்டத்தட்ட நான் 5வது படிக்கும் போதே சமைக்க தொடங்கிவிட்டேன். இன்னிக்கு மாறி, ஸ்மார்ட்ன்போன் வசதி, யூடியப்லாம் இல்லாத காலத்திலே நிறைய புதுசா புதுசா நானா சமையல் பொருள்களை மாத்தி மாத்தி புது ரெசிப்பி செய்வேன். அதில எல்லாமே சூப்பரா வந்திரும்.

குழந்தைகளுக்கு ஹெல்த் டிரிங்ஸ், ஜாம், சாஸ் கூட நான் வீட்டிலயே செய்து கொள்வேன். ப்ரெண்ட், சொந்தக்காரங்களுக்கும் கொடுப்பேன். எல்லாருமே ரொம்ப நல்லருக்குனு சொல்லுவாங்க. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுறாங்கனு சொல்லும் போது, மத்தவங்களுக்கு பயன்படக் கூடியதா ஒரு விஷயம் இருக்கும் போது நாம ஏன் அத பண்ணக்கூடாதுனு ஒரு எண்ணத்தில் தான் துவங்கினேன். மற்றபடி, பெரிய நிறுவனமாக்கி, பல கிளைகள் ஆரம்பிக்கணும் என்ற எண்ணமேயில்லை.

“என் வீட்டு கிச்சனில் 2018 ஆம் ஆண்டு வெறும் 2,500ரூபாய் முதலீட்டில் தொடங்கியது தான் எங்கள் நிறுவனம். இன்று அனைத்து ஆரோக்கியமற்ற உணவிற்கும் மாற்றுவழி கண்டறிந்து 180 ஆரோக்கிய உணவுத் தயாரிப்புகளுடன் மாதம் ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டுறார் ஜென்சிலின்.”

தொடக்கத்தில் ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் குரூப் மூலம் அவர்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளார். முதல் மாதத்திலே எனர்ஜி அளிக்கும் வகையில், ரூ.8,000 சம்பாதித்துள்ளார். அதுவே மறுமுதலீடாகியது. இப்படியாக, மூலமுதலீடான ரூ2,500 -ஐ பல மடங்காகப் பெருக்கி கடந்தாண்டில் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டும் அளவிற்கு அவரது நிறுவனத்தை வளர்த்த்துள்ளார் .

குறுவணிகம் வெகுவிரைவிலே மக்களால் அங்கீகரிக்கப்பட்டதை அவரது வருவாயும், தயாரிப்புகளின் எண்ணிக்கையும் காட்டுகிறது. ஆனால், ஒவ்வொரு தயாரிப்புக்கு பிறகும் பல சொதப்பல்களும், முயற்சிகளும்.

“ஒவ்வொரு கஸ்டமரும் அவங்களே இந்தமாதிரி செய்துதாங்கனு கேட்பதுண்டு. அப்படி, ஒருத்தங்க கடையில் விற்கிற ரோஸ்மில்க் சிரப்பில், ஃபுட் கலர் சேர்த்திருக்காங்க, குழந்தைகளுக்கு கொடுக்க பயமா இருக்குனு சொல்லி கேட்டாங்க. நானும் அதுக்கொரு மாற்று கண்டுபிடிக்கனும்னு முயற்சியில் பல தடவை டிரை பண்ணேன். கிட்டத்தட்ட 2 மாசமா பெர்பெக்ட் ரெசிபிக்காக முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். 22 முறை தோல்விக்கு அப்புறமா பீட்ரூட்டை சாறை பிங்க் நிறத்திற்கு பயன்படுத்தித் தயாரித்தேன்.

அது எங்களது தயாரிப்பிலே டாப் ஹிட்டடித்தது.

போன சம்மரில் அறிமுகப்படுத்தினோம். இப்பவரைக்கும் 6000-க்கும் அதிகமான பாட்டிகள் விற்பனையாகியுள்ளது. இப்போ மாதத்திற்கு 500 பாட்டில் ரோஸ் பீட் மில்க் விற்பனையாகிறது. இப்படி எங்களிடமுள்ள 180 தயாரிப்புகளுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது,” என்றார் பொறுமையாக ஜென்சிலின்.

