'99.1 சதவீத புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்' - ஓலா எலெக்ட்ரிக் தகவல்
நுகர்வோர் பலர் சமூக ஊடகத்தில் வாகன சேவை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆய்வுக்கும், சர்ச்சைக்கும் உள்ளானது.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து வரப்பெற்ற 10,644 புகார்களில் 99.1 சதவீத புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், இந்த மாத துவக்கத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட நோட்டீசுக்கு தேவையான அனைத்து விளக்கம் மற்றும் தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக், நிறுவனம், அதன் வாகனங்கள், சேவை தொடர்பான நுகர்வோர் அதிருப்தி தொடர்பான கட்டுப்பாடு அமைப்பின் ஆய்வால் அண்மையில் சர்ச்சைக்குள்ளானது.
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை குறை கூறிய நகைச்சுவை நடிகர் குனால் கம்ராவுடன், அதன் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பாவிஷ் அகர்வால், எக்ஸ் தளத்தில் பொது விவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பல வாடிக்கையாளர்கள் நிறுவன சேவை தொடர்பாக இதே போன்ற குறைகளை தெரிவித்தனர்.
இந்த மோதலை அடுத்து, நிறுவன பங்குகள் விலை சரிந்தது. ஆகஸ்ட் 12ம் தேதிக்கு பிறகு மிகவும் குறைந்த நிலையை எட்டியது. இதனால் சந்தை மதிப்பீடு 5 பில்லியன் டாலருக்கும் குறைந்தது. ஆகஸ்ட்டில் இது 8 பில்லியன் டாலராக உச்சத்தில் இருந்தது.
இதனையடுத்து, நுகர்வோர் உரிமை மீறல், தவறான விளம்பரம் மற்றும் முறையில்லாத வர்த்தக செயல்முறைகள் தொடர்பான புகார்கள் குறித்து சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியது.
ஓலா எலெக்ட்ரிக் மீதான நுகர்வோர் புகார்கள் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆய்வு அமைப்பை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
ஓலா எலெக்ட்ரிக் ஃபேம் மற்றும் பிஎம் இ-டிரைவ் திட்டங்களின் சலுகை பெற்றுள்ளது. ஆட்டோமோட்டிவ் ஆய்வு அமைப்பின் சான்றிதழ் மூலம் இது பெறப்பட்டது. BSE– இல் தாக்கல் செய்த அறிக்கையில், வாகனங்கள் புகார் தொடர்பாக கவனிக்க தீவிரமான செயல்முறை இருப்பதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
நிறுவனத்தின் வாகன பயண பகிர்வு சேவையான ஓலா கன்ஸ்யூமரில், பணம் திரும்பி செலுத்தும் வாய்ப்பு, சவாரிகளுக்கான ரசீது உள்ளிட்ட நுகர்வோர் நட்பான செயல்முறைகளை அறிமுகம் செய்யுமாறும் சிசிபிஏ உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, பணம் திரும்ப பெறும் வசதி இல்லாமல், எதிர்கால சவாரிக்கான கூப்பன் சலுகை மட்டுமே அளிக்கப்படுவதை அமைப்பு சுட்டிக்காட்டியது.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்)
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan