ஓலா ஸ்கூட்டர் விற்பனை ஒரு வாரம் தள்ளிவைப்பு- செப் 15 விற்பனை துவங்கும் என அறிவிப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது மின் ஸ்கூட்டர் விற்பனை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வாரம் தாமதமாக செப்டம்பர் 15 ம் தேதி முதல் துவங்கும் என அறிவித்துள்ளது.
0 CLAPS
0

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, ஓலா மின் ஸ்கூட்டர் விற்பனை ஒரு வாரம் தாமதமாக செப்டம்பர் 15 ம் தேதி முதல் துவங்கும் என அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனம், ஓலா எலெக்ட்ரிக் மூலம் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நவீன ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 மின் ஸ்கூட்டர்கள், எஸ்1 மற்றும் புரோ1 ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் நிறுவனம் அறிவித்தது. இந்த மின் ஸ்கூட்டர்கள்,ரூ.99,999 ,ரூ.1,29,999, ஆகிய விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மின் ஸ்கூட்டர்களை செப்டம்பர் 8ம் தேதி முதல் வாங்கலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஓலா நிறுவன தலைவர் மற்றும் குழும சி.இ.ஓ பாவிஷ் அகர்வால், மின் ஸ்கூட்டர் விற்பனை ஒரு வாரம் தள்ளிப்போவதாகவும், செப் 15 முதல் விற்பனை துவங்கும் என்றும் நேற்று இரவு டிவிட்டரில் அறிவித்தார்.

"ஓலா எஸ் 1 ஸ்கூட்டர் விற்பனையை இன்று துவக்குவதில் உறுதியாக இருந்தோம். ஆனால், இணையதளம் விற்பனையை சாத்தியமாக்குவதில் நிறைய தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார். பலரும் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இணையதளம் தரத்தில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துவிட்டோம் என புரிகிறது. இதற்காக மன்னிப்பு கோருகிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Bhavish Aggarwal, Co-founder and CEO, Ola

நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான டிஜிட்டல் முறை வாங்கும் அனுபவத்தை உருவாக்கி இருப்பதாகவும், டிஜிட்டல் கடன் வசதியையும் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இத்தகைய டிஜிட்டல் வாங்கும் அனுபவத்தை முதல் முறையாக அளிக்க விரும்பினோம். ஆனால் இன்று சாத்தியமாகவில்லை. இந்த சரியான அனுபவம் அளிக்க ஒரு வாரம் ஆகும். செப்டம்பர் 15ம் தேதி காலை 8 மணி முதல் விற்பனை துவங்கும்,” என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்திருந்தவர்கள் நிலை மாறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஓலா தனது மின் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை ஜூலை மாதம் அறிவித்திருந்தது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ஆர்டர்கள் குவிந்தன.

ஆகஸ்ட் 15ம் தேதி நிறுவனம், தனது மின் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ததது. இந்த ஸ்கூட்டர்கள் பத்து வண்ணங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஓலா ஸ்கூட்டர் ஆலை முதல் கட்டமாக, பத்து லட்சம் ஆண்டு உற்பத்தி திறன் பெற்றிருக்கும் என்றும், தேவைக்கேற்ப இது 20 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. முழுவதுமாக ஆலை உருவாகும் போது ஆண்டுக்கு ஒரு கோடி வாகன உற்பத்தித் திறன் பெற்றிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.