ஒரு ஆண்டுக்கு முன் வெறும் 10 ப்ராடக்ட்சுடன் துவங்கப்பட்ட ‘ஃபார்ம் டூ ஹோம்’-ல் இன்று, குழந்தைகளுக்கான கஞ்சி மாவில் மட்டும் 60 வெரைட்டிகளும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்பாலூட்டும் பெண்களுக்காக ஸ்பெஷலாக ஹெல்த் டிரிங், சத்துமாவு, 4 வகையான நூடுல்ஸ், திணை அடிப்படையிலான தின்பண்டங்கள், 6 வகை குக்கீஸ், லட்டு, பழ ஜாம், ஆர்கானிக் ரோஜா இதழ்கள் மற்றும் பீட்ரூட் சாறால் தயாரித்த ரோஸ் மில்க் சிரப் என சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் அம்மாக்கள், குழந்தைகள் என அனைவருக்குமான சத்தான ஆகாரத்தை வழங்கிவருகிறது ‘ஃபார்ம் டூ ஹோம்’.

அனைத்து தயாரிப்புகளும், எந்தவொரு ஃபுட் கலர், பதப்படுத்திகள், சுவையூட்டிகள், மைதா, வெள்ளை சர்க்கரை பயன்பாடின்றி, முழுக்க முழுக்க ஹோம்மேட்.

ஸ்மார்ட்போன் யுகத்தில் மார்னிங் பிரேக்பாஸ்ட் 2 இட்லி, கொஞ்சம் பொங்கல் என்ற கணக்கு அப்டேட்டாகி, 20 கிராம் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட 1 சப்பாத்தியில் 79 கலோரிகள் உள்ளன என்பது வரை கணக்கிட்டு மக்கள் உண்ணத் தொடங்கிவிட்டனர்.

ஆர்கானிக் உணவுகள் பற்றிய போதுமான விழிப்புணர்வு மக்களிடம் உள்ளபோதிலும், குழந்தைகளுக்கான உணவு என்பதால் ஹோம்மெட் தயாரிப்புகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது பெரும் சவாலே. ஆனால், ஜென்சிலின் அதை பொறுமையாகக் கையாண்டுள்ளார்.

நள்ளிரவு 2 மணிக்கு வாடிக்கையாளர் தயாரிப்பின் தரம் குறித்து கேள்வி எழுப்பினாலும், சலிக்காமல் அவர்களுக்கு பதிலளித்துள்ளார். கஸ்டமர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டும் ஒரு நாளில் 10 மணி நேரத்தை செலவழித்துள்ளார். தனிஒருவராய் வேலைசெய்ததில் நாளின் மற்றொரு 10 மணி நேரங்கள், பேக்கிங்கும், தயாரிப்புக்கும் செலவுவாகிட பல நாட்கள் தூக்கமற்ற இரவுகளாய் கடந்துள்ளன என்று கூறிய ஜென்சிலின், தொழில்முனைவு பயணத்தில் எதிர்கொண்ட கரடுமுரடான பாதைகளை பற்றியும் பகிரத் தொடங்கினார்.

“தொடக்க நாட்களில் தூக்கமே இருக்காது. ஆனா, என் கணவர் எனக்கு முழு சப்போர்ட்டா இருந்தாங்க. எங்களுடைய தயாரிப்பான ‘வாழைக்காய் பொடி’ குழந்தைகள் அதிகம் விரும்பிக் குடிக்கும் ஹெல்த் டிரிங் பவுடர்.

பனானா பவுடரிலே 5 டூ 6 வெரைட்டி இருக்கு. மாதம் 250 கிலோ வரை பனானா பவுடரிலான ப்ரோடெக்ட்ஸ் விற்பனையாகும். ஆனால், அது தான் அதிக வேலையும் நிறைந்தது. அதிகாலையில 3மணிக்குலாம் எந்திரிச்சு வாழைக்காய் நறுக்கணும். அதுக்கே 2 மணி நேரமாகும். வெயில் வருவதற்கு முன்பே 5 மணிக்குலாம், ஒரொரு வாழைக்காய் பீஸா எடுத்து காய வைக்கணும். காக்கா கொத்திடாம இருக்க வாழைக்காயோட சேர்ந்து நாமளும் வெயிலில் காயணும், என்கிறார் சிரித்துக் கொண்டே.

இந்த மாதிரி ஒவ்வொரு தயாரிப்பையும் செய்யுறது ரொம்ப ப்ரோசஸ் நிறைந்தது தான். அதுபோல இன்னொரு விஷயம் சொல்லணும்னா, கஸ்டமர் ஆர்டர் பண்ணவுடன் அவங்களிடம் பேமண்ட்டை கேட்கவே மாட்டேன். சென்னையில் ஒருத்தங்க 3,500ரூபாயுக்கு பொருள்கள் வாங்கிட்டு, காசு கொடுக்கவேயில்லை. ஆர்டர் பண்ணும்போதே, அக்கா பொருள் அனுப்புங்கக்கா கொடுத்துடுவேன் வீட்டு நிலைமைலாம் சொல்லும்போது நான் அவங்ககிட்ட காசே கேட்கமாட்டேன்.”

கஷ்டங்கள் பல கடந்தாலும், சாப்பாடைக் கண்டால் வெறுக்கும் குழந்தைகள் இப்போது சாப்பிடுகின்றனர் என்று தாய்மார்கள் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளும், குட்டி குழந்தைகள் நன்றி சொல்லி அனுப்பும் குறும்படங்களுமே இன்னும் உத்தேவகமாய் செயல்பட வைக்கின்றது என்கிறார் ஜென்சிலின்.

“கேன்சரால் பாதிக்கப்பட்ட 14 வயசு பையன் கீமோதெரபிக்கு பிறகு, சாப்பிட மாட்டுறான். எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துறான்னு அவங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்க. எங்களோட ப்ரோடெக்ட்சில் சிலவற்றை பரிந்துரைத்தோம். அவனுக்கு எல்லாமே செட்டாகி ஒழுங்கா சாப்பிட, அவங்க ரிட்டர்ன் கிஃப்ட்லாம் அனுப்பி வச்சாங்க. கைநிறைய விருது கொடுத்த மாதிரி இருந்தது,” என்றார் மனமகிழ்வுடன்!

தன் வீட்டு கிச்சனில் அவரது குழந்தைகளுக்காக தொடங்கிய ‘ஃபார்ம் டூ ஹோம்’, நாடு முழுக்க பிரபலமடைந்த பிராண்ட்டாக்க வேண்டும் என்பதோ, சக்சஸ்ஃபுல் தொழிலாக்க வேண்டும் என்பதோ ஜென்சிலினின் இலக்கில்லை. அவர் கொடுக்க நினைத்தது அனைவருக்குமான சத்தான உணவு மட்டுமே. அதனால் தான், முதல்ரக பாதாம், முந்திரிகளை வாங்கி பக்குவமாய் தயாரித்தாலும், 5சதவீதத்திற்கும் குறைவாக லாபவிகிதத்தில் விற்பனை செய்கிறார்.

8,000த்துக்கும் மேலான வாடிக்கையாளர்ளுடன், 5 பெண்களுக்கு வேலை கொடுத்ததுடன் 12 ரீசெல்லர்களை உருவாக்கி, சக்சஸ்ஃபுல் தொழில்முவைராக திகழும் ஜென்சிலின் எப்போதும் அவரது வாடிக்கையாளர்களுக்கு அக்கா, மகள், தங்கையாகவே இருக்கிறார்.

 ஃபேஸ்புக் பக்கம் : Farm To Home - A Mom's Promise